தூய ஆவியார் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக, நவநாள் பக்திமுயற்சிகள் நடைபெறும் இந்நாள்களில், தூய ஆவியார் நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து, மே 26 ஆம் தேதி செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
“தூய ஆவியார், நம்மை, இரக்கம்நிறைந்த திருஅவை என்ற உதரமாக, அதாவது, அனைவருக்கும் திறந்த இதயத்தைக் கொண்டிருக்கும் ஓர் அன்னையாக மாற்றமடையச் செய்கிறார்” என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.
ஐ.நா. பொதுச்செயலர் திருத்தந்தைக்கு நன்றி
மேலும், உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு, தான் விடுத்திருந்த அழைப்பிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆதரவளித்ததற்கு நன்றி ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
"தற்போது உலகில் நிலவும் புதிய அச்சுறுத்தல்களுக்கு, புதிய முறையில் ஒன்றிப்பு மற்றும் ஒருமைப்பாடு தேவைப்படுகின்றன" என்ற தலைப்பில், வத்திக்கானின் செய்தித்துறைக்கு பேட்டியளித்த கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பு, மற்றும், கோவிட்-19 கொள்ளைநோயின் எதிர்மறை தாக்கங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு, பதிலளித்த கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய், நாம் அனைவரும் விழித்தெழுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார்.
போர் நிறுத்தம் இடம்பெற்றால் மட்டுமே, உலகினர் அனைவரும் இணைந்து, தற்போதைய கொள்ளைநோய்க்கு எதிராகச் செயல்பட முடியும் என்றும், இதற்கு, இதுவரை, 115 அரசுகளும், மாநில அமைப்புகளும், 200க்கும் அதிகமான சமுதாய குழுக்களும், சமயத் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர் என்றும் உரைத்த கூட்டேரஸ் அவர்கள், ஆயுதம் ஏந்திய 16 புரட்சிக்குழுக்கள், வன்முறையை கைவிட்டுவிடுவதாக உறுதியளித்துள்ளன என்று கூறினார்.
தனது உலகளாவிய போர் நிறுத்த அழைப்பிற்கு, இலட்சக்கணக்கான மக்கள், இணையதளம் வழியாக ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதையும் கூட்டேரஸ் பகிர்ந்துகொண்டார்.
கோவிட்-19 கொள்ளைநோய், உலக அளவில், உடல்நலம் சார்ந்த நெருக்கடியை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக, இந்த நெருக்கடி காலத்தில், வெளிநாட்டவர்க்கு எதிரான உணர்வுகளும், சதித்திட்டங்களும், நிலவுகின்றன, சிலநேரங்களில், செய்தியாளர்கள், நலவாழ்வு பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரும் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.