கிறிஸ்தவ முழு ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்தில் நமக்கு உதவியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம் என, மே 25 ஆம் தேதி திங்களன்று, முதல் டுவிட்டர் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Ut Unum Sint திருமடலின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி இந்த முதல் டுவிட்டரை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், நம்மைப்போல் மனிதனாக உருவெடுத்த இயேசு, மரணத்தையும் தாண்டிய ஒரு புது இடத்திற்கு மனித குலத்தை எடுத்துச் சென்று, அவர் இருக்கும் இடத்திலேயே நாமும் இருக்கும் வரத்தை அளித்துள்ளார் என எழுதியுள்ளார்.
மேலும், திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட Laudato Si வாரத்தையொட்டியும், உலக சமூகத்தொடர்பு நாளை முன்னிட்டும், இயேசுவின் விண்ணேற்பு விழா குறித்தும், அன்னை மரியா விழாவை சிறப்பித்த சீனா கத்தோலிக்கர்களுக்குமென மே மாதம் 24 ஆம் தேதி ஞாயிறன்று, ஆறு டுவிட்டர் செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
நம் வாழ்வுமுறைகளையும்,கருத்துக்களையும் குறித்து ஆழமாக சிந்தித்து, நம்மிடையேயும் நம்மைச் சுற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன் குறித்து ஆழமாக தியானித்து, படைப்போடு இணக்க வாழ்வை உருவாக்குவதற்கு நேரம் ஒதுக்குவதை உள்ளடக்குகிறது, ஒன்றிணைந்த சுற்றுச்சூழல், என இஞ்ஞாயிறு, முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் பார்வையிலிருந்து மறக்கப்படாத, இவ்வுலகின் படைப்புகள் அனைத்திற்கும் அவரின் அன்பின் கருவிகளாக நாம் செயல்பட, அன்பின் இறைவன் வழிகாட்டுவாராக என தன் ஆறாவது டுவிட்டரில் வேண்டியுள்ளார்.
கடவுள் தன் பிரசன்னத்தை நம்முடன் எவ்வாறு தொடர்ந்து கொண்டுள்ளார் என்பது குறித்த வரலாற்றை, தலைமுறை தலைமுறையாக எடுத்துரைப்பது வழியாக, இறைவன் குறித்த அறிவு வழங்கப்படுகிறது என தன் இரண்டாவது டுவிட்டரில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணுலகில் இறைவனின் வலப்பக்கம் இருந்தவண்ணம், நம்மிடையேயும் குடிகொண்டிருக்கும் இயேசுவின் பிரசன்னமே, நம் பலம், விடாமுயற்சி, மற்றும், மகிழ்வின் ஆதாரமாக உள்ளது என தன் மூன்றாவது டுவிட்டரில் எழுதியுள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு நாள் டுவிட்டர் செய்திகளை ஒன்பது மொழிகளில் வெளியிடும் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று, சீனாவில் சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியா விழாவையொட்டி, பாரம்பரிய சீன மொழி, மற்றும், எளிதாக்கப்பட்ட சீன மொழி என இரண்டு மொழிகள் உட்பட 11 மொழிகளில் தன் நான்காவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் வாழும் நம் சகோதர சகோதரிகள், விசுவாசத்திலும், உடன்பிறந்த ஒன்றிப்பிலும், மகிழ்வுடன்கூடிய சான்றுபகர்தலிலும், பிறரன்பையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதிலும் சிறந்து செயல்பட, அன்னை மரியாவின் பாதுகாப்பையும் வழிகாட்டுதலையும் வேண்டி அவ்வன்னையிடம் ஒப்படைப்போம், என அதில் கூறியுள்ள திருத்தந்தை, அமைதிக்காகவும், நாடுகளிடையே உரையாடல்கள் இடம்பெறவும் பணியாற்றுவோர், ஏழைகளுக்கு பணிபுரிவோர், படைப்பில் அக்கறையுடையோர், மனித குலத்தின் நோய்களுக்கு எதிராக உழைப்போர் ஆகிய அனைவரையும் அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம் என தன் ஐந்தாவது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.