Namvazhvu
Vatican News 'Ut Unum Sint' சுற்றுமடலின் 25 ஆம் ஆண்டு நிறைவு
Wednesday, 27 May 2020 05:38 am
Namvazhvu

Namvazhvu

'Ut Unum Sint', அதாவது, ’அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக’, என்று இயேசு கூறிய மன்றாட்டுச் சொற்களைத்  தலைப்பாகக் கொண்டு, 1995ம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், திருமடல் ஒன்றை வெளியிட்டதன் 25 ஆம் ஆண்டு, மே மாதம் 25 ஆம் தேதி இத்திங்களன்று நிறைவுறுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர், இயேசுவின் விண்ணேற்ற விழாவின்போது வெளியிடப்பட்ட இந்தச் சுற்றுமடல், கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அர்ப்பணத்தை வலியுறுத்ததாக இருந்தது என இச்செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியாயமான பன்மைத்தன்மை என்பது, ஒருநாளும், ஒன்றிப்புக்கு தடையாக இருக்காது என்பதையும், தூய ஆவியார் திருஅவைக்குள் இணக்க வாழ்வைக் கொணர்கிறார் என்பதையும் இத்திருமடல் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்குரிய திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் குர்ட் கோக் (Kurt Koch) அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தினால் மேலும் ஊக்கம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பாதையில், கடந்த பல ஆண்டுகளாக நாம் பெற்றுள்ள வரங்கள் குறித்து, திருத்தந்தையின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த கால காயங்களை ஆற்றவும், ஆழமாக வேரூன்றியுள முற்சார்பு எண்ணங்களை வெற்றிகொள்ளவும், ஒன்றிணைந்து உழைக்கவும், அண்மைய காலங்களில் நம்மால் இயன்றதை எண்ணி, கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் இறைவனுக்கு நன்றியறிந்திருக்க வேண்டும் எனவும், இச்செய்தியின் வழியே விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் செல்லும் பாதையில் இயேசு அப்பத்தை பிட்டபோது, சீடர்கள் அவரை கண்டுகொண்டதைப்போல், நாமும் ஒன்றிணைந்து, ஒரே திருப்பலிப் பீடத்தில், அப்பத்தைப் பகிரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம் என அதில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையில் பணிபுரியும் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய முயற்சிகள் குறித்து தன் தனிப்பட்டப் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின் பாதையின் முக்கியத்துவத்தையும், அது குறித்த ஒவ்வொருவரின் பொறுப்புணர்வையும் சுட்டிக்காட்டும் ஏடு ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளதையும், ஒன்றிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் வழிகாட்டுதலை உள்ளடக்கிய தகவல் பரிமாற்றம், இத்திருப்பீட அவையின் தகவல் துறையால் துவக்கப்பட்டுள்ளதையும் தன் செய்தியில் குறிப்பிட்டு, இம்முயற்சிகளை திருத்தந்தை பிரான்சிஸ் மனதாரப் பாராட்டியுள்ளார்.