மே 24 ஆம் தேதி ஞாயிறன்று, சீனாவின் பாதுகாவலியாகிய ஷாங்காய் நகரின் ஷேஷான் ((Sheshan))அன்னைமரியா விழாவை, சீனாவிலுள்ள கத்தோலிக்கர் சிறப்பித்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கருக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
கோவிட்-19 சமுதாய விலகல் சூழலால், இஞ்ஞாயிறன்றும், வத்திக்கான் மாளிகையிலுள்ள தனது நூலகத்திலிருந்து வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் சீன கத்தோலிக்கருக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் உலகினரைக் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், உலகளாவிய திருஅவை, சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் எப்போதும் அருகிலிருக்கின்றது என்பதை உறுதி செய்த திருத்தந்தை, சீனாவிலுள்ள கத்தோலிக்கர், நம்பிக்கையில் வலிமையுடனும், உடன்பிறந்த ஒன்றிப்பில், நிலையான உறுதியுடனும் இருக்கவும் வலியுறுத்தினார்.
மேலும், அக்கத்தோலிக்கர், மகிழ்வான சாட்சிகளாகவும், பிறரன்பு மற்றும், நம்பிக்கையை ஊக்குவிப்பவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் வாழுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
சீனாவிலுள்ள என் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஓர் அங்கமாக இருக்கின்ற உலகளாவியத் திருஅவை, உங்களின் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்கின்றது மற்றும், உங்கள் சோதனைகளில் உங்களுக்கு ஆதரவளிக்கின்றது, தூய ஆவியாரின் வரங்கள் அபரிவிதமாகப் பொழியப்படுமாறு உங்களுக்காகச் செபித்து உங்களுடன் பயணிக்கிறது, இதன் வழியாக, கடவுளின் வல்லமையாக, நற்செய்தியின் ஒளியும் அழகும், உங்கள் மீது சுடர்விடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
2007ம் ஆண்டில், சீனக் கத்தோலிக்கருக்கு மடல் ஒன்றை எழுதிய, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், சீனக் கத்தோலிக்கருக்காகச் சிறப்பு செபம் ஒன்றை எழுதியதுடன், அவர்களுக்காகச் செபிக்கும் உலக நாளையும் உருவாக்கினார். அந்த உலக செப நாள், மே 24 ஆம் தேதியன்று சிறப்பிக்கப்படும் என்றும், அவர் அறிவித்தார்.
ஷேஷான் அன்னை மரியா திருத்தலம், சீனாவின் ஷாங்காய் நகருக்கு அருகில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு, சீனக் கத்தோலிக்கர், சகாய அன்னை விழாவான மே 24 ஆம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும் விழாக் கொண்டாடுகின்றனர்.
மேலும், மே 24 ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையை Sancta Maria Auxilium பாதுகாவலராகக் கொண்டிருக்கும் சலேசிய துறவு சபை குழுமத்திற்குத் தன் நல்வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.