நம் வாழ்வு: ஜூன் 02, 2020. சென்னை- மயிலை உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ரூஸ் மே மாதம் 30 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் இறந்தார்.
சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த சூளை புனித ஆன்ரு ஆலய பங்கில் பங்குத்தந்தையாகவும் அதிபராகவும் பணியாற்றி வந்த நிலையில் கொரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி மே மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இறந்தார்.
1950 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி பிறந்த இவர், ஏப்ரல் 02, 1974 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள ராயபுரம் பெரவள்ளூர், எண்ணூர். வேப்பேரி, கே.ஜி.கண்டிகை போன்ற பங்குகளில் சிறப்பான முறையில் பங்குத்தந்தையாக அருள்பணியாளராக 46 ஆண்டுக்காலம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். வயது மூப்பின் காரணமாக, கொரோனோ நோய்த்தொற்றிலிருந்து விடுபடுவதற்கான சிகிக்சை பலன் தரவில்லை. ஆகையால் தம் 70 ஆம் வயதில் தம் ஆவியை இறைவன் கையில் ஒப்படைத்தார்.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இறந்த காரணத்தால், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன். சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினரின் உறுதுணையுடன் சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களின் தலைமையில், மறைந்த அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ரூஸ் அவர்களின் உடன்பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அண்ணாரது உடல் லஸ் புனித பிரகாச மாதா திருத்தலத்தில் அமைந்துள்ள சென்னை மயிலை குருக்களுக்கான கல்லறையில் இறையாசீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(தந்தையின் புகைப்படத்தை கிளிக் செய்தால் அவரது அடக்கச் சடங்கைப் விடியோவாகக் காணலாம்)
இறைவனுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து, கடந்த 46 ஆண்டுகளாக சென்னை மயிலைத் தலத்திருஅவையின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து, நல்ல ஆயனாக, இன்முகத்தோடு இனிதே மறைபணியாற்றி, ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி, நியாயத்தின் பக்கம் நின்று, சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பள்ளிகள் அனைத்தையும் முறைபடுத்தி, செம்மையாகப் பணியாற்றிய அருள்பணியாளர் பாஸ்கல் அவர்கள் மிகவும் போற்றுதலுக்குரியர்.
சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் நற்கருணை மாநாட்டின்போது, நம் வாழ்வு வெளியிட்ட மூன்று நூல்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து பாராட்டியவர். நம் வாழ்வின் பத்திரிகைப் பணியைப் பாராட்டி மகிழ்ந்தவர்.
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே..
முடிவில்லா ஒளி இவர் மேல் ஒளிர்வதாக.. ஆமென்.