“உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு நாள் மண்ணில் விழுந்தவையே”
“ஒருவர் பூச்சிகளைப் பற்றிப் பேசும்போது பூச்சியியலாளர் ஆகிறார். வரலாற்றின் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசும்போது அவரே வரலாற்றாசிரியர் ஆகிறார்” என்கிறார் ழான் ஜெனே. நம்மில் பலர் இன்று நோய்த்தடுப்பு முறைகளைப் பரிந்துரைப்பவர்களாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாக, உடல், உள்ள, ஆன்மீக வழிகாட்டிகளாக, திறனாய்வாளர்களாக, திட்ட வழிகாட்டிகளாக, சிறந்த சிந்தனையாளர்களாக, சிறுகதை, நாடக, துணுக்குகள் உருவாக்கும் கலைப்படைப்பாளிகளாக, ஆராய்சியாளர்களாக, ஆய்வாளர்களாக, நெறியாளர்களாக, எதிர்காலத்தை முன்னுரைக்கும் தீர்க்கத்தரிசிகளாக …என்றுச் சொல்லிக்கொண்டே பேகலாம். இவ்வாறு உருவாக்கம் பெற்றுள்ளோம். இம்மாற்றத்திற்கான காரணம் எதுவாக உள்ளது என்றால் “கரோனாவின் கதைசொல்லிகளாக” மக்கள் மாறிவிட்டார்கள்.
இந்நிலையில் நம் சமுகத்திற்காக, நமது உலகிற்காக, நமது வாழ்வுக்காக, நம்முடைய உறவுக்காக மட்டுமே ஓர் உறவு காத்திருக்கின்றது என்றால், அவர்கள் யார்? என்றால், நம் ஆசிரியர்கள் மட்டுமே. உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் உறுதியான கரமும், இதயமும் நற்காரியங்கள் செய்வதற்கும், இந்நானிலத்தை நலமாக்குவதற்கும் பயன்படட்டும். ஓடுங்கள், விரைந்து ஓடுங்கள் திசைகள் மாறிவிடாதிருக்க புத்தகங்களையும், நம் வாழ்வு உள்ளிட்ட வார இதழ்களையும், நாளிதழ்களையும், நலமான ஊடகங்களையும் கரத்தில் ஏந்துங்கள். கல்வியை மட்டுமல்ல, கலைகளையும் அன்பு செய்யுங்கள். எழுத்து. பேச்சு, ஓவியம், பாடல், விளையாட்டு, நடனம், நீச்சல், மொழித்திறன் என எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குங்கள். உங்களைத் தாங்கிப் பிடிக்க நாங்களிருக்கிறோம். உங்களோடு வழிநடக்க நாங்கள் வருகிறோம். உங்கள் பாதையில் அரணாய் என்றும் நாங்களிருப்போம் என்கிறார்கள் உங்கள் ஆசிரியர்கள்.
“மாணவர்களைப் பிறருக்காக வாழவும், பணியாற்றவும், சமூக மாற்றத்திற்கான கருவியாக உருவாக்குவதுமே கல்வியின் தலையாய பணி என்கிறார்” - விவேகானந்தர்.
ஆம்! கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்கா மலும் செவிசாய்க்கும் திறன் கொண்டது. கல்வி மனிதனை எந்த பேதமில்லாமல் மனிதனாகவே பார்க்க வைக்கும் அறிவு கண்கள். கல்வியின் நோக்கம் தகவலைத் திணிப்பதாக இருக்கக் கூடாது. கல்வி என்பது ஆய்வுக் கல்வி மூலம் சூழலை, அறிவை, சமூகத்தை, பண்பாட்டு மரபை ஆராய்ந்து கொள்ள உதவுவதாக இருக்கவேண்டும். எனவே இதற்காக ஒவ்வொரு நாளும் புதிய உத்திமுறைகளை உருவாக்கி உழைத்துக் கொண்டு இருக்கின்றவர்கள் நமது ஆசிரியர்கள் என்றால் மிகையாகாது. அவர்களை நினைத்து நன்றி கூறும் நன்னாள்தான் ஆசிரியர் தினம்.
கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பது இல்லை; அறிவியல் கல்வி, சமூக அறிவியல் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றுமே வாழ்க்கைக்கு அவசியமானவை. கல்வி என்பது வாழ்க்கையை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டு, வாய்ப்பு களைப் புரிந்து கொண்டு, நாமும் வளர்ந்து, நம்மைச் சார்ந்தவர்களையும் முன்னேறச் செய்வதற்காகச் சிந்திப்பதுதான் ஆசான்களின் அற்புத ஆற்றல். மாணவர்கள் மங்கா ஒளித்தூண்கள்; எதிர்கால சமூகத்தை ஒளிரச் செய்யப்போகிறவர்கள். அவர் களின் ஆற்றலை விரயமாக்காமல் முழுவதுமாய் பயன்படுத்தி புதுயுகம் படைக்கச் செய்திடுவோம் என்ற அறைகூவலுடன் பயணித்துக் கொண்டு இருப்பவர்கள் நமது ஆசிரியர்கள்.
மாணவப் பருவம் மகிழ்ச்சியான பருவம். அதைச் சோகத்திற்கு சொந்த மாக்கி விடாதபடி சுதந்திரக் காற்றை பொறுப்புணர்வோடு சுவாசிக்கச் செய்வோம் என்று, தான் சுவாசிப்பதையே மறந்து மகிழ்ந்திருப் பவர்கள் நமது ஆசான்கள். வெற்றிகரமான வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு வகையிலும் வளர்ச்சியை நோக்கி, முன்னேற்றத்தை நோக்கிச் செல்வ தாகும். பத்தாவது முறையாகக் கீழே விழுந்தவனைப் பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது !!! “நீ ஒன்பது முறை எழுந்தவன்” என்று..!!! இதுதான் நமது ஆசிரியர்கள் நமக்கு கற்று தந்திடும் வாழ்க்கைப் பாடம். அதுதான் இன்றையக் கல்வியின் வெற்றியாகும்.
எத்தனை இடர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி ஊட்டுவோம். என்னால் முடியும் என மாணவர்கள் அனைவரும் நம்பும்படி செய்து, எல்லாருக்கும் உறுதியூட்டுவோம் என்ற நோக்கோடு இக்கொரோனா என்ற பெருந்தொற்று நோய் காலத்திலும், கல்விநிலையங்களும், பல்கலைக் கழகங்களும், பலமிழந்து, சிந்தனைச் செயல் குலைந்து, செய் வதறியாது நின்றாலும், நாங்கள் இருக்கின்றோம் வாருங்கள், வருங்காலம் உங்களுக்கானது என்ற உரத்தச் சிந்தனை யோடு, இணையவழியாக ஏற்றமிகு ஆலோசனைகளை, பல்வகையான ஊடக யுத்திகளைப் பயன்படுத்தி மாணவ, மாணவியர்களை நாளும் சந்திப்பவர்கள் நமது ஆசிரியர்கள்.
உலகில் தினம் தினம் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விசித்திரமான பாடத்தினை நமக்கு கற்பிக்கின்றது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை மட்டுமே பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான். அதனாலேதான் திக்கின்றான். இதுதான் இன்றைய கல்வியாளர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்ற உயரிய பாடம். உலகம் ஸ்தம்பித்து நின்றுள்ளது. அனைத்து வழிபாட்டு தளங்களும் அடைக்கப்பட்டு நாடுகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரையும் தத்தம் நாட்டுக்குள், தமது நகரத்துக்குள், தனது வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டது.
இலைகளையும், மலர்களையும் இழந்த மரங்கள் மீண்டும் துளிர்த்து பூப்பதுப் போன்று மனிதர்கள் வாழ்வும், பருவங்கள் மாறி மாறி வருமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய எண்ணங்கள் எல்லாம் இன்று இல்லாமல் போய்விட்டது. இன்று பாசம், பகுத்தறிவு, ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்னும் முறிமருந்து கண்டுபிடிக்கப்படாத வைரஸ் பெருந்தொற்றை நாம் கண்ணுறுகிறோம். பலபல கோடி டாலர்கள் செலவழித்து ஒரு முறிமருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனினும் பல கோடி டாலர்கள் செலவழித்து நாம் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது.
இந்நிலையில் நமது ஆசிரியர்களும், பேராசிரியர்களும் நிதானத்தோடு, நிறுத்தமில்லா எண்ணங்களோடு நம்மை ஊடகங்கள் மூலம் சந்தித்து கொண்டு இருக்கின்றார்கள். அச்சமற்ற மனிதர்கள்… அவசரமற்ற அசைவுகள்…அழுக்குப்படாத முகங்கள்… வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்கத் துடிக்கும் களங்கமற்ற கண்களாக இன்றைய மாணாக்கர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்களையே தயாரித்துக் கொள்ளும் சமூகமாக, தடைகளற்ற உரையாடல், திரைகளற்ற சிரிப்பு, மனங்கரைந்த பேச்சு, எதையும் மறைக்காத எதார்த்த வெளிப்பாடு நிறைந்தவர்களாக இன்றைய ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
ஒழுக்கம் உண்டாக்காதக் கல்வியால் ஒரு வித உபயோகமும் கிடையாது கல்வி மனிதர்களை வாழ்க்கையில் கரைமட்டும் கொண்டு சேர்க்கவில்லை; நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. இதுதான் இன்றைய வரலாற்று சரித்திரம். தகவல் புரட்சி வளர்ந்துள்ள சூழலில் கட்டை விரல் தடவலில் அலைபேசி வழியாகவும், பிற ஊடகங்கள் வழியாகவும், புதுத் தகவல்களைச் சேகரிக்க வேண்டிய தேவை இன்றைய கல்வியாளர்களுக்கு தேவை.
ஆசிரியர்கள் மாணவச் சமுகம் வாழ்க்கையை வாழ்வதற்கு, தேவையான சக்தியைத் தரும் அட்சயபாத்திரம். ஆசிரியர்களின் வலிமையான சிந்தனைகள், மாணக்கர்களின் அறிவைக் கூட்டும்; ஆற்றலைப் பெருக்கும்; பரந்த எண்ணத்தைத் தரும்; வாழ்வில் உயர, உயர சிறகடித்து பறக்க வைக்கும். ஆசிரியர்கள் ஒரு குழந்தையின் சிரிப்பைப் போல் தூய்மையானவர்கள். குழந்தை நிர்ப்பந்தங்களற்று, போலித்தன்மையின்றி இயல்பாகச் சிரிப்பதால்தான் திணிக்கப்படாத அதன் கோபங்கூட அழகாக மாறுகிறது. அதுபோல் நாம் சந்தித்த ஆசிரியர்கள் என்றும் தன்னல மில்லாதவர்களாக, தகைசால் தலைமை யாளர்களாக இருந்து நமது (மாணக்கர்கள்) சமூகம் வளர வேண்டுமென்பதற்காக தியாகத்துடன் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
புத்தகங்களில் இருந்து தோட்டாக்களைத் தயாரிக்கத் தெரிந்தவர் பகத்சிங். அவரின் தோள்பையில் புத்தகமும், துப்பாக்கி யும் சேர்ந்தே இருக்கும். வெள்ளையருக்கு எதிரானப் போராட்டத்தில் சுதந்திரம் என்பது முதல் கட்டம் என்றும், சுரண்டலுக்கு எதிரான போராட்டம்தான் இறுதிக் கட்டம் என்று நம்பியவர்கள் பகத் சிங்கும், அவரின் தோழர்களும். அதனால் தான் புத்தகமும், ஒரு தோட்டாதான் என்றார். மாணவப் பருவத்தில், அவர்களின் பதிலில் தெளிவு இருத்தல் வேண்டும். சிந்தனையில் தீர்க்கமானச் சிந்தனை இருத்தல் வேண்டும். அவர்களின் வார்த்தையில் ஞானச்சுடரின் கனல் அடித்தல் வேண்டும். “நான் எதையும் புதிதாகப் படைக்கவில்லை. எனது முன்னோர் ஏற்கனவே சொல்லியுள்ள கருத்து களையும், பழைய நூல்களில் இருக்கும் உண்மைகளையும் தான் திரும்பவும், எடுத்து கூறுகிறேன்” கன்பூசியஸ் சொல்கிறார்.
வாழவைப்பதில் உள்ள சுகம் வாழ வைத்தவர் களுக்குத்தான் புரியும். எப்போதும் தான் எப்படி வளர்வது! தான் எப்படி மகிழ்வது!, தனக்கு என்ன வேண்டும்!, தனக்கு வேண்டியதைச் செய்பவர்கள் யார்? தன்னுடைய மகிழ்வுதான் முக்கியம் என்று எண்ணி நேரத்தையும், காலத்தையும் கடத்திக் கொண்டு இருக்கும் சமூகத்தில் இன்றைய ஆசிரியர்கள் வேறுபட்டு சிந்திக்கின்றார்கள். இன்று விஞ்ஞான முன்னேற்றங்களையும், விஞ்ஞான ஆர்வத்தையும் தூண்டி வளர்க்கும், அறிவியலில் சிறந்த மேற்படிப்பு படிக்கின்ற ஆராய்ச்சியாளர்கள், புதியவைகளைக் கண்டுபிடிப்பதில் பெரிதும் ஆக்கப்பூர்வமான அறிவியலில் ஆர்வம் காட்டுவோம். நம் அறிவியல் பாரம்பரியத்தினை வளர்த்திடுவோம் என்று தினம் தினம் புதிய விழிமுறைகளை கையாள்வதில் கருத்தாய் இருக்கின்றார்கள் கற்றுத் தரும் ஆசான்கள்.
“உண்மையான கல்வி
மனிதனுக்குள் இருக்கும்
மனிதத்தைத் தட்டி எழுப்புவதாக
இருக்க வேண்டும்” சுவாமி விவேகானந்தர்.
ஆம் இதுதான் இன்று நாட்டுக்குத் தேவை.
ஒருநாள் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், கல்வி என்பது என்ன? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நீங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும், ஆனால் அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இன்றும் அழியாது இருக்கிறதோ அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி என்றாராம். எனவே இக்கூற்றை நாம் மறுக்க முடியாது. எனவே ஆசிரியர்களே! ஒவ்வொரு ஆசிரியரும் தாயாகி எதிர்கால தலைவர்களை இன்றே உருவாக்குவோம்.
அழகு நிறைந்த மாண்புள்ள ஆசிரியரே!
ஒய்யாரமாக என் இதயத்தில் வீற்றிருப்பவரே
உன் மனம் எனக்கு மருந்து
உன் கரங்கள் எனக்கு நிழல்
உன் இதயம் எனக்கு இயக்கம்
உன் உலகம் எனக்கு வாழ்வு
காலத்திற் கேற்ப தன்னை மாற்றிக் கொண்டவரே!
காலம் தாழ்த்தாது மெல்லிய நிழலாய் இருப்பவரே!
அசதியாய் இருப்பவர்களுக்கு ஆறுதல் தருபவரே!
வறுமையாய் இருப்பவர்களுக்கு வாழ்வளிப்பவரே!
நீர் வாழ்வாங்கு வாழ மனநிறைவோடு வாழ்த்துகின்றோம்
நீவீர் என்றென்றும் நினைவில் நிலையாய் நின்றிட
ஆசிரியர் தினவிழா நல்வாழ்த்துகள்! வாழ்க வளமோடு!