Namvazhvu
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு
Monday, 11 Jan 2021 07:45 am
Namvazhvu

Namvazhvu

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் சரியாகச் செயல்பட்டிருப்பது, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது என்று, தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி பிள்ளை கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும், அந்த ஆலையை, மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம், இம்மாதம் 18 ஆம் தேதி வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, ஆயர் ஸ்டீபன் அவர்கள், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசடைய, இந்த ஆலை காரணமாக இருந்தது என்று கூறினார்.
இந்த ஆலை நிர்வாகிகள், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அக்கறையற்று இருந்ததால், அதிலிருந்து வெளியேறிய கழிவுகளால், நிலத்தடி நீர், மண்வளம், சூழலியல் போன்ற அனைத்தும் மாசடைந்தன என்றும், ஆயர் ஸ்டீபன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த மாசுகேட்டின் தாக்கம் எவ்வளவு இருந்த தென்றால், அதனால் மழை சரியாகப் பெய்யவில்லை, பெருமளவான மக்கள், புற்றுநோய், மூச்சுத்திணறல், தோல் வியாதிகள், காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டனர் என்றும், தூத்துக்குடி ஆயர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறிய ஆயர் ஸ்டீபன் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுடியாது என்று, சென்னை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, தான் முழு மனதோடு வரவேற்பதாகக் கூறினார். 
இந்த ஆலையை மூட வலி யுறுத்தி, அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு கத்தோலிக்கர் உட்பட, 13 பேர் கொல்லப் பட்டனர்மற்றும், ஓர் அருள்பணியாளர் உள்ளிட்ட, நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்த ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து, அந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்க இயலாது என்று தீர்ப்பு வழங்கினர். இலண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா குழுமம், 1994 ஆம் ஆண்டில், தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையைத் தொடங்கியது.
உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலய நிர்வாகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
இலங்கையில் கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் துணை ஆயராக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள, தமிழரான அருள்பணி  ஆன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் (ஹவேடிn சுயதேiவா ஞடைடயiயேலயபயஅ) அவர்கள், அந்நாட்டின் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே நெருங்கிய உறவு வளர ஊக்குவிப்பார் என்று, கத்தோலிக்கர் எதிர்பார்த்துள்ளனர்.
53 வயது நிரம்பிய அருள்பணி  இரஞ்சித்அவர்கள், ஆகஸ்ட் 29 ஆம் தேதி  சனிக்கிழமையன்று கோட்டஹேனா புனித லூசியா பேராலயத்தில், ஆயராகத் திருநிலைப்படுத்தப் பட்டார். 
சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ் தேவ தர்ம நிகேதானாயா இறையியல் நிறுவனத்தில், தமிழ்ப் பிரிவுக்குத் தலைவராக, 2006ம் ஆண்டில் நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். 
இலங்கையில் ஏறத்தாழ 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், நாட்டின் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், மக்களும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரில், குறைந்தது நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்று ஐ.நா. கூறும்வேளை, இவ்வெண்ணிக்கை, ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்று, சில தகவல்கள் கூறுகின்றன.