இப்படியும் ஒர் இளைஞர் - ஆசிரியர்
ஜெரார்டோ இக்ஸ்காய் (Gerardo Ixcoy. தென் அமெரிக்க நாடான குவாதிமாலாவைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய ஆசிரியர். உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான மாயன் கலாச்சாரம் தோன்றிய பகுதிகளில் உள்ள சோளக்காடுகள் நிறைந்த சாந்தா குருஸ் டே குயின்ச்சே வட்டாரத்தில் இவர்தம் பள்ளி உள்ளது. மின்சார வசதிக்கே வழியில்லாத பூர்வக் குடிமக்கள் வாழுகிற இவ்வூரில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இவர்தான் ஆசிரியர். இங்குள்ள மாணவர்களுக்கு செல்போன் வசதிக்கோ கணினி வசதிக்கோ வாய்ப்பே இல்லை. மிகவும் பின்தங்கிய இம்மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் என்ன செய்வது என்று ஜெரார்டோ சிந்தித்தார்.
அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் பற்றியெரிந்தார். இந்த பூர்வக் குடி குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் கல்வியைப் பெறாமல் ஏன் தடுக்கப்பட வேண்டும்? கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை. இதற்குத் தீர்வுதான் என்ன? சிந்தித்த இந்த ஆசிரியர் ஒரு மூன்று சக்கர சைக்கிளை வாங்கி, அதில் சூரிய மின்சாரத்தைப் பெற ஒரு சோலார் பேனல் ஒன்றைப் பொருத்தி, பாடம்நடத்த ஒரு வெண்பலகையையும் இணைத்தார். அவருடைய படைப்புத்திறனை விட, ஓரங்கட்டப்பட்ட மக்கள்
மீதான அன்பு மேலாக இருந்தது. மார்ச் மாதம் மத்தியில், கொரோனா அச்சத்தின் காரணமாக குவாதிமாலாவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
தம்மிடம் இருந்த சேமிப்புத் தொகையைக் கொண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு மூன்று சக்கர மிதி வண்டியை விலைக்கு வாங்கினார். அதனை நடமாடும் வகுப்பறையாக மாற்றினார். அதற்கு ஒரு மேற்கூரையை அமைத்தார். அந்த மேற்கூரையின் மீது ஒரு சோலார் பேனலைப் பொருத்தினார். நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க முன்பக்கமாக தடுப்புக் கண்ணாடியைப் பொருத்தி னார். அதற்கு பின்புறமாக பிள்ளைகளுக்கு அவர்கள் கற்கும் ஆரம்பக்கல்வியான கூட்டல் கழித்தல் பெருக்கல் வாய்ப்பாடு, அவர்களுடைய பூர்வ மொழி, தேசிய மொழியான ஸ்பானிஷ் ஆகிய பாடங்களை எடுக்கும் பொருட்டு ஒரு வெண்பலகையைப் பொருத்தினார்.
அவர் பொருத்திய சோலார் பேனலிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு ஒரு லவுட் ஸ்பீக்கரைப் பொருத்தினார். தனி மனித இடைவெளியில் நோய்த் தொற்று ஏற்படாமல் சற்று தொலைவிலிருந்து மாணவர்கள் பாடம் கற்க வழி செய்தார். அவர் தெருவில் வண்டியை நிறுத்தி மாணவர்கள் தத்தம் வீட்டிலிருந்தே பாடம் கற்க உதவி செய்தார். ஒரு விளக்கமாற்று குச்சியை கையில் வைத்துக்கொண்டு மாணவர்களுக்கும் தனக்கும் இடையே இடைவெளியை ஒழுங்குப்படுத்தினார். பின்னால் "ஐயோ" என்று வருந்து வதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லதுதானே..
இந்த 27 வயது நிரம்பிய இவர் தம் வாழ்வின் பெருங்கனவாக, தன் அழைத்தலாக ஆசிரியப் பணியைக் கருதினார். பள்ளியில் படிக்கிறபோதே அனைத்திலும் முதல் மாணவனாகவே விளங்கினார். இவர்தம் வகுப்புத் தோழர்கள் இவரைச் செல்லமாக லாலித்தோ 10(Lalito10) அதாவது ஜெரி A+ என்றுதான் அழைப் பார்கள். அவர்தம் நடமாடும் வகுப்பறையில் “Profe” (Teacher) “டுயடவைடி 10”என்றுதான் இருக்கிறது.
இவர் பணியாற்றும் அப்பகுதியில் உள்ள எழுத்தறிவு விகிதம் 42 சதவீதம் மட்டும்தான். ஏழைகளான இவர்களிடம் ஸ்மார்ட் போன் வசதியில்லை. இன்டெர்நெட் வசதிக்கும் வாய்ப்பில்லை. எனவே ஆன்லைன் வகுப்புக்கு வழியில்லை. இவர் வாரந்தோறும் சில மணி நேரங்களேஇம்மாணவர்களைச் சந்தித்தாலும் தங்கள் ஆசிரியர்எப்போ வருவார் என்று இந்தப் பிள்ளைகள் ஏங்குகின்றனர். அவருக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் என்றாலும் அவர்கள் அதனை நன்குப்பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். தங்களிடம் உள்ள ஸ்கெட்ச்களைக் கொண்டு மாஸ்ட்ரோ லாலித்தோ 10 ““Maestro Lalito 10”என்று எழுதி, ஸ்மைலிகளைச் வரைகின்றனர். இவரும் தமிழர்களைப் போல கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லி, அவர்களைத் தொடாமல் பார்த்து பார்த்து பாடம் நடத்துகிறார். மாணவர்களின் மனங்களில் மட்டுமல்ல... உலக மக்களின் மனங்களிலும் இந்த 27 வயது ஆசிரியர் பாடம் எடுத்துவிட்டார். அன்புக்கு எல்லைகள் ஏது? (மீண்டும் ஊக்கம் பெறுவோம்)
தொடரும்..