எலியா இறைவாக்கினரும் சோர்ந்து போன பணியாளரும்
முன்னுரை: எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றது, ‘மாற்றம்‘ ஒன்றே இங்கு மாறாமல் இருப்பது என்ற கூற்று எத்துணை உண்மையாகிப் போனது. ஆகஸ்டு மாதத்தில் கடந்த ஆண்டுகளில் தமிழகமெங்கும் ஆரோக்கிய அன்னையின் பக்தர்கள் தவ உடை அணிந்து தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வேளாங்கண்ணியை நோக்கி சாரை சாரையாய் திருப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இன்று இது மாறிப்போனது. இன்று நாடடங்கு நிலையிருப்பதால் எல்லாரும் வீட்டிலேயே ஊரிலேயே, தெருவிலேயே முடங்கிப் போன நிலை. இதனால் குருத்துவ மற்றும் துறவறப் பணியும் முடங்கிப் போன நிலை. துறுதுறு என இருந்த பணியாளர்களும், அருட்சகோதரர்களும், தங்கள் இறைமக்களுக்காக புதுப்புது வழிகளில் மேய்ப்புப் பணிகளை சிந்தித்து யல்படுத்திய பங்குப் பணியாளர்களும் இன்று முடக்கப்பட்டு, ஞாயிறு திருப்பலிக் கூட நிகழ்த்த முடியாமல், அடிப்படை அருட்சாதனங்களைக் கூட வழங்க முடியாத நிலையில் இருக்கும்போது பணியிலே சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுகின்றது. இதனால் “என்ன பணியிது?” “என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?” என்றெல்லாம் எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்க எத்தனிக்கின்ற இவ்வேளையில் 1 அரசர் 19 ஆம் அதிகாரத்தில் காணக்கிடக்கின்ற நிகழ்வுகளின் வழி நமது அருள்பணியாளர்களுக்கும், அருள்பணிக்கும் சில செய்திகளையும் சிந்தனைகளையும் பெற முயல்வோம்.
1. தளர்ந்து போன எலியா
இந்த அதிகாரத்திற்கு முந்தைய அதிகாரங்களில் காணப்படும், காண்பிக்கப்படும் எலியா மிகவும் துடிப்பான, துறுதுறுப்பான இறைவாக்கினர். அவர் பல செயல்பாடுகளை முன்னெடுக்கின்றார் ; அவற்றில் வெற்றிகளைக் காண்கின்றார்: ஆகாபு அரசனிடம் பஞ்சத்தை முன்னறிவிக்கின்றார் (அதி 17), மழைபெய்யும் என்கிறார் (அதி 18), பாகாலை வழிபடுபவர்களை சவாலுக்கு அழைக்கின்றார் (அதி 18). இவை அனைத்திலும் ‘வெற்றிமீது வெற்றி வந்து சேர்கின்றது’ வெற்றிக் கொடி கட்டியபோதெல்லாம் துறுதுறுவென ‘ஓடி ஆடி’ பணியாற்றிய எலியா ஈசபேல் தன் உயிருக்கு குறிவைக்கின்றாள் என்று அறிந்தவுடன், தளர்ந்து போகின்றார். எதற்கும் ‘அஞ்சா நெஞ்சனாக’ இருந்த எலியாவுக்கு ‘உயிர் பயம்’ வந்து விடுகின்றது. அதனால் அரசனை விட்டு ஓடுகிறார், நாட்டைவிட்டு ஓடுகிறார், “ஓடுகிறார் ஓடுகிறார்” வாழ்வின் விலிம்பிற்கே ஓடுகிறார், 40 நாட்கள் பாலை நிலத்தில் ஓடுகின்றார்,குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறார். தன்னையே தனிமைப்படுத்திக் கொள்கிறார் (Home Quarentine!). சாவின் விளிம்பிற்கே போய் விடுகின்றார். “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும் என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல” (வச.4) என மன்றாடும் அளவிற்கு மனம் தளர்ந்து போகின்றார். எல்லாம் கசந்து விட்டது, தோல்வி துரத்துகின்றது, வாழ்வை மாய்த்து கொள்வது ஒன்றுதான் வழி. ஈசபேல் கைகளில் சாவதைவிட ஆண்டவர் கைகளில் சாவது மேல் எனப்படுகிறது எலியாவிற்கு. வாழ்வின் விளிம்பில் இருக்கும்போது கடவுள் எலியாவிற்கு தோன்றுகின்றார்.
2. இறை பராமரிப்பில் நம்பிக்கை
"வாழ்ந்தது போதும்" என்று எலியா நினைத்த போது, கடவுள் அவர் இன்னும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். பஞ்சகாலத்தில் சாரிபாத்துக் கைம்பெண் மூலம் உணவு அளித்தக் கடவுள் (1 அரச 17:8-16) இப்போது வானத்தூதர் வழியாக ‘தணலில் சுட்ட அப்பமும், குவளையில் நீரும்’ தந்து (வச.6) பராமரிக்கின்றார். இருமுறை இது நிகழ்கின்றது. இதனால் உறுதிபெற்று நாற்பது நாள்கள் பயணப்பட்டு ஓரேபு மலையை அடைகின்றார். எனவே இங்கு இறைவன் தனது பணியாளரைப் பாதுகாப்பார்; பராமரிப்பார் என்பது தெளிவாகின்றது. எல்லாம் கைநழுவிப் போய் விட்டது எனும் நிலையில் எதுவும் கடவுளின் கைகளிலிருந்து நழுவிப் போகாது, போக முடியாது, போகவும் விடமாட்டார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறை பராமரிப்பில் இறைத்திட்டத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனெனில், கடவுளே வரலாற்றை வழிநடத்துகிறவர். நாம் அவரது பணியாளர்கள் மட்டுமே. நம்மை பராமரிப்பதும், வழிநடத்துவதும் அவர் கைகளில் உள்ளது.
3. திடப்படுத்துகின்ற தேவன்
குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற எலியாவுக்கு கடவுள் தோன்றி “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில்” (வச.11) என்று கூறுகின்றார். இங்கே ஒருவர் முன் நிற்பது என்பது கூர்ந்து நோக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் எலியா ஆகாபு அரசனின் முன் நின்று மழை பெய்யாது, பஞ்சம் வரும் அறிவித்தார் (அதி 17); மீண்டும் மழை பெய்யச் செய்யுமுன் கடவுள் அவரிடம் “ஆகாபு உன்னைக் காணுமாறு போய்நில்” (1 அர 18:1) என்கிறார்; எலியாவும் ஆகாபு முன் நின்றார் (1 அர 18:17); எலியா மக்கள் முன்நின்று (1 அரச 18:21) யாவே இறைவனுக்காகப் பேசுகின்றார்; பின் பாகால் தெய்வத்தின் இறைவாக்கினர் முன்நின்று அவர்களைச் சவாலுக்கு அழைத்தார்(1 அர 18:22-40). இவர்கள் முன் எல்லாம் சென்று நின்ற இறைவாக்கினர் எலியா, இறைவன் முன் நிற்கத் தயங்குகின்றார். மற்றவர்கள் முன்நின்று அவர்களுக்கு சவால்விட்ட, சவாலுக்கு அழைத்த எலியாவை கடவுள் சவாலுக்கு அழைக்கின்றார். “வா! வந்து பார்!” “என்முன் வந்து நில்” என்கிறார். ஏனெனில் அவர் (எலியா) தனது பணியிலிருந்து விலகினார், தவறினார். அதனால் குற்ற உணர்வு அவரை இறைவன் முன் நிற்பதைத் தடுக்கின்றது. உண்மையில் இறைவாக்கினரும், பணியாளரும் கடவுள் முன் மக்களுக்காக நிற்க வேண்டியவர்கள்; மக்கள் முன் கடவுள் சார்பாய் நிற்க வேண்டியவர்கள். இவற்றிலிருந்து தவறும் போதும் இறைவன் வந்து அழைத்து திடப்படுத்துகின்றார்; தன் உடனிருப்பை தெரியப்படுத்துகின்றார்; “இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” (வச.11) என்கிறார். எனவே கடவுள் நம் பணிகளிலிருந்து விலகும்போது, நம்மை மீண்டும் அழைத்து தனது உடனிருப்பை உறுதி செய்து நம்மை திடப்படுத்துகின்றார்.
4. தண்டிக்கும் தேவன்
இறைவன் எலியாவுக்கு தோன்றி அவரை திடப்படுத்தியபோது இறைவாக்கினர் இறைவனிடம் என்ன எதிர்பார்த்திருப்பார்”. “ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர், உம் பலிப்பீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்க தேடுகின்றனர்” (வச 10) எனும் வார்த்தைகளின்படி பார்த்தால், "நான் ஒருவன் மட்டும் தனியாளாய் போராடுகின்றேன். நீர் என் பக்கமாய் இருந்து பூகம்பம், நெருப்பு, காற்று ஆகியவற்றின் வழியாக வந்து அவர்களை அழித்து போடும்" என்று எதிர்பார்த்திருப்பார். அவரது வாழ்விலும் நெருப்பு, காற்று வழியாகவும், விடுதலைப் பயண நூலில், இயற்கையின் வழியாகவும் கடவுள் செயலாற்றி எதிரிகளைத் தண்டித்திருக்கிறார் கடவுள். அதை இப்போது கடவுள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். ஆனால் கடவுள் இப்போது இவற்றில் இல்லை, இவற்றின் வழி செயலாற்றுவதில்லை; வேறு வழியில் தம்மை வெளிப்படுத்துகிறார், செயலாற்று கின்றார். அதற்கு செவிமடுக்க வேண்டும், அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
5. மெல்லிய காற்றின் ஓசையில் கடவுள் - அவரது செயல்பாடு எலியாவைப் பற்றிய இந்த பகுதிக்கு விடுதலைப் பயண அனுபவத்திற்கும், சீனாய் மலையில் நிகழ்ந்த இறைவெளிப்பாட்டிற்கும் பல ஒற்றுமைகளும், சில முக்கியமான வேற்றுமைகளும் உள்ளன. இரண்டிலும் பாலைவனம் பேசப்படுகிறது; நாற்பது ஆண்டுகள் நாற்பது நாட்களாகத் தரப்படுகின்றன; இங்கே குறிப்பிடப்படும் ஓரேபு மலையும் சீனாய் மலையும் ஒன்றுதான், இரண்டிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் (காண் விப 3:19). ஆனால் விடுதலைப் பயணத்தில் கடவுள் இயற்கையின் வழியாக தன்னை வெளிப்படுத்தினார். உதாரண மாக பத்து கொள்ளை நோய்கள், மேகத்தூண், நெருப்புத் தூண் ஆகியவற்றைக் கூறலாம். குறிப்பாக சீனாய் மலையில் உடன்படிக்கையின்போது, “மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது... ஏனெனில் ஆண்டவர்அதன்மீது (மலை முழுவதும்) நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது”(விப 19:16,18). ஆனால் இங்கு சுழற்காற்று,நிலநடுக்கம், தீ ஆகியவற்றில்கடவுள் தம்மை வெளிப்படுத் தாமல் “அடக்கமான மெல்லிய ஒலி”யில் (வச 12) கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார். இரைச்சலும், வெளிச்சமும், சப்தமும் இல்லாமல் அமைதி யில், நிசப்தத்தில், மௌனத்தில் கடவுள் நம்மோடு பேச விரும்புறார். காதுகளில் கண்களில் அல்ல இதயத்தில், ஆன்மா விற்குள் வந்து பேச விரும்புகின்றார். இந்த கொரோனாவும் சப்தமில்லாமல், சந்தடியில்லாமல் எத்தனை அழுத்தமான, ஆழன செய்திகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக் கிறது. இறைவனின் செயல்பாடுகள் பல நேரங்களில் அமைதி யாக நிகழ்ந்தேறுகின்றன. உலகில் எத்தனை மாற்றங்கள் இப்போது ஆரவாரமின்றி நடந்து கொண்டிருக்கின்றன. சப்தத்தில் இன்று அமைதியாகப் பேசும், செயல்படும் இறைவனை நம்மால் கண்டு கொள்ள முடிகிறதா?
6. நீ இங்கே என்ன செய்கிறாய்?
கடவுளின் இந்த கேள்வி சற்று கடினமான கண்டிப்பான கேள்வி. “இதுவரை ஓடி ஆடி பல செயல்களை அரசனை எதிர்ப்பது, பாகாலை எதிர்ப்பது, மக்களை வழிநடத்துவது செய்துகொண்டிருந்த நீ இப்போது முடங்கிப் போய், குகைக்குள் குறுகிப் போய் கிடக்கிறாயே! இதுவா உனது பணி? இதற்காகவா நீ அழைக்கப்பட்டாய்?” என்றுகடவுள் கேட்பது போல் உள்ளது. எனவே “குகையை விட்டு வெளியே வா! அழைத்தல் ழ்வுமுடிந்து விடவில்லை, இன்னும்பணிகள் ஏராளமாய் உள்ளன, இன்னும் கடினமான சவாலானபணிகள் காத்துக் கொண்டிருக் கின்றன” என்பது போல பேசி மீண்டும் எலியாவை சவாலான பணி வாழ்க்கையில் மீண்டும் அமர்த்துகின்றார். இது ஒரு விதத்தில் எலியாவிற்கு “இரண்டாவது அழைப்பு” அல்லது “அழைத் தலுக்கு ஓர் அழைத்தல்”. எனவேதான், “நீ வந்த வழியே திரும்பித்தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்த வுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய்” (வச.15) எனும் பெரும் பொறுப்பையும், பணிகளையும் தருகின்றார்.
எனவே இந்த கொரோனாகாலத்தோடு எல்லாம் முடிந்து விடவில்லை குருத்துவ, துறவு பணிகள் அர்த்தமற்று போய்விடவில்லை, நாம் வேலை யில்லாப் பட்டதாரிகள் ஆகி விடவில்லை. உண்மையில் இப்போதுதான் அதிக வேலையிருக்கிறது. சவாலான பணிகள் காத்திருக்கின்றன. மக்கள் பொருளாதாரத்தில் நொடித்து போயிருக்கிறார் கள். உளநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆன்மிகத்தில் குழம்பிப் போயிருக்கிறார்கள். இளைஞர்கள் திக்கு தெரியாமல்,எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் இருக்கிறார்கள்; இவர்களை யெல்லாம் வழி நடத்த வேண்டியபொறுப்பும் பணியும் அருட்பணியாளர்களுக்கு உண்டு. இந்த சவால்களை ஏற்க செயலாக்கம் செய்ய நம் குகைகளை, தனிமைச்சிறைகளை, தனிமைப்படுத்தல் களை விட்டு வெளியே வரு வோம். ஆற்ற வேண்டிய புதுப் பணிகளை இனம் காணுவோம், நம் உடன் இருந்து, பராமரிக்கும் இறைவனின் துணைகொண்டு மீண்டும் நமது அழைத்தல், துறவு வாழ்வைத் தொடர்வோம்.