Namvazhvu
கொரோனா நோய்த்தொற்றுக்
Tuesday, 12 Jan 2021 08:53 am

Namvazhvu

கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள துறை அச்சு ஊடகத் துறையாகும். இவ்விதழில் இடம்பெற்றுள்ள  முனைவர் திரு.சுந்தர் அவர்களின் கட்டுரை இதனை அவ்வளவு வலியுடனும் வேதனையுடனும் எடுத்தியம்பி, புதியச் சூழலுக்கு தகவமைத்துக் கொள்ள பாடம் கற்பிக்கிறது. தமிழ்க் கிறிஸ்தவ பத்திரிகையின் பிதாமகன் என்றால் நம் வாழ்வு மட்டும்தான்.  கடந்த 46 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் தங்குதடையின்றி வெளிவந்துள்ள ஒரே கிறிஸ்தவ, அரசியல் ஆன்மிக சமூக விழிப்புணர்வு வார இதழ் நம் வாழ்வு மட்டும்தான். 

கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரண மாக அச்சுத்துறையும் அஞ்சல்துறையும் முடங்கிப் போனதால்தான் ஏனைய பத்திரிகைகளைப் போலவே நம் வாழ்வும் அச்சிதழாக வெளிவர வில்லை. இருப்பினும் கடந்து மூன்று ஆண்டு களாக மேற்கொள்ளப்பட்ட வலிமையான உள் கட்டமைப்பின் காரணமாக, தொழில்நுட்ப ரீதியாகவளமையடைந்து, நம் வாழ்வு ‘இல்லங்களில் பாஸ்கா’, ‘இல்லங்களே ஆலயம்’ என்று ஆன்மிகத்தையும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செய்திப் பதிவுகளையும் அன்றாடம் இணையதளம், சமூகஊடகங்கள் வழியாக பதிவுச் செய்து, திருஅவையோடு இறை மக்களுக்கு உள்ள தொடர்பு அறுந்து போகாமல் பார்த்துக்கொண்டது. நம் வாழ்வுவெளிக்கொணர்ந்த 75க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நூல்கள் இ-மெயில் வழியாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இலவசமாக வழங்கப்பட்டன. அதற்கான தொழில் நுட்பத்திற்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி இலாப நோக்க மில்லாமல் இலட்சக்கணக்கில் செலவு செய்யப் பட்டது. தமிழகத் திருஅவையில் உள்ள ஏனைய இதழ்களின் நிர்வாகிகளும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் நம் வாழ்வின் சேவை யைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர். ஏறக்குறைய கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான குறுஞ்செய்திகள் பெரும் பொருள்செலவில் நம் வாழ்வு சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஊரே முடங்கிய போதும் நம் வாழ்வின் பணி தொய்வின்றி தொடர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 

ஒரு பத்திரிகையாளர், முதன்மை-ஆசிரியர் என்ற நிலையில் பார்க்கிறபோது, நாற்பத்தைந்து ஆண்டுகால வளர்ச்சியை, தன்னிறைவை அனைத்து நிலைகளிலும் நம் வாழ்வு அடைந்துள்ளதா என்றால் இல்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என்னை தூங்க விடுவதில்லை. தொலைக்காட்சி யுகங் களுக்கு முன்பிருந்தே கோலோச்சி வரும் நம் வாழ்வு, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓரளவு வளர்ந்திருந்தாலும் தன்னிறைவும் தற்சார்பும் கொண்டதாக வளரவில்லை என்பதே உண்மை. கோடிகளில் புரளும் குட்டி குட்டி சபைகளிடமும் செபக் கோபுரங்களிடமும் இல்லாத வலிமையான அரசியல் வார பத்திரிகை, கத்தோலிக்கத் திருஅவையிடம் இருப்பது என்பது நம் பெருமை. அதனைக் கண்ணின் மணியாய் காப்பது நம் கடமை. தமிழக ஆயர்பேரவையின் ஒரே வார பத்திரிகையான நம் வாழ்வுக்கு விதையைப்போட்டு, பாத்திக் கட்டி, வேலிஅமைத்து, அந்தக் கண் வளரும்வரை பாதுகாத்தவர்கள் தமிழக ஆயர்கள் என்றால் அது மிகையாகாது. எனவே இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, தமிழக இறைமக்களாகிய நீங்கள்தான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும். இன்னும் ஆயர்களின்கைகளையே நம் வாழ்வு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அது வளர்ச்சி அல்ல.நம் வாழ்வு தற்சார்பு நிலையை அடைய நீங்கள்தான் உதவ வேண்டும். இது தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ் என்பதற்கு நீங்கள் வலிமை சேர்க்க வேண்டும்அதற்கு முன்பாக நம் வாழ்வின் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நம் வாழ்வு வார இதழ், இந்தியப் பத்திரிகை சட்டத்தின் கீழ் செயல்படுவதால் எந்த வெளிநாட்டு உதவியைப் பெற இயலாது, பெறவும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம். இரண்டாவதாக, கடந்த பத்து ஆண்டுகளில் அச்சுப்பொருட்கள் மற்றும் காகித விலையேற்றத்தால் ஓர் இதழைத் தயாரித்து, அச்சிலேற்றி, நிர்வாகச் செலவு உட்பட அஞ்சலில் அனுப்புவதற்கு ரூ.14 முதல் 15 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ஒரு சந்தாதாரரிடமிருந்து ஓர் இதழுக்கு ரூ.9.60/- மட்டுமே வாங்குகிறோம். 

மூன்றாவதாக, நம் வாழ்வுக்கு விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை. நூற்றுக்கணக்கான திருத்தலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய திருத்தலங்களும், ஆயிரக்கணக்கான பங்குகளில் ஒரு சில பங்குகள் மட்டுமே தங்களின் பங்குத்திருவிழாவின் போது விளம்பரம் கொடுக்கின்றனர்.  வாரந்தோறும் இரண்டு விளம்பரங்கள் கிடைப்பதே குதிரை கொம்பாகும். 

நான்காவதாக,தமிழகத்தில் தோராயமாக உள்ள ஏழு இலட்சம் குடும்பங்களில் வெறும்பத்தாயிரம் குடும்பங்களும். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய கல்வி நிறுவனங்களும், நூற்றுக் கணக்கான இருபால் துறவறச் சபைகளில் வெறும் பத்து துறவறச் சபைகள் மட்டும், 1500 பங்குகளில் 200 பங்குகளில் மட்டுமே நம் வாழ்வு வாங்கி ஊக்கப்படுத்தப்படுவதால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். 

ஐந்தாவதாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, வாடகை செலுத்த வேண்டிய நிலையின்றி, நீண்டகால குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த கட்டிடத்தில் நம் வாழ்வு அலுவலகம் இயங்கி வருகிறது. நம் வாழ்வுக்கு நிரந்தர வைப்பு நிதியும் இல்லை. அசையா சொத்துக்களும் அசையும் சொத்துகளும் இல்லை. சொந்த அச்சகம் கூட நம் வாழ்வுக்கு இல்லை. வாசகர்களாகிய இறைமக்கள்மட்டும் தான் நிரந்தர சொத்து. 

எனவே, இறைமக்களாகிய நீங்கள்தான், வாசகர்களாகிய நீங்கள் தான் எம்மைத் தாங்கிப் பிடித்து, பாதுகாத்து, நம் வாழ்வு என்னும் தமிழகத் திருஅவையின் திராட்சைக்கொடி பலன் தர உதவ வேண்டும். உங்களுடைய சந்தாக்களைப் புதுப்பிப்பது கிறிஸ்த வனாகிய எனது தார்மீகக் கடமை என்பதை உணர வேண்டும். நீங்கள் பணிபுரிகின்ற நிறுவனங்களில், பங்குகளின் விளம்பரங்களை ஆண்டிற்கு ஒருமுறை தந்து உதவ வேண்டும். உங்களுடைய குடும்ப சுக-துக்க காரியங்களை, வெள்ளி விழா - பொன்விழா விளம்பரங்கள் செய்து உதவ வேண்டும்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் வாழ்வு புரவலர் நிதித் திட்டம்என்பதை எம் வெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகுபேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களின் பரிந்துரை யுடன் தமிழக ஆயர் பேரவையின் அனுமதியுடன் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே பங்கேற்று உதவுகின்றனர். 

ஆகையால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித் துள்ள இவ்வேளையில், துளி துளியாய் -என்னும் திட்டத்தை மேற்கொள்ள விழைகிறோம். ஆயிரம்பேரிடமிருந்து ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் ஒருமுறை பெற்று, பெறப்படும் நிதியை நிரந்தர வைப்பு நிதியில் சேமித்து வைத்து, தமிழக ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் நம் வாழ்வின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த இதனை முன் மொழிகிறோம். ஐந்து லட்சம் குடும்பங்களில் ஆயிரம் குடும்பங்கள் என்பது அடையக் கூடிய இலக்குதான். ஆகையால் துளிதுளியாய் என்ற இந்தத் திட்டத்திற்கு நீங்கள் கட்டாயம் உதவ வேண்டும். இந்தத் திட்டம் பற்றிய விவரங்களை அடுத்து வரும் இதழில் விளக்குகிறேன். உங்களின் குரலுக்கு வலிமை சேர்க்க உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. ஆயிரம் பேரிடமிருந்து ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டிற்கு பத்து இலட்சம் நிரந்தர வைப்பாகும். அவர்களின் பெயர்கள் நம் வாழ்வில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் நூல்கள் (ரூ.400 வரை) அனைத்தும் அந்த ஆயிரம் பேருக்கு நன்றி கடனாக அனுப்பப்படும். நம் வாழ்வுக் குடும்பத்தின் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.  மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...…