தொடதிறைகளில் விவிலியம்
விவிலியத்தை வைரலாக்க, வாழ்வாக்க!
‘விவிலியத்தைத் தொட்டுப் பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை!’ என்று சொன்ன தலைமுறை மாறி, ‘விவிலியத்தைத் தொட்டால் பார்க்கலாம்’ என்ற தொடுதிரை தலைமுறை வந்துவிட்டது. ‘வைரல்’ - இது ‘வைரஸ்’ (‘தீநுண்மி’) என்ற சொல்லைத் தழுவியது. ஒரு எழுத்துருச் செய்தியையோ, படத்தையோ, ஒலிப்பதிவையோ, காணொளியையோ சில நொடிகளில் உலகில் உள்ள பலரும் பார்க்கும் அல்லது கேட்கும் வண்ணம் பகிர்ந்து பரவலாக்கம் செய்வது ‘வைரல் ஆக்குவது’ என அழைக்கப்படுகிறது. ‘விமானத்தின் இறக்கையில் ஏறி அமர்ந்த பெண்,’ ‘வீட்டுத் தலைவருக்காக உயிரை விட்ட நாய்க்குட்டி,’ ‘தலையில் சுத்தி விழுந்த நேசமணி’ என பலரின் வாழ்க்கை அனுபவங்களும் வாழ்வியல் நிகழ்வுகளும் மெய்நிகர் பதிவுகளும் அன்றாடம் வைரல் ஆகி நம் எண்ணங்களை ஆக்கிரமித்துக்கொள்ள, ‘நாம் வாசிக்கும் விவிலியத்தை வைரல் ஆக்குவதும் வாழ்வாக்குவதும் எப்படி?’ என்பதே நாம் இங்கே கேட்கும் கேள்வி. (அ) விவிலிய மின்பதிப்பு, (ஆ) தொடுதிரைக்கும் நமக்கும் உள்ள தொலைவு, மற்றும் (இ) வைரலும் வாழ்வும் என்ற மூன்று தலைப்புகளில் நாம் இக்கேள்விக்கு விடையளிக்க முயல்வோம்.
அ. விவிலிய மின்பதிப்பு (e-edition)
கி.பி. 1468ஆம் ஆண்டு, ஜெர்மனியின் யோகான்னஸ் குட்டன்பெர்க் நகரும் உலோகக் கருவி மூலம் எழுத்துக்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்து, எழுத்துலகின் பெரிய புரட்சிக்கு வித்திடுகிறார். இக்கருவி வழியாகப் புத்தகங்களை நேர்த்தியாக அச்சிடுவதோடு, பல ஆயிரக்கணக்கான பிரதிகளை விரைவாக எடுக்கவும் முடிந்தது. தன் அச்சு இயந்திரத்தால் குட்டன்பெர்க் முதன்முதலாக அச்சிட்ட நூல்களில் விவிலியமும் ஒன்று. இன்று அச்சு தொழில்நுட்பம் கணிணிமயமாக்கப்பட்டு வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் அச்சு எடுத்தல் சுற்றுச்சூழல் இடறலாகப் (நஉடிடடிபiஉயட) பார்க்கப்படுகிறது. அச்சுப் பதித்து அலமாரியில் அடுக்கி வைத்த காலம் மறைந்து, தரவுகளை மேகக்கூட்டங்களில் சேமிக்கும் நிலை வேகமாக வளர்ந்துவருகிறது.
தமிழ்கூறும் நல்லுலகிலும், இன்று அச்சுப் பதிக்கப்பட்ட விவிலியத்தை விட, மின்பதிப்பு விவிலியத்தை வாசிக்க நாம் அதிக ஆவல் காட்டுகிறோம். தற்போதைய விவிலிய மின்பதிப்புகளை நாம் ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்:
(1) வலைத்தளங்களில் தமிழ் விவிலியம். பின் வரும் வலைத்தளங்கள் விவிலியத்தை எழுத்துரு வடிவிலும், ஒலிப்பதிவாகவும் தருகின்றன: bibleintamil.com, .arulvakku.com, .tamilcatholicdaily.com, anbinmadal.org, .catholictamil.com, .anbolitv.net, .bibleproject.com. தமிழ் விவிலியப் பாடத்தோடு, முந்தைய தமிழ் மொழி பெயர்ப்புகளையும், பிரிந்த சகோதரர்களின் விவிலியப் பதிப்பையும் தந்து மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவும், திருப்பலிகளில் வாசிக்கப்படும் விவிலிய வாசகங் களுக்கு விளக்கம் அறிந்து கொள்ளவும் இவை உதவு கின்றன.
(2) தொலைக்காட்சி. மாதாடிவி, பவளம் டிவி போன்ற தொலைக்காட்சி அலை வரிசைகளும், இணையவழி யூட்யூப் வரிசைகளும் - எடுத்துக்காட்டாக, tamil catholic online tv, holy cross tv, arul thedal tv, power of god, lourdestvonline, our lady of health shrine sastri nagar, kc trichy, madha tv, trichy arungkodai illam, mercy tv, catholichubtv tamil, wisdom tv, pavalam communication, beschi kumbakonam, arputhar yesu tv, vailankanni shrine basilica, miriyam tv, catholic tamil tv, catholic online tv, loyola tv tamil, db media, alaihal media, claretian communications, arulvakku. jesus tv, snows basilica church. இவற்றில் சில தனிநபர்கள் வழியாகவும், சில பங்குத்தளங்கள் வழியாகவும் நடத்தப்படுகின்றன. திருப்பலி, இறைவார்த்தை வாசிப்பு மற்றும் பகிர்வு, பாடல்கள் போன்றவற்றை இங்கே நாம் காண முடிகிறது.
(3) செயலிகள். ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், மற்றும் விண்டோஸ் போன்ற செயல்திறன்பேசிகளின் இயங்குதளங்களின் செயலிகள் பல உருவாக்கப்பட்டு, தரவிறக்கம்
செய்யப்படுகின்றன.ஐஓ.எஸ் மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களைக் காட்டிலும், ஆன்ட் ராய்ட் இயங்குதளம் பலரால் பயன்படுத்தப்படுவதால் செயலிகள் இதில்தான் அதிகம் உள்ளன. tamil roman catholic bible, tamil bible rc – thiruviviliam, tamil catholic daily, tamil catholic prayer book, tamil bible rc daily verses, tamil catholic song book, best catholic prayer book, tamil christian prayer, punithargal – catholic saints in tamil, tamil rosary catholic, tamil catholic daily radio, tamil bible rc, audio bible, songs, my catholic church, iraiputhaham, tamil catholic bible – audio, readings, prayers, tamil bible, rc tamil bible – roman catholic bible, tamil christian songs, tamil christian chaplets, bible quiz tamil, tamil bible audio, tamil catechism, tamil rosary, madha fm, iraivarthai, all catholic mass songs, tamil rosary – jebamalai, radio catholic, tamil christian prayer, tamil catechism book போன்றவை அவற்றுள் சில.
(4) மின்னஞ்சல்கள். வத்திக்கான் வானொலி (தமிழ்ப் பிரிவு), அருள்வாக்கு கூகுள் குழுமம், திருஅவை செய்திகள் போன்ற மின்னஞ்சல் குழுமங்களும் இறைவார்த்தைப் பகிர்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.
(5) முகநூல் மற்றும் வலைப்பூக்கள். திருஅவை செய்திகள், அன்பின் மடல், அனிச்சம் (.aniccam.blogspot.com) போன்ற பக்கங்கள் அன்றாட இறைவார்த்தைப் பகிர்வை மேற்கொள்கின்றன.
(6) கட்செவி அஞ்சல்கள். தனிநபர்களும், குழுக்களும் இறைவார்த்தையைப் படங்களாகவும் வார்த்தைகளாகவும், ஒலி-ஒளிப் பதிவுகளாகவும் வாட்ஸ்ஆப் (கட்செவி) செயலி வழியாகப் பகிர்கின்றனர்.
மேற்காணும் மின்பதிப்புகளில் பத்து நன்மைகள் இருக்கின்றன:
(1) ஒரே கருவி, பல தளங்கள். ஒரே செயல்திறன்பேசியில் நான் விவிலியத்தை வாசிக்கவும், கேட்கவும், காணொளியாகப் பார்க்கவும் முடியும்.
(2) எங்கும் கிடைக்கும் தன்மை. நான் என் அறையின் மேசை மற்றும் அலமாரிக்குள் விவிலியத்தை அடக்கிவைக்கத் தேவையில்லை.
(3) புதியவற்றை அறிதல் எளிது. விவிலிய விளக்கவுரைகள் நூல்கள் வழியாக நாம் பல மணி நேரங்கள் கற்பதை, சில நொடிகளில் நாம் இங்கே அறிந்துகொள்ள முடியும்.
(4) பகிர்தல் எளிது. நான் பார்ப்பதையும், கேட்பதையும், படிப்பதையும் பலரோடும் விரைவாகவும் பகிர்ந்துகொள்ள முடியும்.
(5) மெய்நிகர் அனுபவம். இறைவார்த்தைப் பகிர்வு போன்ற காணொளிகளை நாம் பார்க்கும்போது, உரையாடல் நம் கண்முன்னே நடப்பது போலத் ரிவதால், பார்க்கத் தொடங்கிய சில நேரங்களில் நாமும் உரையாடலின் ஓர் உறுப்பினராக மாற முடிகிறது.
(6) வாசித்தல் எளிது. அச்சிடப்பட்ட எழுத்துக்களின் எழுத்துருவின் அளவை நாம் கூட்டவோ குறைக்கவோ முடியாது. ஆனால், மின்பதிப்புக்களில் நாம் அவ்வாறு செய்ய முடியும்.
(7) பல்பணியாக்கம் எளிது. நான் வாகனம் ஓட்டிக்கொண்டே இறைவார்த்தை கேட்கவும், காய்கறி வெட்டிக்கொண்டே தொலைக்காட்சியில் இறைவார்த்தைப் பகிர்வு பார்க்கவும் முடியும் (ஆனால், சாலையிலும் கத்தியிலும் கவனம் அவசியம்!).
(8) ஊடாடுதல் (interaction) சாத்தியம். காணொளி பார்த்துக்கொண்டிருக்கும் நான் அந்தக் காணொளியை வழங்குபவரோடு பின்னூட்டம் வழியாக நான் ஊடாட முடியும்.
(9) சுற்றுச்சூழல் இடறலுக்கு அப்பாற்பட்டது. காகிதம் இல்லா இப்பதிவுகளால் நாம் சுற்றுச்சூழலைக் காக்க முடியும். ஆனால், மின்சாரத்திற்கான தேவை இங்கே அதிகம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
(10) மீண்டும் மீண்டும் தரவிறக்கம் செய்து புதுப்பிக்க முடியும். விவிலியப் பதிப்புகளை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் இங்கே என்னால் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்.
மின்பதிப்புகள் பயன்பாடு வேகமாக வளர்ந்தாலும், ஆலய மற்றும் குழும வாசிப்பிற்கு நாம் இவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில்லை. மேலும், ‘ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம்’ என ஒதுக்கி வாழ்பவர்கள் மின்பதிப்புகளை விரும்புவதில்லை. ஏனெனில், ‘பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில், “பழையதே நல்லது” என்பது அவர் கருத்து’ (காண். லூக் 5:39).
ஆ. தொடுதிரைக்கும் நமக்கும் உள்ள தொலைவு
மின்தூக்கிகள் மற்றும் நகரும்படிக்கட்டு களின் வருகை எப்படி படிக்கட்டுகளை அகற்றிவிட வில்லையோ, அப்படியே மின்பதிப்புகள் அச்சுப் பதிப்புகளை அறவே நீக்கிவிடாது. தொடுதிரை பல நேரங்களில் நமக்குத் தொலைவிலேயே இருக்கிறது. அச்சுப் பதிப்புகளில் நாம் தொட்டுணரும் நெருக்கம் தொடுதிரையில் கிடைப்பதில்லை. மேலும், வங்கி, வணிகம், உணவு போன்ற செயலிகள்போல விவிலியத்தையும் வெறும் செயலியாக மாற்றிவிடும் அபாயம் இங்கே இருக்கிறது. மற்ற செயலிகளில் உள்ள வார்த்தைகள் - எடுத்துக்காட்டாக, விளம்பரங்களில் வரும் வார்த்தைகள் - தாங்கள் அறிவிப்பதை நிறைவேற்றுவதில்லை. ஆனால், இறைவார்த்தை தான் எந்த நோக்கத்திற்காக வந்ததோ அதை நிறைவேற்றாமல் திரும்புவதில்லை (காண். எசா 55:11).
இ. வைரலும் வாழ்வும்
திருப்பலி, அன்பியம், விருப்பக் குழுமம் என்ற இதுவரை நிகழ்ந்த இறைவார்த்தைப் பகிர்வு இன்று பல தளங்களுக்கு விரிந்துள்ளது; வளர்ச்சியைக் காட்டினாலும், நம் பகிர்வுகள் இன்னும் அருள்பணியாளர்கள் மையப் பகிர்வுகளாகவே உள்ளன என்பது சற்று நெருடலாக இருக்கிறது. இறைவார்த்தை அறிவிப்பு பணி திருமுழுக்கு பெற்ற அனைவரின் பணி என்பதையும் கடந்து, இவ்வுலகில் இருக்கிற எல்லாருடைய பணி என வரையறுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (காண். நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்கள் 111-134). நம்மைப் போன்ற மனிதர்களின் வாழ்வில் இறைவன் ஆற்றியே அளப்பரிய செயல்களின் இறையனுபவப் பகிர்வே நாம் கைகளில் ஏந்தும் இறைவார்த்தை எனில், நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் இறைவனின் உடனிருப்பு வைரலாக மாறி இந்த உலகம் முழுவதையும் பற்றிக்கொண்டால் நலம்! ஏனெனில், நம் வாழ்க்கைப் படகில் தாமாகவே உரிமையோடு ஏறி அமர்ந்துகொள்ளும் இயேசு, இன்று நம்மைப் பார்த்து, ‘ஆழத்திற்குச் சென்று (இண்டர்)நெட்டைப் போடுங்கள்’ (காண். லூக் 5:4) எனக் கட்டளையிடுகிறார். ‘அவரின் சொற்படியே நெட்டைப் போடுதல்’ சிறப்பு.