டுவிட்டர் செய்திகள்
ஒரு சமுதாயம் மனிதாபிமானமிக்கதாய் மாறுவது எப்போது?
சனவரி 12
“ஒரு சமுதாயம், தன்னில் மிகவும் வலுவிழந்த மற்றும், துன்புறும் மக்களுக்கு, உடன்பிறந்த அன்புணர்வில் அக்கறை காட்டி பராமரிக்கும்போது, அந்த சமுதாயம் அதிக மனிதாபிமானம் கொண்டதாய் உள்ளது”
“நாம் கொண்டிருக்கும் மிகப்பெரும் செல்வம், நாம் யார் என்பதைப் பொருத்தே அமைந்துள்ளது. அதாவது, நாம் பெற்றுள்ள வாழ்வு, நமக்குள்ளே இருக்கின்ற நன்மைத்தனம், கடவுள் தம் சாயலில் நம்மைப் படைத்து, நமக்கு அவர் அளித்துள்ள அழியாத அழகு ஆகியவற்றை பொருத்தது. இவையனைத்தும் நம் ஒவ்வொருவரையும், கடவுளின் கண்களில் விலைமதிப்பற்றவர்களாக, வரலாற்றில் நாம் ஒவ்வொருவரும், விலைமதிப்பற்றவர்கள் மற்றும், தனித்துமிக்கவர்களாக ஆக்குகின்றன”
சனவரி 11
’தன் வாழ்வின் பெரும்பகுதியை எளிமையாக வாழ்ந்து சென்ற இயேசுவின் எடுத்துக்காட்டு நம்மைத் தொடுவதாக உள்ளது. தினசரி வாழ்வின் மகத்துவத்தை இது வெளிப்படுத்துகின்றது, ஏனெனில், கடவுளின் கண்களுக்கு நம் ஒவ்வொரு செயலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது முக்கியத்துவம் நிறைந்தது’
’என் அன்பார்ந்த மகன் நீயே’ என நம் ஒவ்வொருவரையும் நோக்கி இறைவன் உரைக்கிறார்; இதுவே நம் ஆழமான தனித்துவ அடையாளம்’
நோயாளர் பராமரிப்பு, நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட உறவு
நோயாளிகளுக்கும், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் இடையே, நம்பிக்கை நிறைந்த உறவு அமைவதன் அடிப்படையில், குணப்படுத்துதல் இடம்பெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், சனவரி 12 ஆம் தேதி செவ்வாயன்று கூறினார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் 29 வது உலக நோயாளர் நாளுக்கென்று வெளியிட்டுள்ள செய்தியில், “உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்” (மத்.23,8) என்று, இயேசு, மத்தேயு நற்செய்தியில் கூறியிருப்பதை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை திருத்தந்தை வழங்கியுள்ளார்.
நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட உறவே, நோயாளிகளைப் பராமரிப்பதற்கு வழிகாட்டி என்பதை வலியுறுத்தி, உலக நோயாளர் நாள் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, நோயாளிகள் மீதும், அவர்களைப் பராமரிக்கின்ற நலவாழ்வு நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும், குழுமங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கு, இந்த உலக நாள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் துன்புறும் அனைவரோடும், குறிப்பாக, வறியோர் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர் ஆகியோரோடும் திருஅவையும், தானும் மிகுந்த அன்புகலந்த அக்கறை கொண்டிருக்கின்றோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவரின் வாழ்விலும் தேவையிலும் அக்கறையின்றி, நம் வாழ்வு, வெற்று வார்த்தைகளால் நிறைந்திருக்கும்போது, அந்த வாழ்வும், நாம் அறிக்கையிடும் நம்பிக்கையும், ஒத்திணங்கி இருக்காது என்று கூறியுள்ள திருத்தந்தை, இதனாலே இயேசு, போதிப்பதை செயலில் வெளிப்படுத்தாதவர்களைச் சாடியுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஒரு சமுதாயம், தன்னில் மிகவும் வலுவிழந்த மற்றும், துன்புறும் மக்களுக்கு, உடன்பிறந்த அன்புணர்வில் அக்கறை காட்டி பராமரிக்கும்போது, அந்த சமுதாயம் மனிதத்தை அதிகம் கொண்டிருக்கின்றது என்று கூறமுடியும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.
வெளிவேடம் மற்றும், சுயவழிபாடு ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படவேண்டுமெனில், மற்றவரோடு நேரடி உறவுகளை உருவாக்கவேண்டும், அவர்கள் உணர்வதுபோல் உணர்ந்து, அவர்கள் மீது பரிவன்பு காட்டவேண்டும், அவர்களுக்குப் பணியாற்றும் வழிகளைத் தேடும்போது அவர்களின் துன்பங்கள் நம் துன்பங்களாக மாறவேண்டும் என்று, இயேசு கூறுகிறார் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நோயும் நம்பிக்கையும்
நோய், நமது வலுவிழந்த நிலையையும், மற்றவரின் உதவி தேவைப்படுவதையும் உணரவைக்கின்றது என்றும், அது, வாழ்வின் பொருள்பற்றிய கேள்வியை எழுப்புகின்றது என்றும் தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, நம் வாழ்வில், புதிய மற்றும், ஆழமான வழிமுறைகளைத் தேடும்பொருட்டு, நம் நம்பிக்கையை கடவுள்முன் நிறுத்துவதற்கு, வாழ்வுபற்றி நாம் எழுப்பும் கேள்வி உதவுகின்றது என்று கூறியுள்ளார்.
இந்த விடயத்தில், யோபுவின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை, யோபுவின் அழுகுரலைக் கேட்ட கடவுள், யோபுவின் துன்பம், ஒரு தண்டனையோ அல்லது, தம்மிடமிருந்து அவரைப் பிரிப்பதோ அல்ல என்பதையும் உணரவைத்தார் என்றும் கூறியுள்ளார்.
நோயும், அதனைப் பராமரிப்பவர்களும்
நோய்க்கு பல முகங்கள் உள்ளன என்றும், தற்போதைய பெருந்தொற்று, நலவாழ்வு அமைப்புகளில் சமத்துவமின்மைகளை அதிகரித்துள்ளது என்றும், நோயாளிகள் பராமரிப்பில், வயது முதிர்ந்தோர், வறியோர், நலிந்தோர் போன்றோருக்கு எப்போதும் மருத்துவப் பராமரிப்புகள் கிடைப்பதில்லை என்றும், திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த பெருந்தொற்று காலத்தில், அர்ப்பணிப்போடும், மனத்தாராளத்தோடும் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், துறவியருக்கு, தன் நன்றியையும் பாராட்டையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு மே 13ம் தேதி, உலக நோயாளர் நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், அந்த உலக நாள், லூர்து அன்னை திருவிழாவாகிய, பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்தார்.