பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு
இறைவனிடம் சரணாகதி அடைவோம்!
ஆண்டவர் இயேசுவில் பேரன்பிற்குரிய வர்களே! ஆன்மிகத்தின் முதல்படி சரணாகதி அடைவது. ‘நான்’ என்ற எல்லையைக் கடந்து, ‘எனது’, என் ஆவல்கள், விருப்புவெறுப்புகள், இலட்சியங்கள் என யாவற்றையும் இறைவனிடம் கையளித்து விட்டு, அவரது பராமரிப்பில் அவரின் திருவுளத்திற்கேற்ப செயல்பட ஆயத்தமாக இருப் பதன் அடையாளம் அது. இறை-மனித உறவில் மிக உயர்ந்த நிலையும் அதுவேயாகும்.
இன்றைய வாசகங்களின் மையம் ‘இறைவனிடம் சரணாகதி அடைவதைப் பற்றி’ அமைந்திருக்கிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் மற்றும் நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு ஆகியோர் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்கள். அவரின் அழைப்பை எந்தவொரு நிபந்தனையு மின்றி ஏற்றுக்கொண்டு அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள். அவரிடம் முழுவதுமாக சரணாகதி அடைந்தார்கள். அவரின் திருவுளத்தை நிறைவேற்றத் தங்கள் உடல், பொருள், ஆவி என யாவற்றையும் கையளித் தார்கள். இறுதியில் நிலைவாழ்வை சொந்தமாக்கிக் கொண்டார்கள்.
திருமுழுக்கின் வழியாகச் சிறப்பான அழைக்கப்பட்டிருக்கும் நாமும், இறைவனிடம் சரணாகதி அடைந்து, நம் அன்றாட வாழ்வில் அவரின் திருவுளத்திற்கேற்ப வாழ கடமைப்பட்டிருக்கிறோம். மேலும், இன்று பாலர் சபைத் தினத்தைக் கொண்டாடும் நாம் பாலர்களை நம் மனத்திரையில் கொண்டு வருவோம். அவர்களில் மிளிரும் இறைச் சாயலை மதிப்போம். அவர்களது எதிர்கால வாழ்வு வளமும் நலமும் பெற திருஅவையோடு இணைந்து செயல்படுவோம். அதற்கான அருளை வேண்டி இந்த அன்பின் பலியில் நம்மைக் கையளிப்போம்.
முதல் வாசகம் (எசாயா 6:1-8)
யூதா மக்கள் மனம் மாறும் பொருட்டு, இறை வாக்குரைக்கும் மாபெரும் பணிக்காக, ஆமோட்சின் மகன் எசாயாவைத் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுக்கிறார் இறைவன். தன் மனித பலவீனத்தை தாழ்ச்சியுடன் எடுத்துக் கூறி எசாயா முதலில் மறுக்கிறார். இறைவன் எசாயாவை மன்னித்துத் தேற்றவே, அவரும் இறைவனின் பணிக்காக தன்னையே கையளிக்கிறார். இந்நிகழ்வை எடுத்துக்கூறும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல் : திபா 138:1-2, 2-3, 4-5, 7-8
பதிலுரை: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழுவேன்
இரண்டாம் வாசகம் (1கொரி 15:1-11)
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி திருஅவையை அழித் தொழிக்கும் நிலைப்பாடு கொண்டிருந்த சவுல், கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அவரிடம் சரணாகதி அடைந்து பவுலாக மாறிய பின் பல்வேறு விதங்களில் சித்ரவதைக்குள்ளாகிறார். துயரங்களை சந்திக்கிறார். கிறிஸ்துவுக்காக யாவற்றையும் தாழ்ச்சி யுடன் ஏற்றுக்கொண்டு திருஅவையைக் கட்டியெழுப்புகிறார். இதனை எடுத்துக்கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவி மடுப்போம்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 5:1-11
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. நல்வழிகாட்டும் தந்தையே இறைவா
திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், திருநிலையினர் ஆகியோர் உமது திருவுளத்திற்குத் தங்களை முழுவதும் கை யளித்து, உமது அரசு இம்மண்ணில் வர முழு மூச்சுடன் உழைக்க அவர்களுக்குத் தேவையான உடல்நலனையும் அருள் வரங்களையும் தரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2.நீதியை விரும்பும் இறைவா
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், நீதி வழங்கும் நீதிபதிகள் ஆகியோர் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் துறந்து, சாதி, மதம், மொழி, கருத்தியல், கட்சி போன்ற வேறுபாடுகளைக் கடந்து சமத்துவத்துடன் எல்லா மக்களுக்காகவும் கடமையாற்றி, சமூக நீதியினை நிலைநாட்ட முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தாயும் தந்தையுமான இறைவா
பாலர்கள் இந்த சமூகத்தின் உயர்ந்த செல்வங்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, அவர்களின் வளர்ச்சியில் தனி அக்கறை காட்டி அறநெறிகள், விழுமியங்களைப் போதித்து, எம் முன்னுதாரணத்தினால் வளமான தலைமுறையாக அவர்களை உருவாக்க ஏற்ற மனதினை எங்களுக்குத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிலைவாழ்வினை வழங்கும் இறைவா
எங்கள் குடும்பங்களிலிருந்து இறந்து போனவர்கள், நண்பர்கள், யாரும் நினையாதவர்கள் ஆகியோரின் ஆன்மாக்கள் மீது பேரிரக்கம் கொண்டு முடிவில்லாத அமைதியையும் நிலைவாழ்வையும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
5. உடனிருந்து ஊக்கமூட்டும் இறைவா
உம்மை விட்டு அகன்று எங்கள் விருப்பு வெறுப்புகளுடன் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் உம்மிடம் சரணாகதி அடைந்து உம் திருவுளம் எதுவெனத் தேர்ந்து தெளிந்து அதன்படி வாழ முன்வரத் தூண்டுதலும் உள்ளொளியும் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.