Namvazhvu
1. தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட நூல், திருத்தந்தைக்குப் பரிசாக... - 21.02.2021
Wednesday, 03 Mar 2021 10:41 am
Namvazhvu

Namvazhvu

அரமேய மொழியில், எழுதப்பட்ட, வரலாற்று புகழ் பெற்ற, பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதி நூல் ஒன்று, பிப்ரவரி 10 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

14 மற்றும் 15ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இந்த நூல், சிரியா வழிபாட்டு முறை வழிபாடுகளில், உயிர்ப்பு காலத்தில் பயன்படுத்தப்படும் இறைவேண்டல்கள் அடங்கிய ஒரு நூல்.

ஈராக் நாட்டின் பக்திதா அல்லது, கரக்கோஷ்  என்றழைக்கப்படும் நகரில், அமைந்துள்ள அல்-தஹீரா அமல உற்பவ பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த கையெழுத்துப் பிரதி, அந்த பேராலயம், இஸ்லாமிய அடிப்படைவாத ஐஎஸ்ஐஎஸ் குழுவால் தீக்கிரையானபோது, அதிக பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டது.

இத்தாலிய கலாச்சாரத் துறையும், உரோம் நகரில் அமைந்துள்ள நூல்களைப் பாதுகாக்கும் மையமும் இணைந்து, தீக்கிரையான இந்த பேராலயத்தையும், இந்த அரமேய நூலையும் புதுப்பித்துள்ளன.

இவ்விரு அமைப்பினரின் பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 10 ஆம் தேதி திருத்தந்தையரின் இல்லத்தில் சந்தித்த வேளையில், பாதுகாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட இந்த பழமை வாய்ந்த இறைவேண்டல் நூல், திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது.

பல்வேறு வழிகளில் சித்ரவதைகளை அடைந்து அமைதியிழந்துள்ள ஈராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்த இறைவேண்டல் நூல், அதற்குரிய ஓர் இல்லத்தை அடைந்துள்ளது என்று, இந்த நூலைப் புதுப்பித்த குழுவின் தலைவர், இவானா போர்சோட்டோ அவர்கள் திருத்தந்தையிடம் கூறினார்.

வருகிற மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் 8ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், இஸ்லாமிய அடிப்படை வாத ஐஎஸ்ஐஎஸ் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்ட கரக்கோஷ் பேராலயத்திற்கு அவர் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.