இத்தாலியில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரைகளை வத்திக்கானில், தன் நூலகத்திலிருந்தே வழங்கி வருகிறார். இந்த மறைக்கல்வி உரைகளில், அண்மைக் காலமாக, இறைவேண்டல்களின் பல்வேறு பரிமாணங்களை விளக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 10, புதனன்று, ஒவ்வொரு நாளும் கடவுளோடு நாம் மேற்கொள்ளும் உரையாடல் பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில், பவுலடிகளார் கொலோசேயருக்கு எழுதிய திருமடலிலிருந்து (கொலோ.3:16-17) ஒரு சிறிய பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையை முதலில் இத்தாலிய மொழியில் துவக்கினார்.
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புதன் மறைக்கல்வியுரைகளில் இறைவேண்டலை மையப்படுத்தி சிந்தித்துவரும் நாம், செபச்சூழலில் கடவுளோடு நாம் மேற்கொள்ளும் உரையாடல் பற்றி இன்று சிந்திப்போம். ஒவ்வொரு நாளும், நம் இல்லங்களில், மேற்கொள்ளும் பயணங்களில், ஒவ்வொரு நொடிப்பொழுதும் செய்யும் வேலைகளில், அல்லது, பணியில், நாம் கடவுளோடு உரையாடலை மேற்கொள்கிறோம். நம் எண்ணங்கள் மற்றும், செயல்கள் அனைத்தும், ஒவ்வொரு நாளும் ஆண்டவரோடு உரையாடுவதன் ஓர் அங்கமாக இருக்கவேண்டும். “நேற்று அல்லது நாளைய நாளில் இல்லாமல், இன்று, இப்போது, கடவுளைச் சந்திக்கிறோம்” (எண்.2659) என்று, மறைக்கல்வி போதிக்கின்றது. நம் அன்றாட வாழ்க்கை, இவ்வுலகைச் சார்ந்ததாக இருந்தாலும், இறைவேண்டலில், கடவுளுக்கு அர்ப்பணிக்க முடியாத நிலை என்று, எதுவும் கிடையாது. மற்றும், அது, அவரோடு ஆழமான ஒன்றிப்பு கொள்ளும் தருணமாக மாறுகிறது. இறைவேண்டலில், கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாக அறியவரும்போது, நம்மைச் சுற்றிலும் இருப்போர், முக்கியமாக, வறியோர், மகிழ்வின்றி இருப்போர், மற்றும், தேவையில் இருப்போரை அன்பிலும், ஒருமைப்பாட்டுணர்விலும் தழுவிக்கொள்வதற்கு, நம் இதயங்கள் பரந்து விரிகின்றன. மனிதர் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றால், ஒரு சிறுதுளி தண்ணீரும் நம்மை அழித்துவிடும் என்பதை, பிளேசி பாஸ்கல் அவர்கள் ஒருமுறை கவனித்திருக்கிறார் (காண்க.எண்ணங்கள் எண்.347). இருப்பினும், இறைவேண்டல், நம் பலவீனத்தில் நம் பேராற்றலாக உள்ளது. ஏனெனில் இறைவேண்டல், நம் உலகத்தில் அற்புதங்களை ஆற்ற முடியும். வாழ்வையும், வரலாற்றையும் மாற்ற இயலும். நீதியும், அமைதியும் நிறைந்த இறையாட்சி வருவதற்கு பணியாற்றவும் முடியும்.
இவ்வாறு புதனன்று மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாக் காலத்திலும், குறிப்பாக, இந்த பெருந்தொற்றுக் காலத்தில், ஒவ்வொரு நாளும் இறைவேண்டலில் ஆண்டவரிடம் நெருக்கமாகச் சென்று, நம் சொந்த தேவைகளையும், நம்மைச் சுற்றியுள்ள உலகின் தேவைகளையும் அவரிடம் எடுத்துரைக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார். மேலும், வட இந்தியாவில் திடீரென்று பனிப்பாறை சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தன் அருகாமை மற்றும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்தார். இறுதியில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைக்கட்டும் என்று செபிக்கின்றேன் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார்.
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஞாயிறு மூவேளை செப உரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 7 வருகிற ஞாயிறு முதல் மீண்டும் தொடர்வார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.