Namvazhvu
சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கும் புதிய பாதைகள்...-28.02.2021
Wednesday, 03 Mar 2021 11:42 am
Namvazhvu

Namvazhvu

மனித சமுதாயம், நிச்சயமற்ற சூழல்களையும் சவால்களையும் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், வருங்காலத்  தலைமுறைகளின் ஒத்திசைவு, மற்றும் நல்வாழ்வுக்காக, சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கும், புதிய மற்றும், படைப்பாற்றல்மிக்க பாதைகளைக் காண்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு, கல்வியாளர் குழு ஒன்றிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 12 ஆம் தேதி வெள்ளியன்று, சுவீடன் நாட்டு கர்தினால் ஆன்டர்ஸ் ஆர்போரெல்லியஸ் அவர்கள் தலைமையில், திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பன்னாட்டு கல்வி நிறுவனத்தின் 13 பிரதிநிதிகளிடம் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

சந்திப்புக் கலாச்சாரம்: பன்னாட்டு உறவுகள், பல்சமய உரையாடல், மற்றும் அமைதிஎன்ற தலைப்பில், இந்த பிரதிநிதிகள், தன்னிடம் அளித்த நூலுக்கு நன்றி தெரிவித்த  திருத்தந்தை, உலகளாவிய நலவாழ்வை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று, மனிதக் குடும்பத்தில், சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தி வருகின்றது என்று கூறினார்.

உலகின் மதங்களுக்கு இது முன்வைத்துள்ள வாய்ப்புக்கள் மற்றும், சவால்களுக்குப் பதிலளிக்க, மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை வரவேற்றுள்ள திருத்தந்தை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும், தூதர்களாகிய இப்பிரதிநிதிகளும், அவர்களோடு பணியாற்றுவோரும், இத்தகைய ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினார்.

இந்த பிரதிநிதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளில், ஏழைகள், மற்றும் விளிம்புநிலையில் உள்ளோருக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உலக அளவில் பொதுவான நன்மையைத் தேடுவதில், மனங்களும், இதயங்களும் இணைந்த, ஒருங்கிணைந்த அணுகுமுறை  விரும்பப்படுகின்றது என்று கூறினார்.

அனைவரின் உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கு, அரசியல் மற்றும், மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாளும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றும், சந்திப்புக் கலாச்சாரம், ஒன்றுபட்ட, மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட உலகை அமைப்பதற்கும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், அடித்தளமாக அமையும் என்றும் திருத்தந்தை கூறினார்.

2019 ஆம் ஆண்டில், ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்ற கூட்டத்தின் கனியாக, “சந்திப்புக் கலாச்சாரம்: பன்னாட்டு உறவுகள், பல்சமய உரையாடல், மற்றும் அமைதிஎன்ற தலைப்பில், நூல் ஒன்றை இந்த பிரதிநிதிகள் உருவாக்கியுள்ளனர்.

மதங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிப்பதற்கு ஆதரவாக, சுவீடன் திருஅவை மேற்கொண்ட இம்முயற்சிக்கு, கர்தினால் Anders Arborelius  அவர்கள் அளித்த ஆதரவுக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார்.