Namvazhvu
3. எத்தியோப்பியாவிற்கு இத்தாலிய ஆயர்கள், 5 இலட்சம் யூரோ உதவி-14.03.2021
Wednesday, 10 Mar 2021 09:38 am

Namvazhvu

இத்தாலிய மக்கள் தங்கள் ஊதியத்தின் 0.8 விழுக்காட்டை அரசு வழியாக தலத்திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கென வழங்குவதிலிருந்து, 5 இலட்சம் யூரோக்களை எத்தியோப்பியாவின்  திக்ரே பகுதி மக்களுக்கு வழங்க உள்ளதாக இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

போதிய சத்துணவின்மையாலும், நல நெருக்கடிகளாலும் துயர்களை அடைந்துவந்த எத்தியோப்பியாவின் கூபைசயல பகுதி மக்கள், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஆயுத மோதல்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் துன்பங்களை அடைந்துவரும் நிலையில், நிதியுதவியை வழங்கி நிலைமைகளை ஓரளவு சீரமைக்க இத்தாலிய ஆயர் பேரவை முன்வந்துள்ளது.

பல இலட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில், ஏற்கெனவே எத்தியோப்பியத் தலத்திருஅவை, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் துணையுடன், உதவிகளை ஆற்றிவரும் சூழலில், இத்தாலிய ஆயர்களின் இவ்வுதவி, மக்களின் பசியைப் போக்க பேருதவியாக இருக்கும் என உதவி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

காரித்தாஸ் அமைப்பின் வழியாக 5 இலட்சம் யூரோ உதவித்தொகையை வழங்கவுள்ள இத்தாலிய ஆயர்கள், இத்தொகையை மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள், அடிப்படை வசதிகள் போன்றவைகளை வழங்க பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் அடிப்படை சமுதாய வசதிகளை வழங்கும் அமைப்புகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், நல மையங்கள் தாக்கப்படுவதால் பல நலப்பணியாளர்கள் வேலையை விட்டு விலகிச் செல்வதாகவும், உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி எத்தியோப்பியாவில் 22 விழுக்காடு நலவாழ்வு மையங்களே செயல்பாட்டில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் அண்மைக்கால மோதல்களால் 13 இலட்சம்பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர், அறுபதாயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.