Namvazhvu
திருப்பீடத்தின் 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி- 14.03.2021
Wednesday, 10 Mar 2021 09:42 am
Namvazhvu

Namvazhvu

திருப்பீடத்தின் பொருளாதார செயலகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, பொருளாதார அவையால் அங்கீகரிக்கப்பட்ட, 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 18 ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் ஒப்புதல் தெரிவித்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை ஒப்புதல் தெரிவித்துள்ள இந்த வரவு செலவுத் திட்டம் பற்றி அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத் தகவல் தொடர்பகம், இவ்வாண்டு மொத்த வருவாய் 26 கோடியே நான்கு இலட்சம் யூரோக்கள் என்றும், செலவு, 31 கோடியே ஒரு இலட்சம் யூரோக்கள் என்றும் கூறியுள்ளது. அதேநேரம், நான்கு கோடியே 97 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று, பொருளா தாரத்தில் உருவாக்கியுள்ள கடுமையான தாக்கத்தையும் தவிர்த்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேலையில் பாதுகாப்பு வழங்கப்பட, தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கிறார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது

புனித பேதுரு காசு நிதி

பொருளாதார  கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில், மிகுந்த வெளிப்படைத்தன்மை அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து விண்ணப்பித்துவருவதை முன்னிட்டு, முதன்முறையாக, புனித பேதுரு காசு நிதி (Obolo)  மற்றும், ஏனைய நிதி அமைப்புகள், 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது.

 

இம்முறையில், வரவு நான்கு கோடியே 73 இலட்சம் யூரோக்கள் எனவும், உதவிகள் வழங்க ஒரு கோடியே 70 இலட்சம் யூரோக்கள் எனவும், மொத்தத்தில், புனித பேதுரு காசு நிதி மற்றும், ஏனைய நிதி அமைப்புகளிலிருந்து கிடைக்கும் நிகர இருப்பு, 3 கோடியே 3 இலட்சம் யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில், திருப்பீடத்திற்கு, வரவு 21 விழுக்காடு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.