மூவேளை செப உரை - விசுவாசப் பாதையில் நமக்கு முன்னே அன்னை மரியா
குருத்து ஞாயிறு அன்று திருப்பலி முடிந்த பிறகு, நண்பகல் மூவேளை செபத்தையும் செபித்துவிட்டு, அவ்வேளையில் அன்னைமரியாவின் எடுத்துக்காட்டு குறித்து அவர் வழங்கிய மூவேளை செப உரை:
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நாம் புனித வாரத்தைத் துவக்கியுள்ளோம். இரண்டாவது முறையாக நாம் பெருந்தொற்றுச் சூழலுக்குள் இந்த புனித நாட்களை வாழ்கிறோம். கடந்த ஆண்டு, இது மிகுந்த துயரம் தருவதாக இருந்தது. இந்த ஆண்டு, மேலும் சோதனைகளையும், துயரத்தையும் தருவதாக உள்ளது. பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக மாறியுள்ளது.
இந்த வரலாற்று, சமுதாயச் சூழலில் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் சிலுவையை எடுத்துள்ளார். இந்தச் சூழலை, அதாவது, உடல் மற்றும் மனத்தளவில் அனுபவிக்கும் தீமைகளை அகற்றிட, அவர் சிலுவையை தன் தோள்களில் எடுத்துள்ளார். இன்றைய நெருக்கடியை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தீமையானது மக்களிடையே நம்பிக்கையின்மையையும், விரக்தியையும், முரண்பாடுகளையும் விதைப்பதை தடுப்பதற்கென சிலுவையைச் சுமக்கிறார் இயேசு. அவர் சிலுவையை எடுத்துள்ளார். நாமென்னச் செய்கிறோம்? நாமென்ன செய்யவேண்டும்? நாம் என்ன செய்யவேண்டுமென்பதை நமக்குக் காண்பிக்க வருபவர், இயேசுவின் முதல் சீடரும், அவரின் தாயுமாகிய அன்னை மரியா. அவர் தன் மகனைப் பின் தொடர்ந்துச் சென்றார். அன்னை மரியா, தன் பங்காக, துயர்களையும், இருளான நேரங்களையும், குழப்பங்களையும் தாங்கிக்கொண்டு, பாடுகளின் பாதையில், விசுவாச விளக்கை ஏந்தியவராக நடந்துசெல்கிறார். இறையருளுடன், நாமும் இப்பாதையில் தொடர முடியும். நாம் நம் தினசரி வாழ்வின் சிலுவைப் பாதையில், துன்ப துயர்களை அனுபவிக்கும் எண்ணற்ற நம் சகோதரர் சகோதரிகளைச் சந்திக்கிறோம். அவர்களை வெறுமனே தாண்டிச் செல்லாமல், நம் இதயங்கள் கருணையால் கசிந்திட அனுமதித்து, அவர்களுக்கு நெருக்கமாகச் செல்வோம். அப்போதுதான், சீரேன் ஊராராகிய சிமியோன் போல் நாம் நமக்குள் ‘ஏன் நான்’ என எண்ணும் நிலை உருவாகலாம். அப்போது நாம், தகுதியற்றவர்களாக இருந்தும், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடை நம்மைத் தொடுவதை உணர்வோம். விசுவாசத்தின் பாதையில் எப்போதும் நமக்கு முன்னே நடந்துசெல்லும் அன்னை மரியா நமக்கு உதவுவாராக.