Namvazhvu
பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு - 18.04.2021  எம்மாவுஸ் பாதையில் இயேசுவின் திருப்பலி - 11.04.2021
Wednesday, 07 Apr 2021 11:54 am
Namvazhvu

Namvazhvu

 

 

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு - 18.04.2021 

(திப 3:13-15, 17-19, 1 யோவா 2:1-5, லூக் 24:35-48)

எம்மாவுஸ் பாதையில் இயேசுவின் திருப்பலி
இன்றைய நற்செய்தியில் எம்மாவுஸ் சென்ற இரு திருத்தூதர்களுடன் இயேசு வழிநடக்கின்றார். தாம் உயிர்த்த மாலையே இது நிகழ்கின்றது. அதாவது, உயிர்த்த உடனே இயேசு தம் திருத்தூதர்களைச் சந்தித்து வழிநடத்தும் பணியைத் துவக்கிவிட்டார். லூக்கா நற்செய்தியின்படி உயிர்த்த இயேசு நிகழ்த்தும் இந்த முதல் சம்பவம் திருப்பலி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. 
நம்பிக்கையில் குழந்தைகளாயிருக்கும் சீடர்கள்
இன்றைய நற்செய்தியில் 24:19 இயேசு இறைவாக்குரைக்கும் மனிதராக இருந்தார் (“இறைவாக்கினராக”) என்று சீடர்கள் குறிப்பிடுகின்றனர். ‘மனிதர்’ என்ற சொல் பல மொழிபெயர்ப்புகளில் காணப்படுவதில்லை. அவர்கள் இயேசுவை இன்னும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த வாக்கியம் குறிக்கின்றது. இயேசுவுக்கு எருசலேமில் நிகழ்ந்தவை ஒன்றும் தெரியாது என்று கூறும் அவர்களுக்குத்தான் உண்மையில் நடந்தவை தெரியவில்லை (24:18). அதாவது, நம்பிக்கை வாழ்வில் அவர்கள் குருடர்கள். இயேசு அவர்கள் எதிர்பார்த்தது போன்ற விடுதலை வீரனாக இல்லை. உலகிலே இதுவரை நிகழாத ‘உயிர்ப்பு’ நிகழும் வேளையில், அதை நம்புவது கொஞ்சம் கடினமாகும். அந்த சாதாரண மனநிலையில்தான் இந்த இருவரும் (மற்ற சீடர்களும்) செயல்பட்டனர். இயேசு அவர்களை ‘அறிவிலிகளே’ என்று கடிந்து கொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் அறிவிலிகள் என்பது விவிலியம் (வாய்ப்பு இருந்தும்) தமது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் சீரமைக்க அனுமதிக்காதவர்களைக் குறிக்கின்றது. இறுதியில் இயேசு தம்மோடு பேசியபோது நமது உள்ளம் உருகவில்லையா? (24:32) என்று தம் குற்றங்களை நினைத்து இருவரும் வருந்துகின்றனர். உரையாடலின்போது இயேசு அவர்களின் உள்ளத்தைக் கிளறி ஆன்மசோதனை செய்ய அழைக்கின்றார். இறுதியில் இருவரும் மனம்வருந்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையில் வலுபெற்று நற்செய்தி அறிவிக்கச் செல்கின்றனர். இதுவே திருப்பலியின் பாவ மன்னிப்பாக அமைகின்றது.
நற்செய்தியை விளக்கும் இயேசு
இயேசு அந்த இரு சீடர்களுக்கும் நற்செய்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி அவர்களின் இதயங்கள் பற்றியெரியும் அளவு செயல்பட்டார். மோசே மற்றும் இறைவாக்கினர் என்ற வாக்கியம் பழைய ஏற்பாடு முழுவதையும் சுட்டிக்காட்டுகின்றது. வசனம் 24:27ஐ ஆழ்ந்து கண்ணோக்கும்போது இயேசு நீண்டநேரம் அவர்களுக்கு அனைத்தையும் விளக்கியிருக்க வேண்டும். நற்செய்தியில் கடவுளின் விருப்பமும் எண்ணங்களும் அன்பும் வார்த்தை வடிவில் பிரசன்னமாகியுள்ளன. கடவுளே மனிதனோடு கலந்து உடனிருப்பதன் வார்த்தைகளின் வடிவங்கள் அவை. உலகிற்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதே இயேசுவின் வருகைக்கான தயாரிப்பும் தொடங்கிவிட்டது. விவிலியத்தில் ஏறக்குறைய 40,000 வாக்குறுதிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றுள் பல நிறைவேறிவிட்டன. மீதியிருப்பவையும் வருங்காலத்தில் கட்டாயம் நிறைவேறும் (எபி 1:1). ஏற்கனவே வாக்களிக்கப்பட்டவை நிறைவேறியது, மீதியுள்ளவையும் கட்டாயம் நிறைவேறும் என்பதற்கான உறுதிப்பாடாகும். மானிட இறப்பிற்குபின் நிகழவிருப்பது நற்செய்தியில் காட்சிப்படுத்தப்படுகின்றது. இனிமேல் சீடர்கள் அனைவரும் தமது நம்பிக்கைக் கண்களால் விண்ணக நிகழ்வுகளைக் காண்பர், அதையே அறிவிப்பர். மேலும், தாம் உயிர்த்த கடவுள் என்பதை எண்பிக்க இயேசு இவ்விடத்தில் காயப்பட்ட தமது கைகளையும் கால்களையும் காட்டவில்லை. மாறாக கடவுளின் வார்த்தையை விளக்குகின்றார். கடவுளின் வார்த்தையே அடிப்படை நம்பிக்கையின் விதைகள். கடவுளைப் பற்றிய தெளிவான அறிவில்லாத நிலையே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமாகும் (ஓசே 4:1-2). கடவுளை அவருக்கே உகந்த முறையில் வழிபட அவரைப் பற்றிய சரியான அறிவு தேவைப்படுகின்றது.
அழைக்கும்போதெல்லாம் உடன்வரும் இயேசு
இரு சீடர்களை நோக்கி இயேசுவே விருப்பத்தோடு வருகின்றார் (24:17). இரு சீடர்கள் அழைக்கும்போது இயேசு அவர்களுக்கு செவிகொடுத்து அவர்களுடன் உணவருந்த செல்கின்றார். மக்களின் கூக்குரலைக் கேட்க அவரது செவிகள் எப்போதும் திறந்திருக்கின்றன. தம் மக்களுக்கு வாழ்வளிப்பதற்காகவே வாழும் இயேசு. நாம் அவரது அருகில் இருப்பதைவிட அவர்தான் நமது அருகில் அதிகமாக இருக்கின்றார். நமது இதயக்கதவைத் திறக்கும்போது நம்மோடு பந்தியமர்கின்றார் (திவெ 3:20). ஆண்டவரே பேசும், உம் அடியேன் கேட்கின்றேன் என்று செபிக்கும்போது வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டும், ஆறுதல் கொடுத்துக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருப்பார். உண்மையான மக்கள் பணியாற்றும்போது அறிவிப்போர் குரலாகவும் ஆறுதலாகவும் அவரே செயல்படுவார். தங்குதல் (24:29) சிறப்புப் பொருள் கொண்டது. இயேசுவோடு உயிரார்ந்த முறையில் இணைந்து, வாழ்வு சக்தியை அவரிடமிருந்து பெறுவதை இந்த ‘தங்குதல்’ குறிக்கின்றது. திராட்சைச் செடி கொடியோடு இணைந்திருப்பது போன்ற உறவைக் குறிக்கின்றது. 
அப்பத்தை உடைத்துத் தரும் இயேசு
இங்கு உணவு உண்ண அழைப்புப்பெறும் இயேசு, சிறிது நேரத்தில் அப்பத்தைப் பகிர்ந்தளிப்பவராக மாறிவிடுகின்றார். அவரை நாம் நம்முடன் வாழ அழைக்கும்போது அவரே நமக்கு வாழ்வு கொடுப்பவராக (வாழ்வு தரும் உணவாகவும், அந்த உணவைத் தருபவராகவும்) மாறிவிடுவார். அவர்களோடு உண்ணும்போது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு, கொடுக்கின்றார் (24:29, லூக் 9:16). இங்கு இயேசு அப்பத்தைப் புனிதப்படுத்துகின்றார் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் இது நற்கருணை ஆசிர்வாதம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. பேசி முடித்தபின் அப்பத்தை உடைத்துக் கொடுக்கும்போது அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொள்கின்றனர். தியாநோய்கோ (கண்கள்) திறத்தல் (24:31) என்ற கிரேக்க வினைச்சொல் புதிய ஏற்பாட்டில் எட்டுமுறை பயன்படுத்தப்படுகின்றது. (மாற் 7:35, லூக் 2:23) தவிர மற்ற இடங்களில் (லூக்கா மட்டுமே மற்ற இடங்களில் பயன்படுத்துகின்றார்) திருவெளிப்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் என்ற பொருள்கொண்டது இந்த சொல். 
இன்றும் உயிர்த்த இயேசு நம் கண்களுக்குத் தெரியும் வகையிலே அதிசயங்களை நிகழ்த்துகின்றார். குருடனுக்குப் பார்வை தருவதை அனைவரும் கண்டனர். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொடுத்தபோது மக்கள் அதை அனுபவித்தனர். ஒவ்வொரு திருப்பலியிலும் அப்பத்தைப் பிட்கும்போது அவரை நாம் அடையாளம் காண முடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவை உணவுண்ண அழைத்தது மாலை நேரமாகும். இயேசு அப்பத்தைப் பலுகிப்பெருக செய்ததும் மாலை நேரமே (லூக் 9:12). இந்தப் பகிர்வுக்குப்பின் இயேசு அந்த இருவருடன் நிரந்தரமாக வாழ்வார். சாதாரணமாக, உணவைப் பகிர்ந்து கொள்வது உறவைப் பகிர்ந்து கொள்வதாகும். நமது வாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வேளையில் மற்றவர்களின் மத்தியில் வாழும் இயேசு நமக்குத் தென்படுவார். எனவே, சீடர்களைப் பந்தியில் அமர்த்தி பாதம் கழுவிய சேவை வாழ்வே நமது வழிமுறையாக வேண்டும்.
அறிவிக்கும் சீடர்கள்
அந்த இரண்டு சீடர்களும் எருசலேமிற்குத் திரும்பிச் சென்று, இயேசுவின் உயிர்ப்பை எல்லாருக்கும் அறிவிக்கின்றனர். பேதுருவும் ஒரு காலத்தில் இயேசுவை மறுதலித்தார். இயேசுவின் பேரிரக்கத்தால் மறுவாழ்வு பெற்ற பேதுரு திருத்தூதர் பணியில் அனைவரும் வாழ்வு மாற்றம் பெற அழைக்கின்றார். உயிர்த்து, மாட்சியடைந்த (24:26) இயேசு வார்த்தை வடிவில் பேசுகின்றார் (அன்று வார்த்தை மானிட உருவம் எடுத்தது. இன்று வார்த்தை வடிவில் செயலாற்றுகின்றது). நற்கருணையில் தம்மை உடைத்துக் கொடுக்கின்றார். அதைக் கேட்கும்போதும் காணும்போதும் நமது உள்ளம் உருகாவிட்டால் நாம் இன்னும் பாவநிலையில்தான் வாழ்கின்றோம். ஒவ்வொரு நாளும் இயேசு பீடத்தில் தம்மை இவ்வாறு காட்சிப்படுத்துகின்றார். இயேசு இல்லாத நாளெல்லாம் இருளில் வாழும் நாளே (24:29). லூக்கா, யோவான், பவுல் அனைவரும் இருளை வெளிச்சத்திலிருந்து வேறுபடுத்துகின்றனர் (லூக் 22:53). வெளிச்சத்தைத் தேடுவோரிடம் இருள் எள்ளளவும் இல்லை. அவர்கள் உண்மையில் உயிர்த்தோற்றங்கள். கடவுளன்பை ஒரு கையிலும் பிறரன்பை மற்றொரு கையிலும் இறுகப்பிடித்துக்கொண்டு வழிநடப்பவர்கள்.
உயிராற்றலுடன் தம் மக்களுடன் வழிநடக்கும் உயிர்த்த இயேசு
1. இந்த இருவரும் பன்னிருவர் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. இயேசுவால் அழைப்புப் (திருமுழுக்கு) பெற்ற ஒவ்வொருவரும் திருத்தூதர்களே (மத் 28:19) என்ற சிந்தனை இங்கு அழுத்தம் பெறுகின்றது. (பதினொரு சீடர்களுக்கு முன்) கல்லறைக்குச் சென்ற பெண்களும்; சீடர் குழுவைச் சேர்ந்தவர்களே (24:24). திருமுழுக்கு பெற்ற அனைவரையும் சீடர்களாக திருத்தூதர் பணி கணிக்கின்றது. இயேசு அனுபவம் பெற்ற அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கும் கடமை உண்டு. 2. மூன்றாம் மனிதர்போல் தம்மோடு நடக்கும் இயேசுவை சீடர்கள் தொடக்கத்தில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தமது மக்களின்றி தமக்கு வேறு சிறப்பில்லை என்று கருதும் இயேசு, நமது கண்களுக்குத் தெரியாத முறையில் இன்றும் நம்முடன் வழிநடக்கின்றார். காயப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிலுவையில் அறையுண்ட இயேசுவைப் பிரதிபலிக்கின்றார். தேவையில் உழலும் ஒவ்வொருவரையும் இயேசு தம் அயலானாகக் காட்டலாம். சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளின் மத்தியில் அவரது முகம் தென்படலாம். சீடனுக்கு கடவுளின் மக்களை அன்புசெய்யும் கடமையுண்டு. நம்பிக்கை என்ற நங்கூரத்தில் வேரூன்றாத எவரும் கடவுளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 3. அந்த இரண்டு சீடர்களின் உள்ள ஏக்கங்களை நன்கு தெரிந்துள்ள இயேசு, அவர்களுக்கு விவிலிய விளக்கம் தருகின்றார். நமது உள்ள ஏக்கங்களும் அவருக்குத் தெரியும். நமது விடை காண வினாக்களுக்கு சரியான பதில் அவரிடமிருந்து கிடைக்கும். நமது வருங்காலம் அவரது கையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவரே முன்வந்து நம்முடன் பேசுவார். இந்த இரு சீடர்கள் போல் அதற்குச் செவிகொடுத்துக் கேட்போர், இயேசுவையே நிலையான பரிசாகப் பெறுவர். 4. உயிர்த்த இயேசு வெறும் ஆவியல்ல. அவர் பேசுவதை மக்களால் புரிந்து பொருள்கொள்ள இயலும். உடன் அமர்ந்து நற்கருணையைப் பகிர்கின்றார். தகுதியுள்ள மனநிலையில் அந்த அப்பத்தை உடைக்கும்போதும், நாம் நம்மையே மற்றவர்களுக்கு உடைத்துக் கொடுக்கும்போதும் அவரை அடையாளம் காண இயலும். 5. சிலர் அவரைக் கல்லறையில் தேடினர். அவரோ அங்கில்லை. அவர் சீடர்களின் வாழ்விடங்களில் நுழைகின்றார். அவர்களின் வாழ்வுப்பாதையில் வழிநடக்கின்றார். அவர் வாழ்வோரின் கடவுள் (24:23). அவர் இறந்துவிட்டார் என்று இந்த இருவரும் நினைக்க அவர் உயிரோடு நடமாடுகின்றார் என்பதை லூக்கா அடிக்கோடிடுகின்றார். 6. இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு தூதர்களும் மனம் உடைந்த நிலையில், கலங்கிய உள்ளத்தோடு, இயேசு தம்மோடு இல்லை என்ற விரக்தியில் எருசலேமை விட்டு வெளியே செல்கின்றனர். அவர்களின் உள்ளத்திலே இருள். இயேசுவின் இஸ்ரயேல் மீட்புத் திட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்று கவலையுற்றனர். இந்த இருவரும் அனைத்து சீடர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றனர். இயேசுவோ அவர்களுக்கு நிலையான ஆறுதலாகின்றார். வாழ்வில் எல்லாரும் கைவிட்டுவிடும் நேரத்தில் கடவுளே தேறுதல் தரும் ஆற்றலாகின்றார். 7. இயேசு தம்மைத் திட்டுவதையும் பொறுத்துக் கொள்கின்றார் (24:18). குஞ்சு மிதித்துக் கோழி ஊனமாகப் போவதில்லை. கிளைகள் மரத்திற்குப் பாரமா? அவர்களின் மனதை வெற்றிகொண்டபின் நற்செய்தி அறிவிக்கின்றார்.
இயேசுவை அடையாளம் காண்போம்
தொழுநோயாளர்கள் மாற்றுருவில் வரும் இயேசுக்கள். சின்னஞ்சிறியவர்கள் அனைவரும் குழந்தை இயேசுக்கள். குற்றமே செய்யாமல் சிறையில் தள்ளப்படும் மாசற்றவர்கள் சிலுவை சுமக்கும் இயேசுக்கள். அரவணைக்க ஆளின்றி தவிக்கும் பெண்கள் வீடின்றி குழந்தையைப் பெற்றெடுக்கும் மரியாக்கள். யாருக்கு நமது உதவி தேவையோ அவர்களே நமது அயலான்கள். நமது வாழ்வின் வழித்தடங்களில் (தங்களின் சொந்த அடையாளங்களை இழந்து) உடன் நடக்கும் இயேசுக்களை அடையாளம் காண்போம். கடவுளின் வார்த்தைகளை நாம் விளக்கும்போது, மற்றவர்கள் விளக்குவதைக் கேட்கும்போது, ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், கொடுமைக்குள்ளானோர், அரவணைக்க ஆளின்றி தள்ளாடுவோர் போன்ற அனைவரையும் தம் கரம் நீட்டிக் காப்பது நமது கடமை என்பதை உணர்வோம். நற்செய்தி அறிவிப்பில் ஏழைகளை மறந்துவிடக்கூடாது என்பது பவுலின் அறிவுரையாகும் (கலா 2:10). இயேசு தம்மையே உடைத்துக்கொடுக்கும் நற்கருணை விருந்தில் பங்கெடுக்கும் வேளையில் தகுதியுள்ள முறையில் அதில் பங்கெடுப்போம். ஏனெனில் தகுதியற்ற முறையில் பலி ஒப்புக்கொடுப்போர், பலியில் பங்கெடுப்போர் ஆண்டவரின் திரு உடலுக்கும் திரு இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் செய்கின்றனர் (2 கொரி 11:27) என்பதை மனதில் நிறுத்துவோம். தம்மையே உடைத்துக்கொடுக்கும் இயேசுவை நமது வாழ்வின் உதாரணமாக்கி நம்மையே மற்றவர்களுக்காக உடைத்துக்கொடுக்கச் செல்வோம். தியாக வாழ்வுக்கு இட்டுச்செல்லாத திருவிருந்து யூதாஸின் பங்காளிகளாக நம்மை மாற்றிவிட வாய்ப்புண்டு (யோவா 13:27-30).