உயிர்ப்புப் பெருவிழா - திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி
ஏப்ரல் 4 ஆம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவின் காலைத் திருப்பலியைத் தொடர்ந்து, இத்தாலி நேரம், நண்பகல் 12 மணிக்கு, ‘ஊருக்கும் உலகுக்கும்’ எனப் பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ வாழ்த்துச் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்.
’இயேசு, தான் முன்னறிவித்தபடியே உயிர்த்துவிட்டார் அல்லேலூயா’, என்ற திருஅவையின் குரல் உலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கிறது. உயிர்ப்பு விழா செய்தி என்பது, கானல் நீரோ, கண்கட்டு வித்தையோ அல்ல. மேலும், இது நாம் இன்று அனுபவிக்கும் துயர்களிலிருந்து தப்பிச்செல்வதையும் சுட்டிக்காட்டவில்லை. இந்த பெருந்தொற்று இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. அதேவேளை, பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, குறிப்பாக ஏழைகளுக்கு. இத்தகைய ஒரு சூழலில், ஆயுதம் தாங்கிய மோதல்கள் முடிவுக்கு வராமல் இருப்பதும், இராணுவப் படைக்கருவிகள் பலப்படுத்தப்படுவதும், இகழ்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது.
முரண்பாடுகள் நிறைந்த இந்த உண்மை நிலைகளின் முன்பு, உயிர்ப்பு நாளன்று, ’சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்துவிட்டார்’ என்ற செய்தி நம்பிக்கையை வழங்குகின்றது. இது, வானதூதர் குறித்தோ, உருவமற்ற ஓர் ஆவி குறித்தோ பேசவில்லை. மாறாக, தசையோடும் எலும்போடும் மனிதராக பிறந்த இயேசுவைக் குறித்துப் பேசுகிறது. இந்த இயேசு, தானே கிறிஸ்து என அறிவித்ததற்காக, பிலாத்துவின் கீழ் மரணத்திற்கு தீர்ப்பிடப்பட்டு, தான் ஏற்கனவே அறிவித்ததுபோல், விவிலியத்தில் கூறியுள்ளபடி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். சிலுவையில் அறையப்பட்டவரே, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். இறைத்தந்தையின் மீட்பு விருப்பத்தை முற்றிலுமாக நிறைவேற்றிய இயேசுவை, இறைத்தந்தையே உயிர்த்தெழ வைத்தார். இயேசு கிறிஸ்து, நம் பலவீனங்களையும், குறைபாடுகளையும், ஏன், நம் மரணத்தையும் தன் தோள்களில் எடுத்துக்கொண்டார். நம் துன்பங்களை தாங்கிக்கொண்டார், நம் பாவத்தின் சுமைகளை ஏற்றுக்கொண்டார். இதனால், தந்தையாம் இறைவன் அவரை அனைத்திற்கும் மேலாக உயர்த்தினார். இயேசுவும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்; அவரே ஆண்டவர். உயிர்த்த இயேசுவின் கைகளிலும், கால்களிலும் பக்கவாட்டிலும் காயங்கள் இருந்ததைக் குறித்து, அவரைக் கண்டவர்கள் சான்று பகர்ந்துள்ளனர். இக்காயங்கள், அவர் நம்மீது கொண்டுள்ள முடிவற்ற அன்பின் அடையாளங்கள். துயருறுவோர் இக்காயங்களில் நம்பிக்கையெனும் அருளைப் பெறமுடியும்.
இந்த பெருந்தொற்று காலத்தில், நோயால் பாதிக்கப்பட்டிருப்போர், மற்றும் இந்நோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளோர், என அனைவருக்கும் நம்பிக்கையை தருகிறார் உயிர்த்த இயேசு. இவர்களுக்கு ஆறுதலைத் தரும் இயேசு, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் தங்கள் பணியில் நிலைத்திருக்க உறுதியை வழங்கட்டும். இந்த பெருந்தொற்று காலத்தில், ஏழைகள் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெறவும், ஏழை நாடுகளின் தடுப்பூசி தேவைகளை நிறைவேற்றவும், உதவுமாறு அனைத்துலக நாடுகளிடம் நான் விண்ணப்பிக்கிறேன். வேலையை இழந்துள்ளோர், பொருளாதார பிரச்சனைகளால் சிக்கித் தவிப்போர், போதிய சமுதாயப் பாதுகாப்பின்றி துயருறுவோர், என அனைவருக்கும் உயிர்த்த இயேசு ஆறுதலை வழங்குகிறார். அனைத்து ஏழைக் குடும்பங்களின் தேவைகளை நிறைவுசெய்ய அரசுகள் நடவடிக்கைகளை எடுக்கட்டும். இந்த பெருந்தொற்றால் ஏழ்மையும், மக்களின் ஏமாற்றங்களும் அதிகரித்துள்ளன. ஏழைகள் அனைவரும், தங்கள் நம்பிக்கையை, மீண்டும் துவக்கவேண்டும் என, தன் ஹெய்ட்டி நாட்டின் திருத்தூதுப் பயணத்தின்போது, புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறியதைப்போல், நானும், ஹெய்ட்டி நாட்டினரை நோக்கி, ’சிரமங்களைக் கண்டு தளர்ந்துவிடாதீர்கள், நம்பிக்கையுடனும், மனவுறுதியுடனும் வருங்காலத்தை நோக்கி நடைபோடுங்கள்’ எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இக்காலத்தில், கல்விநிலையங்களுக்கு செல்லமுடியாமல், வீட்டிலேயே அடைபட்டிருக்கும் மாணவர்களை நோக்கி என் எண்ணங்கள் செல்கின்றன. பிறருடன் கூடிய பழக்கங்கள் வழியே, நல்ல குணநலன்கள் உருவாக உதவும் இந்தப் பருவத்தில், அடைப்பட்டு கிடக்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இளையோரோடு, என் நெருக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, மியான்மரில் குடியரசுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் குரலெழுப்பிவரும் இளையோருக்கு நெருக்கமாக உள்ளேன்.
கல்வாரிப் பாதையில் நடந்த இயேசுவின் துயர்நிறைந்த முகத்தை, போராலும், கொடிய ஏழ்மையாலும், புலம்பெயரும் மக்களில் கண்டுகொள்வோம். இயேசுவின் உயிர்ப்பு இவர்களுக்கு ஒரு மறுபிறப்பை வழங்கட்டும். இவர்கள், ஒருமைப்பாடு மற்றும் மனிதகுல உடன்பிறந்த நிலையை அனுபவிப்பார்களாக.
இந்நேரத்தில், புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் நாடுகளுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன், குறிப்பாக, சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோரை வரவேற்று உதவிவரும் லெபனான், மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு என் நன்றி. கடினமான காலத்தை அனுபவிக்கும் லெபனான் நாடு, உயிர்த்த கிறிஸ்துவின் ஆறுதலையும், அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவையும் பெறுவதாக.
போரால் அவதியுறும் சிரியாவிலும், மறக்கப்பட்ட நாடாக துயரத்தில் வாழும் ஏமனிலும் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையில் வாழும் லிபியாவிலும் இயேசுவின் அமைதி நிலவுவதாக. நாட்டில் அமைதி நிலவவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், போரிடும் தரப்புகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு உதவுவார்களாக.
உயிர்ப்பு என்பது இயல்பாகவே நம்மை எருசலேமுக்கு அழைத்துச் செல்கிறது. அந்த எருசலேமில் இறைவன், அமைதியையும் பாதுகாப்பையும் வழங்கி, அங்கு யூதர்களும் பாலஸ்தீனியர்களும் கலந்துரையாடல் வழியே, அமைதியையும் வளத்தையும் பெறவும், அருகருகே சகோதரர் சகோதரிகளாக வாழவும் உதவுவாராக.
கடந்த மாதம் நான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட, ஈராக் நாட்டை இந்த திருவிழா நாளில் நினைவுகூர்கிறேன். அது அமைதியின் பாதையில் நடந்து, தன் குழந்தைகள் அனைவரையும் வரவேற்று அரவணைக்கும் நாடாக விளங்கிட ஆவல் கொள்கின்றேன்.
உள்நாட்டு வன்முறைகளாலும், அனைத்துலக பயங்கரவாதத்தாலும், நிலையற்ற வருங்காலத்தைக் கொண்டிருக்கும் ஆப்ரிக்காவிற்கு, குறிப்பாக, சாஹேல் பகுதி, மற்றும் நைஜீரியா, திக்ரே, மற்றும் காபோ டெல்காடோ பகுதிகளின் மக்களை, இறைவனின் வல்லமை கட்டி காப்பதாக. மோதல்களை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள், மனித உரிமை மதிக்கப்படுவதுடனும், வாழ்வின் புனிதத்துவத்திற்கான மதிப்புடனும் தொடர்வதாக.
இன்றும், உலகில் எண்ணற்ற மோதல்களும், போர்களும் தொடர்கின்றன. போரின் மனநிலையை அகற்றிட அமைதியின் மன்னராம் இயேசு உதவிடுவாராக.
கிழக்கு உக்ரைன் மற்றும் நகார்னோ - கரபாக் (சூயபடிசnடி-முயசயயெமா) பகுதி மோதல்களின் விளைவாக, போர்க் கைதிகளானவர்கள், பாதுகாப்பாக தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிடவும், ஆயுத போட்டிகள் நின்றிடவும், உயிர்த்த இயேசு உதவுவாராக.
இன்று, ஏப்ரல் 4 ஆம் தேதி, மக்களுக்கு எதிராகச் செயல்படும் நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நாள். இத்தகைய மரண ஆயுதங்கள் இவ்வுலகில் இல்லாமல் இருக்கும்போது, எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! மீண்டும் இவ்வாண்டு, உலகின் பல பகுதிகளில் மக்கள் இந்த உயிர்ப்புப் பெருவிழாவை, கட்டுப்பாட்டின்கீழ் கொண்டாடவேண்டிய நிலை உள்ளது. சிலவேளைகளில் வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க முடியாமல்கூட உள்ளது. வழிபாட்டுச் சுதந்திரம் மதிக்கப்பட்டு, இத்தகையக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைவரும் சுதந்திரமாக வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என செபிப்போம்.
நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களின் மத்தியிலும், ஒன்றை நாம் மறந்து விடவேண்டாம், ’இயேசுவின் காயங்களால் நாம் குணமடைந்தோம்’ (1 பேது 2:24).
உயிர்த்த இயேசுவின் ஒளியில், நம் துயர்கள் அனைத்தும் உருமாற்றம் பெற்றுள்ளன. மரணம் இருந்த இடத்தில் இப்போது வாழ்வு இருக்கிறது. அழுகுரல் இருந்த இடத்தில் தற்போது ஆறுதல் உள்ளது. சிலுவையை அணைத்துக்கொண்டதன் வழியாக, இயேசு, நம் துயர்களுக்கு அர்த்தத்தை வழங்கினார். உயிர்த்த இயேசு வழங்கிய குணப்படுத்தலின் பயன்கள், உலகம் முழுவதும் பரவிட வேண்டுவோம்.
உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்!
இவ்வாறு, ’ஊருக்கும் உலகுக்கும்’ என்ற வாழ்த்துச் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரையும் அளித்தார்.