‘கடவுள் உங்களுக்காக தாகம் கொண்டுள்ளார்’ - அணிந்துரை
திருத்தந்தையர் இல்லத்தைச் சார்ந்தோருக்கு மறையுரை சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் இரானியேரோ காந்தலாமெஸ்ஸா அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் வழியைப் பின்பற்றிய சகோதரர் பசிபிக்கோ (ஞயஉகைiஉடி) அவர்களைப் பற்றி எழுதியுள்ள நூலுக்கு திருத்தந்தை அணிந்துரையை வழங்கியுள்ளார்.
’இளையோருக்கு திருத்தந்தை: கடவுள் உங்களுக்காக தாகம் கொண்டுள்ளார்’ என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அணிந்துரையை எழுதியுள்ளார்.
“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்” (மத். 7:7-8) என்று இயேசு கூறியுள்ள உறுதி மொழிகள் உண்மையா என்ற கேள்வி இளையோரிடையே எழுவதை தன்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று, திருத்தந்தை இந்த அணிந்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் சொற்களை நம்பமுடியுமா என்று பிறர் தன்னிடம் கேட்கும்போது, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மற்றொரு வாக்கியம் மனதில் எழுகிறது என்று கூறிய திருத்தந்தை, “நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்” (எரே. 29:13-14) என்ற சொற்களை நினைவுறுத்தியுள்ளார்.
மலருக்கு சூரியனும், விதைக்கு நிலமும், பயிருக்கு மழையும் அவசியமாவதுபோல், தன்னைத் தேடும் அனைவருக்கும் இறைவன் அவசியமாகிறார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த அணிந்துரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நாம் கேட்கும்போது கிடைக்காமல், நாம் தட்டும்போது திறக்காமல், நாம் தேடும்போது கண்டடையாமல் போவதற்கு, நாம் ஆர்வமின்றி கேட்பது, தட்டுவது, தேடுவது ஆகியவை காரணமாக இருக்கலாம் என்பதையும் திருத்தந்தை இந்த அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளையோரை மனதில் கொண்டு, கர்தினால் இரானியேரோ அவர்கள் வெளியிட்டுள்ள இந்த நூல், அவர் திருஅவைக்கு வழங்கியுள்ள ஒரு சிறந்த கருவூலம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலின் பக்கங்களை வாசித்து பயன்பெற அனைவரையும் தான் அழைப்பதாகக் கூறியுள்ளார்.