தடுப்பூசி வழங்கப்பட்ட வறியோரைச் சந்தித்த திருத்தந்தை
ஏப்ரல் 2 ஆம் தேதி, புனித வெள்ளியன்று காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திற்குச் சென்று, அங்கு கோவிட் பெருந்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்ட வீடற்ற வறியோரைச் சந்தித்தார்.
புனித வெள்ளி காலை 10 மணியளவில், அரங்கத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்கு வறியோருக்கு தடுப்பூசிகள் வழங்கிவந்த மருத்துவர்கள், தாதியர் மற்றும் தன்னார்வத் தொண்டர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறினார்.
திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் கர்தினால் Konrad Krajewski அவர்களும், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இத்தாலிய கழகங்களின் தொண்டர்களும், திருத்தந்தையுடன் அரங்கத்திற்குச் சென்றனர்.
அரங்கத்தில், தடுப்பூசி பெற்றவர்கள், மற்றும் தடுப்பூசி பெற காத்திருந்தவர்கள் அனைவரையும், திருத்தந்தையும், கர்தினால் கிராஜூவ்ஸ்கி அவர்களும், சந்தித்துப் பேசினர்.
வத்திக்கானைச் சுற்றி இருக்கும் ஏறத்தாழ 1,200 வீடற்ற வறியோரில், இதுவரை 800க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.