Namvazhvu
சிறாரும், இளையோரும் வடிவமைத்த சிலுவைப்பாதை
Wednesday, 14 Apr 2021 12:18 pm
Namvazhvu

Namvazhvu

சிறாரும், இளையோரும் வடிவமைத்த சிலுவைப்பாதை

ஏப்ரல் 2 ஆம் தேதி  புனித வெள்ளி  இரவு 9 மணிக்கு, மக்கள் பங்கேற்பு அதிகமின்றி, அதிக ஒளியின்றி காணப்பட்ட புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும், மக்களின் பங்கேற்பு அதிகமின்றி நடைபெற்ற சிலுவைப்பாதை, இந்தப் பெருந்தொற்று மனித குடும்பத்தின் மீது சுமத்தியுள்ள தனிமையை உணர்த்தி நின்றது.
இருப்பினும், இச்சூழலில் நம்பிக்கையைக் கொணரும் வகையில், வருங்காலத் தலைமுறையினர் உள்ளனர் என்பதை உணர்த்த, இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை உருவாக்கும் பொறுப்பை, குழந்தைகள் மற்றும் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.
இத்தாலியின் உம்பிரியா (Umbria)  மாநிலத்தைச் சேர்ந்த “Foligno I” ” என்ற அகேசி (Agesci) சாரணர் இயக்கம், மற்றும் உரோம் மாநகரின் உகாண்டா புனித மறைசாட்சிகள் பங்குத்தளச் சாரணர் இயக்கத்தைச் சார்ந்த சிறார் ஆகியோர், சிலுவைப்பாதையின் 14 நிலைகளுக்கும் உரிய சிந்தனைகளை உருவாக்கியிருந்தனர்.
அத்துடன், இந்தச் சிலுவைப்பாதை பக்திமுயற்சியின்போது பயன்படுத்தப்பட்ட உருவப்படங்களை, “இறையன்பின் அன்னை  (Mater Divini Amoris)  இல்லம்” மற்றும், “, “Tetto Casal Fattoria  இல்லம்” ஆகிய சிறார் பராமரிப்பு இல்லங்கள் இரண்டிலும் வாழ்கின்ற சிறார் தயாரித்திருந்தனர். 
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், ஒளி விளக்குகளுடன் உருவாக்கப்பட்டிருந்த தடத்தில், ஒரு சில குழந்தைகள், இளையோர், மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிலுவை ஒன்றை கையிலேந்தி நடந்து செல்ல, ஒவ்வொரு நிலைக்கும் உருவாக்கப்பட்டிருந்த சிந்தனைகளை குழந்தைகளும், இளையோரும் வாசித்தனர்.