Namvazhvu
பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு- திருப்பலி முன்னுரை: 18.04.2021
Wednesday, 14 Apr 2021 12:19 pm
Namvazhvu

Namvazhvu

பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு
(திப 4:8-12, 1 யோவா 3:1-2, யோவா 10:11-18)

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே! மீட்பின் வரலாறு முழுவதும் நல்ல ஆயன்-ஆடுகள், உவமை அதிகமாகக் கையாளப்படுகின்றது. ஏனென்றால், உரிமையாளர் வேலையாள்-ஆடுகள் ஆகிய மூவித உறவுகள் மற்றும் தொடர்புகள் எல்லா நிலையினருக்கும் பொருந்துவனமாக அமைந்துள்ளன. உரிமையாளரான தந்தையின் விருப்பத்தை முற்றும் உணர்ந்த பணியாளரான இயேசு, ஆடுகளான நமக்காகத் தம் இன்னுயிரை ஈந்து, மீண்டும் அதைப் பெற்றுக் கொண்டுள்ளார். இங்கே உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் இறையாட்சிப் போக்கும், போலித்தன்மை அதாவது கூலியை மட்டுமே கருத்தாகக் கொண்ட வேலையாள்களின் வெளி வேடப்போக்கும் படம்பிடித்துக் காட்டப்படுகின்றது. இந்த உவமை வெளிப்படுத்தும் அக்கறையுடன் கூடிய புரிதல், அன்பான வழிநடத்தல், ஆபத்தில் துணிந்து காத்தல் போன்ற பண்புகள் குடும்பங்கள், நிறுவனங்கள், திருச்சபை சார்ந்த அமைப்புகளில் வெளிப்பட வேண்டும். கொஞ்சம் அசந்தாலோ, ஏமாந்தாலோ ஆடுகள் பறிபோகும் ஆபத்துப் பெருகியுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து, பேரிடர் தரும் பேரின வாதங்கள், ஆசைகாட்டும் பிற சபையினரின் செயல்பாடுகள், மதவெறியாளர்களின் குரோதப் போக்குகள் ஆகியவற்றுக்குத் தகுந்த பதிலளித்து ஆடுகளான இறைமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று இத்திருப்பலியில் மன்றாடுவோம். 
முதல் வாசக முன்னுரை: 
தங்களால் வஞ்சிக்கப்பட்டு சிலுவைச் சாவுக்கு உட்படுத்தப்பட்ட நாசரேத்து இயேசுவின் பெயரால், பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்தவர் நலம் பெற்றது யூதத் தலைவர்கள் மற்றும் மூப்பர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்குத் துhய ஆவியாரின் தூண்டுதலால் துணிவுடன் திருத்துhதர் பேதுரு வழங்கிய கட்டுரையை விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்
இரண்டாம் வாசக முன்னுரை:
உலகம் கடவுளையும் அவரது மக்களான நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. அதனால் அவரது அன்பைத் துய்க்கும் மக்கள் என நம்மை அது ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் இருப்பது போலவே அவரைக் காண்போம் என்ற நம்பிக்கையை ஊட்டும் இரண்டாம் வாசகத்துக்குச் செவிசாய்ப்போம். 
இறைமக்கள் மன்றாட்டுகள்!
1. நல்ல ஆயரான இறைவா!  அனைத்துலகத் திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆடுகளாம் இறை மக்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வில் உண்மையான அக்கறை காட்டி, நல்லாயன் நிலையில் இறையாட்சியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தலைமைப் பண்புகளை வழங்கும் இறைவா! எங்கள் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மிகச்சிறந்த தலைமைப் பண்புகளுடன் தங்களை வெளிப்படுத்திப் பணிபுரிய முன்வர வேண்டுமென்றும், அச்சுறுத்தாமல், அடிமைப்படுத்தாமல், நல்ல சிந்தனைகளிலிருந்து திசை திருப்பாமல், தங்களது தீமைகளை நியாயப்படுத்தாமல் தரும சிந்தனையோடு பணி புரிய முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. கொடையாகத் துணிவை வழங்கும் இறைவா! உம் திருமகன் இயேசு அடிக்கடி அஞ்சாதீர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மக்களுக்குத் துணிவூட்டினார். உமது ஆவியாரைப் பெற்றிருக்கும் நாங்களும் துணிவை அணிந்துகொண்டு, எங்கள் வாழ்விடங்களில் தீமையை வெல்லவும், உணமையை-நன்மையைச் சொல்லவும், அதன் வழியாக உமது ஆட்சியின் கருவிகளாகத் திகழவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பின் ஊற்றான இறைவா! எங்கள் பங்கு மக்களைத் தங்களது ஆசைவார்த்தைகள், அதிரடியான சலுகைகள் போன்றவற்றால் கவர்ந்திழுத்து, அவர்களுக்குக் கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகப் போதித்து, மந்தையைத் திருடும் மனப்பான்மையில் செயல்படும் பிற சபை-சமய சந்தர்ப்பவாதிகளின் போக்கை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவும், எம் தலைவர்கள் தங்களது உறுதியான செயல்பாடுகளால், இனிய அணுகுமுறைகளால் கத்தோலிக்க மக்களான ஆடுகளைப் பாதுகாக்கப் பெரிதும் உழைக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.