மூவேளை செப உரை - பாராமுகம் என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்கல்
உயிர்ப்பின் மூன்றாவது ஞாயிறன்று நம்மை எருசலேமுக்குத் திரும்பிச்செல்ல அழைக்கும் இன்றைய நற்செய்தி வாசகம், எம்மாவு செல்லும் வழியில் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டதை, இரு சீடர்களும் ஏனைய சீடர்கள் குடியிருந்த மாடத்திற்கு வந்து தாங்கள் இயேசுவைக் கண்ட விவரத்தையும், இயேசு அவர்களுக்குத் தோன்றியதையும் காட்டுகிறது என, தன் ‘வானக அரசியே’ வாழ்த்தொலி உரையை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளை நோக்கி திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கினார்.
"உங்களுக்கு அமைதி உண்டாகுக" என கூறியவண்ணம், சீடர்களுக்குத் தோன்றிய இயேசுவை, ஓர் ஆவியென சீடர்கள் சந்தேகப்பட்டதையும் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காயங்களை அவர்களுக்கு காட்டியபோது மகிழ்ச்சி மேலிட்டு நம்பமுடியாதவர்களாய் வியப்பிலிருந்த சீடர்களை மேலும் உறுதிப்படுத்தும்விதமாக, இயேசு உணவைக் கேட்டு வாங்கி அவர்கள் முன் உண்டார் என்று கூறினார்.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு மூன்றுவிதமான செயல்பாடுகளைக் காண்பிக்கிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உற்றுநோக்குதல், தொட்டுப் பார்த்தல், உணவை உண்ணுதல் என்ற இம்மூன்றும், வாழும் கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் சந்திப்பில் மகிழ்ச்சியைக் கொணர்பவை என்று கூறினார்.
‘உற்றுநோக்குவது’ என்பது அன்பின் செயல்பாடு. ஏனெனில், பெற்றோர் தங்கள் குழந்தையை அன்புடன் உற்றுநோக்குகின்றனர்; காதலர்கள் ஒருவரையொருவர் பாசமுடன் நோக்குகின்றனர்; மருத்துவர், நோயாளியை அக்கறையுடன் நோக்குகிறார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராமுகம் என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்கலேயாகும். துயர்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும்போது அதிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு விலகி ஓடும் சோதனைக்கு எதிரானது இந்த உற்றுநோக்கல், என மேலும் எடுத்துரைத்தார்.
தன்னை முன்வந்து தொடும்படி தன் சீடர்களுக்கு, உயிர்த்த இயேசு விடுத்த அழைப்பு, நாம் ஒவ்வொரும், நம் சகோதரர் சகோதரிகளை, தூரத்திலிருந்து பார்க்கும் நிலையில் மட்டும் தூர விலக்கி வைத்து வாழமுடியாது என்பதை காட்டுவதாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
பாதையில் காயம்பட்டு கிடந்தவரைக் கண்டு அவரைத் தொட்டுத் தூக்கி உதவிய நல்ல சமாரியரைப் போன்று, இயேசுவுடன் ஆன ஒன்றிப்பு, நெருக்கமுடைய ஒன்றாக இருக்க வேண்டுமென்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன் வைத்தார்.
நாம் இன்று காணும் மூன்றாவது செயல்பாடு, உண்ணுதல் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்பது என்ற செயல், நம் உடலுக்கு சத்து தருவது என்றாலும், குடும்பத்தோடு ஒன்றிணைந்து உண்ணும்போது, அது அன்பின், ஒன்றிப்பின், மற்றும் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த இயேசு, தன் சீடர்களோடு அமர்ந்து உணவு உண்பதையும், திருநற்கருணை விருந்து என்பது கிறிஸ்தவ சமூகத்தின் உண்மையான அடையாளம் என்பதையும், எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வு என்பது, இறைவனோடு கூடிய உயிருள்ள உறவு. ஏனெனில், நாம் உயிர்த்த இயேசுவை உற்றுநோக்கி, அவரைத் தொட்டுணர்வதோடு அவர் வழி ஊட்டம் பெறுகிறோம் என மேலும் எடுத்துரைத்தார்.