தூத்துக்குடியின் புதிய ஆயர்
மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்களின்
திருநிலைப்பாட்டு நிகழ்வு
நேரடி ரிப்போர்ட் - நம் வாழ்வு ஆசிரியர் மற்றும் ரிடம்டர்
நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அடிப் படையில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மறைமாவட்டமும் பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்
களின் ஆயர் திருநிலைப்பாட்டுத் திருநிகழ்வு மிகவும் கோலாகலமாக பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி மாலை நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தூத்துக்குடி மாநகரமே அக மகிழ்ந்து அதற்கான அடையாளங்களைச் சுமந்திருந்தது. நகர் முழு
வதும், குறிப்பாக தூத்துக்குடி திருஇதயங்களின் ஆசனப் பேராலயத்தைச் சுற்றி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை காவல்துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர். மாலை ஐந்து மணியளவில் தூத்துக்குடி முன்னாள்
ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் மற்றும் திருநிலைப்படுத்தப்படவிருந்த தேர்வு ஆயர்மேதகு ஸ்டீபன் அந்தோனி ஆகிய இருவருக்கும்
அலங்கார ஊர்தியில் அமரவைத்து இசைக்குழு வுடன் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் வந்த அந்த வாகனம் ஆசனக் கோவில் முன்பு நின்ற பின்பு, இரு ஆயர்களும் பேராலயத்திற்குள் சென்று செபித்துவிட்டு திருவுடை அணிந்தனர். பேராலய மணிகளின் நாவுகள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை காற்றில் அறிவித்தன. தமிழகத்திலிருந்து மூன்று ஆயர்களைத் தவிர்த்து, சீரோ-மலபார்-மலங்காரா ஆயர்கள் உட்பட ஏனைய ஆயர் பெருமக்களும், சுல்தான்பேட்டை ஆயர் மேதகு பீட்டர் அபீர் அவர்களும், ஏறக்குறைய ஐந்நூறுக்கும் மேற்பட்ட குருக்களும் திருவுடை அணிந்து வருகைபவனியில் பங்கேற்றனர். இளைஞர் இளம்பெண்கள்- பீடப்பூக்கள் பூக்களைத் தூவி அனைவருக்கும் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்பு அளித்து மகிழ்ந் தனர். ஆசனக்கோவில் வளாகமே இறைமக்களாலும் அருள்சகோதரிகளாலும் நிரம்பி வழிந்தது. நிற்பதற்குக் கூட இடமில்லாமல் மக்கள் வெள்ளம் தூத்துக்குடி கடலைப் போல திரண்டிருந்தது.
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயரைத் திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களும் திருநிலைப்படுத்தும் இணை ஆயர்கள் மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களும் மேதகு ஆயர் சவுந்தரராஜூ ச.ச அவர்களும் பவனியின் இறுதியில் அணிவகுத்தனர். திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களின் தலைமையில் திருநிலைப்பாட்டுத் திருப்பலி ஆடம்பரமாகத் தொடங்கியது. தூத்துக் குடி மறைமாவட்ட முன்னாள் முதன்மை குருபேரருட்திரு.கிருபாகரன் அவர்கள் வரவேற்புடன் கூடிய திருப்பலி முன்னுரை வழங்கினார். ஆபிரகா
மின் அழைப்பைப் பற்றிய முதல்வாசகமும் (தொநூ12:1-4) கல்லால் எறிந்து கொல்லப்பட்ட ஸ்தேவான் பற்றிய இரண்டாம் வாசகமும் (திப 6:8-15) சுமை சுமந்து சோர்ந்திருப்போரை அரவணைக்கும் மத்தேயு நற்செய்தியும் வாசிக்கப்பட் டது.11:28-30. அதனைத்தொடர்ந்து தூய ஆவியாரின் பாடலுடன் திருநிலைப்பாட்டு திருநிகழ்வு ஆரம்பமானது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முன்னாள் முதன்மை குரு பேரருட்திரு.கிருபாகரன் அவர்களும் வேலூர் மறைமாவட்டத்தின் முதன்மை குரு பேரருட்திரு. ஜான் ராபர்ட் அவர்களும் தேர்வுநிலை ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்களை திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களிடம் ஒப்படைத்தனர். பேரருட்திரு.கிருபாகரன் தேர்வுநிலை ஆயரை அறிமுகப்படுத்தி திருநிலைப்படுத்தப்படும்படி வேண்டினார். திருஅவையின் நியமன ஆணையை தூத்துக்குடி மறைமாவட்டத் தந்தை பணி. அமலதாஸ் அவர்கள் ஆங்கிலத்திலும் மறைமாவட்ட வேந்தர் அருள்திரு.நார்பர்ட் அவர்கள் தமிழிலும் வாசித்தளிக்க, இறைவா! உமக்கு நன்றி’ என்று இறைமக்கள் ஆர்ப்பரித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை ஆயர்மேதகு சூசை மாணிக்கம் அவர்கள் தூத்துக்குடிதலத்திரு அவையின் பின்னணியில் சிறப்பான தொரு எழுச்சிமிக்க மறையுரையாற்றினார். அதனைத்தொடர்ந்து ஆயர்தம் கடமைகளையும் பணிகளை யும் விளக்கி முதன்மை ஆயர் இவோன் அம்புரோஸ் விளக்கினார். அதனைத் தொடர்ந்து ஆயர்பணி நிலை குறித்த கேள்விகளை மக்கள் முன்னிலையில் கேட்டு தேர்வு நிலை ஆயரிடமிருந்து உரிய பதில்களைப் பெற்றுக்கொண்டார். புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடிச் செபிக்கும்போது தம்மையே இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக் கிறவிதமாக தேர்வுநிலை ஆயர் பீடத்திற்கு முன்பு முகம் குப்புற விழுந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆயரிடம் வந்து தேர்வுநிலை ஆயர் முழந்தாள்படியிட, தலைமை ஆயர் அவர் மீது கைகளை வைத்து தூய ஆவியின் வருகைக்காக மௌனமாகச் செபித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து ஆயர் பெருமக்களும் அவர் தலைமீது கரங்களை வைத்து மௌனமாகச் செபித்தனர்.
அப்போது தூய ஆவியாரின் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வு நிலை ஆயரின் தலைமீது நற்செய்தி நூல் விரித்துப் பிடிக்க, தலைமை ஆயர் இவோன் அம்புரோஸ் ஆயர் திருநிலைப்பாட்டுச் செபத்தைச் செபித்தார். கிறிஸ்துவின் பணியைத் தொடர ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மீது தலைமை ஆயர் இவோன் அம்புரோஸ் கிறிஸ்மா பூசி அருள்பொழிவுச் செய்தார். அதன் பிறகு அந்த நற்செய்தி நூல் தேர்வு ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நம்பிக்கையின் முத்திரையாக மோதிரமும் புனிதத்தின் அடையாளமாக தலைச் சீராவும் மந்தையைக் கண்காணிக்க செங்கோலும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு தலைமை ஆயரும் ஏனைய திருநிலைப்படுத்தும் இணை ஆயர்களும் இணைந்து புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்களை அழைத்துச் சென்று தலைமை இருக்கையில் அமர வைத்தனர். மறைமாவட்ட ஆசனக்கோவிலின் மணிகள் முழங்கின. தங்களின் ஆயர் குழாமில் அவர் இணைக்கப்பட்டதன் அடை யாளமாக அனைத்து ஆயர்களும் புதிய ஆயரை ஆரத் தழுவி அன்பின் முத்தம் கொடுத்தனர்.
பின்னர் நம்பிக்கை அறிக்கை பாடப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள ஐந்து மறைவட்டங்களின் பிரதிநிதிகளும் புதிய ஆயரின் குடும்ப உறுப்பினர்களும் காணிக்கைகளைத் தந்து புதிய ஆயரிடமிருந்து ஆசி பெற்றனர். வழக்கம்போல் திருப்பலி புதிய ஆயரின் தலைமையில் தொடர்ந்தது. நற்கருணை விருந்து முடிந்தவுடன் வேலூர் மறை
மாவட்ட முதன்மைகுரு பேரருட்திரு ஜான் ராபர்ட்அவர்களின் இசையில், புதிய ஆயர் தாம் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மனத்தில் எழுந்த உணர்வுகளைத் தாமே எழுதிப் பண் அமைத்து, நன்றிப் பாடலை தாமே முன்வந்து இறைமக்கள் முன்பாகப் பாடினார். ‘உம் பணி செய்ய என்னை அழைத்தது ஏனோ? வரையறை தந்தே வலைவிரித்ததும் ஏனோ??..
என்று தொடங்கும் பாடல் எல்லார் உள்ளங்களையும் கவர்ந்திழுத்தது. நன்றி மன்றாட்டிற்குப் பிறகு புதிய ஆயரின் முன்பு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆலோசனைக் குழு அருள்தந்தையர்கள் பிரதிநிதி களாக முன்வந்து தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தார்கள். பின்னர் புதிய ஆயர் இறுதியில் மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தை மக்கள் மீது தெளித்து
மகிழ்ந்தார். இறுதியாக புதிய ஆயர் இறை மக்களுக்குத் தம் திருக்கரங்களால் முதல் இறையாசீர் வழங்கினார். இந்நிகழ்வில் சிஎஸ்ஐ திருமண்டல ஆயர் தேவசகாயம், அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரங்கா உள்ளிட்ட விருந்தி
னர்கள் வருகை தந்து தங்கள் அன்பை வெளிப் படுத்தினர். மாதா தொலைக்கட்சி இந்நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புச் செய்தது. ஆயர் திரு நிலைப்பாட்டு வழிபாட்டுச் சடங்குகளைப் பாங்குற அருள்முனைவர் ரோலிங்டன் இரத்தினச் சுருக்கமாக தொகுத்தளித்தார். அருள்பணி.சுந்தரி மைந்தன் மறைமாவட்ட வரலாற்றை பாங்குற எடுத்துரைத்தார். பாடற்குழுவினர் பக்தி நயம் ததும்ப பாடல்களைப்பாடி வழிபாடு சிறப்பாக அமைய உதவினர்.
புதிய ஆயருக்கு வரவேற்பு அளிக்கிறவிதமாக கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அருள்பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்காமல் வழக்கம்போல் உணவுக்காக கலைந்து சென்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஞான தூதன் ஆசிரியர் அருள்பணி.வெனி இளங்குமரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நம் வாழ்வு சார்பில் தூத்துக்குடி மறைமாவட்ட பொறுப்பாளர் திரு.ஜே.ஏ.ராஜ் பொன்னாடைபோர்த்தி ஆசி பெற்றார். நம் வாழ்வு ஓவியர் திரு.நிர்மல் அவர்கள் வரைந்தளித்த ஓவியம்நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 44 ஆண்டுகால நம் வாழ்வு வரலாற்றிலேயே மிகப்பெரிய இதழாக 132 பக்கங்களுடன் வெளிவந்த தூத்துக்குடி ஆயர் திருநிலைப்பாட்டுச் சிறப்பிதழை புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்கள் உட்பட அனைத்து ஆயர் பெருமக்களும் ஏராளமான அருள்தந்தையர்களும் அருள்சகோதரிகளும் இறைமக்களும் பாராட்டி மகிழ்ந்தனர். ஒரு தரமானஇதழாக மிகக் குறுகிய காலத்தில் 64 வண்ணப் பக்கங்களுடன் 64 பக்க கட்டுரைச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இதழ் தமிழகத் திருஅவையின் பத்திரிகை பணிக்கு முத்திரைச் சான்று என்று அனைவரும் மகிழ்ந்தனர். ரூ.40 மதிப்புள்ள இவ்விதழ், ஏறக்குறைய நான்காயிரம் பிரதிகள் இறை மக்களுக்கு இலவசமாக பரிசளிக்கப்பட்டன. இவ்வேளையில் விளம்பரங்கள் தந்து உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி.
அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்களின் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள்அனைவரும் பங்கேற்ற திருப்பலிக் கொண்டாட்டம் மறைமாவட்ட ஆசனக் கோவிலில் நடைபெற்றது. திரளான எண்ணிக்கையில் ஆசனக் கோவிலில் புதிய ஆயரின் தலைமையில் நடைபெற்ற முதல்திருப்பலியில் இறைமக்கள் பங்கேற்று ஆசீர்பெற்றனர். மறைமாவட்டக் குருக்கள் அனைவரும் ஆயர் முன்பு வந்து தங்கள் வணக்கத்தையும் கீழ்ப்படிதலையும் தெரிவித்தனர். காலை உணவிற் குப் பிறகு புதிய ஆயர் மறைமாவட்டக் குருக்கள் அனைவரையும் சந்தித்து மகிழ்ந்தார். அதன் பிறகு ஆலோசனை அருள்தந்தையர்களுடனான அமர்வு நடைபெற்றது.
இவ்விழா நிகழ்வுகள் சிறப்பாக அமைய தூத்துக்குடி மறைமாவட்ட நிர்வாகம் பல்வேறு குழுக்களை குருக்களின் தலைமையில் ஏற்படுத்தி நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருந்தது.
https://www.facebook.com/namvazhvueditor/media_set?set=a.1768903316544944&type=3