Namvazhvu
ஆழ்தியான சபைகள், ஆழ்ந்த இறைவேண்டலின் பாதுகாவலர்கள்
Saturday, 04 Sep 2021 07:29 am

Namvazhvu

13

ஆழ்தியான சபைகள், ஆழ்ந்த இறைவேண்டலின் பாதுகாவலர்கள்

கத்தோலிக்கத் திருஅவை, 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புப் பணிகளைத் துவக்கியிருக்கும் இவ்வேளையில், ஆழ்தியான துறவு சபைகள், மற்றும், ஆசிரமத் துறவு வாழ்வு குழுமங்கள் ஆகியவை, திருஅவைக்காக, மிக உருக்கமாக இறைவேண்டல் செய்யுமாறு, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலரான, கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும், 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புப் பணிகள், இவ்வாண்டு அக்டோபரில் தலத்திருஅவைகளில் துவக்கவிருப்பதை முன்னிட்டு, அப்பணிகளுக்காகச் செபிக்குமாறு, ஆழ்தியான துறவு சபைகள், மற்றும், ஆசிரமத் துறவு வாழ்வு குழுமங்கள் ஆகியவற்றிற்கு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று நீண்டதொரு மடல் ஒன்றை கர்தினால் கிரெக் அவர்கள் எழுதியுள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றப் பயணத்தில், உலகளாவியத் திருஅவை முழுவதும் ஒன்றுசேர்ந்து பயணிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலநேரங்களில் நினைவுபடுத்தி வருகிறார் என்று தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரெக் அவர்கள், ஆழ்தியான சபைகள், தங்களின் சிறப்பான அழைப்பால், திருஅவை சமுதாயம் முழுவதையும் வளப்படுத்துமாறு, அழைப்புவிடுத்துள்ளார்.

ஆழ்தியான துறவு சபைகள், மற்றும், ஆசிரமத் துறவு வாழ்வு குழுமங்கள், ஆழ்ந்த இறைவேண்டலின் பாதுகாவலர்கள் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரெக் அவர்கள், அச்சபைகளின் வாழ்வுக்கு மையமாக அமைந்துள்ள, உற்றுக்கேட்டல், மனமாற்றம், குழுமஒன்றிப்பு ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்தி தன் மடலை வரைந்துள்ளார்.

உற்றுக்கேட்டல்

இச்சபைகள், இறைவார்த்தையை உற்றுக்கேட்டு, அது பற்றித் தியானித்து, அதனை உள்வாங்குபவை என்பதால், அவை, இறைவார்த்தையின் மனிதஉரு என்று விளக்கியுள்ள கர்தினால் கிரெக் அவர்கள், ஒன்றுசேர்ந்து வாழ்கின்ற திருஅவை, சாதாரணமாக செவிமடுப்பதைவிட, உற்றுக்கேட்பதை உண்மையாக்கும் திருஅவையாக விளங்கவேண்டும் என்ற திருத்தந்தையின் எண்ணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மனமாற்றம்

உண்மையாகவே ஒன்றுசேர்ந்து பயணிப்பது என்பது, இறைவார்த்தைக்கும், நம் வாழ்வில் தூய ஆவியார் பிரசன்னமாய் இருந்து உணர்த்துவதற்கும் உற்றுக்கேட்பதால் மனம் மாற விருப்பமாக இருப்பதாகும் என்றும், இக்கருத்தை வெறுமனே சொல்வது எளிது, ஆனால் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்ற திருத்தந்தையின் கருத்தையும் கர்தினால் கிரெக் அவர்கள், தன் மடலில் கூறியுள்ளார்.

குழுமஒன்றிப்பு

உற்றுக்கேட்டல், மற்றும், மனமாற்றத்தின் இலக்கு, குழுமஒன்றிப்பாகும் எனவும், இது, ஆழ்தியான துறவு சபைகள், மற்றும், ஆசிரமத் துறவு வாழ்வு குழுமங்களுக்கு முக்கியம் எனவும் உரைத்துள்ள கர்தினால் கிரெக் அவர்கள், மாமன்றம், தன்னிலே சுதந்திரத்தை வரையறுப்பது அல்ல, மாறாக, ஒன்றிப்பிற்கு உறுதியளிப்பதாகும் என்றும் கூறியுள்ளார்.

இறைவேண்டலின் முக்கியத்துவம்

தன் மடலின் இறுதியில், இறைவேண்டலின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரெக் அவர்கள், ஆழ்தியான துறவு சபைகள், மற்றும், ஆசிரமத் துறவு வாழ்வு குழுமங்களுக்கு மிக முக்கியமான இறைவேண்டல், உற்றுக்கேட்டல், மனமாற்றம், குழுமஒன்றிப்பு ஆகியவற்றோடு மிக ஆழமான தொடர்புகொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மூவொரு கடவுளோடு உயிரோட்டத்துடன் சந்திப்பு நடத்துவதே இறைவேண்டல் என்றும், உலக ஆயர்கள் மாமன்றப் பயணம், இறைத்தந்தை மீது திருஅவை கொண்டிருக்கும் அன்புப் பயணமாகும் என்றும், இந்த அன்பிற்கு அனைவரும் சான்றுகளாக வாழுமாறும், கர்தினால் கிரெக் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.