Namvazhvu
Spirituality வழக்கமாய் வருகின்ற ஒன்றுதானே இந்த 40  நாட்கள்?!
Thursday, 14 Mar 2019 11:15 am
Namvazhvu

Namvazhvu

வழக்கமாய் வருகின்ற ஒன்றுதானே இந்த 40  நாட்கள்?!

 

உலகில் வாழுகின்ற எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வில் பலவற்றை வழக்கமாகச் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிக நேரம் தூங்குவதை வழக்கமாகச் செய்வார்கள். சிலர் அடிக்கடி சிற்றுண்டி உண்பதை வழக்கமாய் வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் காலையில் நடைபயிற்சி செல்வதும், மாலை வேளையில் உடற்

பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதையும்தங்களது வழக்கமான செயல்களில் ஒன்றாக வைத்திருப்பார்கள். மனிதர்கள்தங்கடைய ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவரவருக்கு ஏற்றாற்போல நேர்த்தியாகப் பிரித்து வைத்து தன் பயணத்தைத் தொடங்குகிறார். அத்தகைய பயணத் தில் எதிர்வரும் சவால்களையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஏன், தவறுகள் நிகழும்போது அதைச் சரி

செய்வதற்கான வழிமுறைகளையும் கூட நன்கு கற்று இருக்கிறார்கள். இப்படியாக மனிதர்கள் எல்லோரும் வாழ்வை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள விரும்புகின்றார்கள். எப்படியாவது மகிழ்வை வாழ்வில் அடைந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வை முன்னோக்கி நகர்த்து பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவ்வாறாகச் சிந்திக்கையில் வாழ்வின் பாதி நேரங்கள் நம் முடைய பயணங்கள், பார்வைகள், எண்ணங்கள், செயல்பாடுகள், சிந்தனைத்திறன்,செயல்படுத்தும் விதம், எடுத்துரைக்கும் பண்பு, விவாதிக்கும் குணம், பேசுகின்ற பண்பு போன்றவைகள் பெரும்பாலும் வாடிக்கையான ஒன்றாக அல்லது வழக்கமாக வருகின்ற ஒன்றாக மாறிவிடும் அவலநிலை நம்மில் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றது.

இதைப் பல பேர் கண்டுக்கொள்வதில்லை. சிலர் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றோம். இன்றைய உலகம் வளர்ச்சி யின் பிடியில் சிக்குண்டு தன்னில் ஏற்படும் தளர்ச்சிகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் வினோதமான செயல்களை முன்னெடுக்கக் கற்றுக்கொடுக்கின்றது. நான் எதற்காக வாழ்கிறேன் என்ற சிந்தனைகூட இல்லாமல் அடுத்தவருக்காகவே வாழ்வின் பாதி நாள்களை ஏன் முக்கால்வாசி நாள்களைச் செலவு செய்யும் மனிதர்களாகத்தான் நாம் ஒவ்வொருவரும் இன்றளவும் வாழ்கின்றோம். அடுத்தவர்கள் என்று சொல்லும்போது அது நேர்மறையாக இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால் பல தருணங்களில் அது எதிர்மறையாக இருப்பதால்தான் அச்சம் நம்மை ஆள்கிறது. நமக்கு நாமே பல கேள்விகளைக் கேட்டு விடை தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். இந்த வரிசையில் நான் தவக்காலத்தையும் பார்க்க விரும்புகின்றேன். இதுதவக்காலமா அல்லது தவறாமல் வழக்கமாய் செய்வதைச் செய்திட அழைக்கும் காலமா?

தவக்காலம் என்றவுடன் செபம், தவம், நோன்புஎன்று ஒவ்வொருவரும் தவமுயற்சிகள் எடுப்பதும், மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதும், நேரம் கிடைக்கும் போது அனாதை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் என்று பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்களைப் பார்ப்பதும், அவர்களுக்குத் தேவையான சிறுசிறு நலன்களைச் செய்வதும், இன்னும் ஒருபடி மேலே சென்று நாம் மிச்சம் செய்த பணத்தைப் பசிப்பிணி போக்க காணிக்கையாக உண்டியல்களில் சேர்த்து வைத்து அதன் வழியாக உதவி செய்வதும், இவையெல்லாம் வழக்கமாய் நடைபெறுகின்ற செயல்களில்  ஒன்றுதானே? இது வாடிக்கையாக எல்லா இடங்களிலும் தென்படுகின்ற ஒன்றுதானே? அப்படியிருக்க எப்படி தவக்காலத்தை நாம் மாற்றத்தின் காலமாகக் கொண்டாட முடியும். எந்த விதத்திலும் மாற்றங்கள் இல்லாமல் கடந்த ஆண்டு செய்தது போலவே இந்த ஆண்டும் தவக்காலம் அமைந்துவிட்டால் நாம் யாரை ஏமாற்றுகின்றோம்? கடவுளையா? நம்மையா? சிந்திக்க வேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம். உலகத்தில் உருவாகு கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அக்கறையோடு பதில் சொல்ல நினைக்கும் நம்முடைய மனது தனக்குத் தானே கேள்விகள் எழுப்பி தன் வாழ்வைச் சரி செய்துகொள்ள முன்வருவது இல்லை. அதனால்தான் ஒவ்வொரு தவக்காலமும் நம்மைத் தாண்டிச்செல்லும் காலங்களாக இருக்கின்றனவே தவிர நம்மைத் தடுமாற்றத்திலிருந்து, தடுக்கி விழுவதிலிருந்து தூக்கிவிடும் காலங்களாக அமைவதில்லை. இது கடவுளின் தவறு அல்ல. அவரால் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நம்முடைய தவறு.

இயேசுவின் பாடுகளைத் தியானித்து கண்ணீர்சிந்தும் நமக்கு, நம் அருகினிலே பாடுகளை அனுபவிக்கும் மனிதனைக் கண்டு ஒரு சொட்டு கண்ணீர்கூட வருவதில்லை? இயேசுவின் கல்வாரிப் பாதையைச் சிந்திக்கும் விதமாய் நாற்பது நாள்களும் தவறாமல் சிலுவைப்பாதை சொல்லித் தியானிக்கும் நமக்கு ஏன் தவறான பாதையில் செல்லும் இளையோரைத் திசைமாற்றி நல்வழிப்படுத்த மனமில்லை? அதே போன்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கை பெரிய வியாழன் அன்று பங்குகளில் பார்த்துவிட்டு, அந்த நேரத்தில் நாமும் இயேசுவைப் போல வாழ வேண்டுமென்று குருக்கள் வைக்கும் மறையுரைகளைக் கேட்டுவிட்டு வீடு திரும்பும் எண்ணற்ற மனிதர்கள் தங்கள் வாழ்விலும், தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் கழுவப்பட வேண்டிய காரியங்கள், செயல்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், எதிர்பாரா சிந்தனைகள் என்று ஒருநீண்ட பட்டியலே உண்டு என்பதை ஏன் மறந்து விட்டோம்?. திருநீற்று புதன் அன்று தொடங்கும் நம்முடைய தவக்காலப்பயணம் உயிர்ப்புப் பெருவிழா முடிந்தும்கூட பலரின் வாழ்வு

தவக்காலமாகவே இருக்கின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்து இருக்கின்றோம் அல்லது எத்தனை முறை பெரிய வெள்ளி மட்டுமே நம்மில் எழுகின்றது என்பதை உணர்ந்து இருப்போம்?

அன்பர்களே! நீங்கள் இக்கட்டுரையை வாசிக்கும்போது தவக்காலம் தொடங்கியிருக்கலாம் அல்லது தவக் காலத்தைத் தொடங்குவதற்கானதயாரிப்பில் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஒன்றே ஒன்றை மட்டும் மறவாதீர்கள் - இது வாடிக்கையான தவக்காலம் அல்ல. வழக்கமாய் வருகின்ற தவக்காலம் அல்ல. மற்றவர்களின் வாழ்வையும், நம்முடைய வாழ்வையும் சீர்தூக்கிப் பார்த்து உயிர்ப்பை நம் உள்ளங்களில் மனதார ஏற்றிட தவக்காலத்தைத் தகுந்த விதத்தில் கையாள முயற்சி எடுப்போம். ஏனென்றால் வழக்கமாய் வருகின்ற போது அதன் அர்த்தமும் குறையும், அதில் எழும் அவசியமான மாற்றங்களும் மறையும் என்பதை என்றுமே மறக்காதீர்கள். சரிமாற்றம் முக்கியம் என்று சொல்லி விட்டோம். எதில் மாற்றம் ஏற்பட வேண்டும்? அல்லதுவழக்கமாய் செய்வதை எவ்வாறு மாற்றுவது? என்கிற அடிப்படையான கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது எதார்த்தம். இதற்கான விடைகளை அலசுவோம்.

முதல் சிந்தனையாக:

இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் அதே வேளையில் நாம் ஏன் நம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு குடும்பத்தை இந்தத் தவக்காலத்தில் சந்திக்கக் கூடாது?, ஏன் அவர்களின் பாடுகளைக் காது கொடுத்து கேட்ககூடாது? நீங்கள் குடும்பங்களைத் தேடியெல்லாம் செல்லவேண்டாம். நம்மோடு பயணிக்கின்ற அல்லது பணியாற்றுகின்ற அல்லது நம்முடைய பணியாளர் களைப் பார்த்து அவர்களுடன் உரையாடினாலே போதும் நாம் இயேசுவின் பாடுகளைத் தியானித்த நிம்மதி இருக்கும், அதைவிட அன்று கல்வாரிப் பயணத்தில் இயேசுவிற்கு ஆறுதல் சொன்ன எருசலேம் பெண்களைப் போன்று நாமும் அவர்களுக்கு ஆறுதலாய் இருப்போம் என்பதில் சந்தேகமில்லை. இதுதான் தவக்காலத்தை அணுகும் விதங்களில் ஒன்று.

இரண்டாவது சிந்தனையாக:

பெரும்பாலும் நாம் தவக்காலத்தில் சிலுவைப்பாதை செய்வோம். இது வழக்கமான ஒன்று. ஆனால் ஆழப்பொருள் பொதிந்தது இந்த அர்த்தமுள்ள செயல்பாட்டை ஏன் நாம் நம் கண்முன்அழிவைத் தேடிக்கொள்ளும் இளையோர் களை நல்வழிப்படுத்த பயன்படுத்தக்கூடாது? சிலுவைப்பாதை என்பது மீட்பை அடைவதற்கு இயேசு சொல்லித்தந்த அற்புதமான படிப்பினை. பல வேளைகளில் நாம் சொல் வதுண்டு  என்வாழ்க்கையே சிலுவைப்பாதையாய் இருக்கின்றது

என்று, ஆனால் அது உண்மை அல்ல. நாம் வாழ் வையே மீட்பின் பாதையாக மாற்ற கடவுள் கொடுத்த வாய்ப்பு என்பதுதான் உண்மை. எனவே நாற்பது நாளில் குறைந்தபட்சம் ஐந்து இளைஞர் அல்லது இளம்பெண்களிடம் மனம்விட்டு தனியாகப் பேசுங்கள். உங்களுடன் படிக்கின்ற அல்லது பணியாற்றுகின்ற அல்லது தெரிந்தவர்களுடன் உரையாடுங்கள், அவர்களின் வாழ்வில் சந்திக் கும் சிலுவைப்பாதைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். காரணம், அவர்களில் பாதி பேருக்கு அது சிலுவைப்பாதையாக இருக்காது. அவர்களை உயிர்ப்பு நோக்கி வழிநடத்தும் அகல் விளக்குகளாகவே இருக்கும், அதை அணைத்துவிடாமல் வழி நடத்த இத்தவக்காலம் நமக்கு பயன்படட்டுமே.

மூன்றாவது சிந்தனையாக:

நாம் விழுந்து விழுந்து ஆராதிக்கும் இயேசுவின் திரு முகத்தை முதியவர்களின் முகத் தில் கண்டுக்கொள்ள தவற வேண்டாம் இரவு முழுவதும் இருந்து இயேசுவை ஆராதிக்கும் நம் கண்கள் எத்தனை முதியவர்களை இதுவரைகண்டுக் கொண்டன. எத்தனை முதியவர்களின்வாழ்க்கையைப் புரிந்து கொண்டன. இயேசுவின்பணி வாழ்வில் அவர் யாரையுமே கண்டுக் கொள்ளாமல் இருந்ததில்லை. தன்னைக் காட்டிக் கொடுக்கும் யூதாசைக்கூட அவர் விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க அவரின் பிள்ளைகளாய் இருக்கும் நாம் எப்படி மற்றவர்களைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றோம். இன்னும்குறிப்பாக முதியவர்கள் என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கின்றோம். எத்தனையோ முதியோர் இல்லங்களைச் சென்று சந்திக்கும் வழக்கமான தவக்காலத்தை மாற்றிவிட்டு, நம் அருகிலேயே, ஏன் நம் பெற்றோரே, ஒரு வகை யில் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். சற்று யோசியுங்கள். குருக்களும்,அருள்சகோதர, அருள்சகோதரிகளும் நாம் இந்தத் திருப்பணியை ஏற்க உறுதுணையாக இருந்த ஒருசிலர் முதியவர்களாக இருப்பார்கள். அவர்களைச் சந்திப்பது, அவர்களிடத்தில் உரையாடுவது, அதன் வழியாக மகிழ்வைத் தேடுவது நாம் வாடிக்கையாக  அனுசரிக்கின்ற தவக்காலத்திலிருந்து மாறுப்பட்ட ஒன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகமுண்டு. செபம், தவம், நோன்பு என்று நம்முடைய எல்லைகளை நாமே குறுக்கிக் கொள்ளாமல், இத்தவக் காலத்தின் நோக்கம் அறிந்து இதனை அணுகுவோம். உயிர்ப்பின் மக்களாய் வாழ்வோம்!