ஆகஸ்ட் 10 - துக்க நாள்
பட்டியலின உரிமையை மீட்டெடுக்கப் போராடும் தலித் கிறித்தவர்கள்
கடந்த 71 ஆண்டுகளாக தலித் கிறித்தவர்களும் தலித் இசுலாமியர்களும் மதத்தின் பெயரால் தாங்கள் இழந்த பட்டியலின உரிமையைக் காக்க போராடி வருகிறார்கள். இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றும் எந்த நபரும் பட்டியலினத்தை சேர்ந்தவராக கருதப்பட மாட்டார் என குடியரசுத்தலைவரின் 1950ஆம் ஆண்டு ஆணை பத்தி 3- னை அரசியலமைப்புச் சட்டத்தில் உட்புகுத்தியது. இந்த ஆணையானது 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் கையெழுத்திடப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பட்டியலினத்தில் 1956 ஆம் ஆண்டு சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டு பௌத்தர்களையும் பட்டியலினத்தில் இந்திய அரசு இணைத்து தலித் கிறித்தவர்களும், இசுலாமியார்களையும் மதத்தின் அடிப்படையில் ஒதுக்கியது.
ஆகவே, தலித் கிறித்தவர்களும் இசுலாமியர்களும் இந்தநாளை கருப்பு நாளாக 2010 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கத் தொடங்கினர். அது துக்க நாளாக 2018 ஆம் ஆண்டிலிருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பட்டியலின உரிமைகளை இழப்பதன் மூலம் தலித் கிறித்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமை, சட்டப்பாதுகாப்பு மற்றும் தனித்தொகுதிகளில் தேர்தலில் நிற்கும் உரிமை போன்றவை மறுக்கப்படுகிறது.
இந்த ஆண்டும்(2021) துக்க நாளானது தமிழக ஆயர் பேரவையின் பட்டியலினத்தார் பழங்குடியினர் பணிக்குழுவின் சார்பாக இணையவழியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தை பணிக்குழுவின் தலைவரான மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையேற்று நடத்தினார். சிறப்புரையாளர்களாக சிறுபான்மையினர் நலத்துறை ஆணையத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிறித்தவ மக்களின் குரலுமாக இருந்தவர் உயர்திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவுனரும், தலைவருமான உயர்திரு தொல்திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து உயர்திரு பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில் அனைவரும் தலித் கிறித்தவர்களுக்கு பட்டியலின உரிமை கோருதல் நியாயமான பிரச்சனை என்றாலும் அடுத்த கட்டமாக கைநீட்டுவதற்கு யாரும் இல்லை
அரசியல் சாசன செட்டப் படி எல்லோரு சமம், எல்லோரும் சரிசமம், எல்லோர்க்கும் எல்லா உரிமைகளும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் தான் அரசியலமைப்பு சாசனத்தை அறிவர் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள் எனவும் மதம் மாறிய சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும் பட்டியலின உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற போது ஏன் தலித் கிறித்தவர்களுக்கும், இசுலாமியர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை என கேள்வியெழுப்பினார். அரசியல் பங்கேற்பும், அரசியல் உலகிலே நுழைந்து ஒரு அழுத்தம் கொடுத்தால் தான் இது நிறைவேறும் என்றார்.
அவரைத்தொடர்ந்து முனைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய எழுச்சி உரையில் மதம் மாறிய தலித்துகள் குறிப்பாக கிறித்தவ தலித்துகள் பட்டியலினத்தில் சேர்க்கப் பட வேண்டுமென காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், இப்போது பா.ஜ.க ஆட்சி காலத்திலும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நம் குரல் செவிடன் காதில் ஒலிக்கும் சங்கென விரயமாகிக் கொண்டிருக்கிறது.
ஆட்சி மாறுகின்ற வரையிலும் நாம் காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அது மாறுவதற்குரிய முயற்சியையும் எடுக்க வேண்டும் என்றார்.
இவர்களோடு இணைந்து மேதகு ஆயர் நீதிநாதன், மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ், தலித் கிறித்துவ நல இயக்கத்தின் நிறுவுனரும் பேராயருமான தன்ராஜ், ஊளுஐ திருச்சி- தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் சந்திர சேகர், தேசிய தலித் கிறித்தவ கண்காணிப்பகத்தின் தலைவரான அருள்முனைவர். வின்சென்ட் மனோகரன், அருள் பணி கோஸ்மோன், திருமிகு கிரசன்ஷியா மற்றும் அருள்பணி லாரன்ஸ் என பல தலைவர்கள் எழுச்சி உரையாற்றினர்.
இந்தக்கூட்டம் தமிழக ஆயர் பேரவையின் பட்டியலினத்தார் /பழங்குடியினர் பணிக்குழுவின் மாநில செயலர் அருள்பணி அ குழந்தைநாதன் தலைமையில் ஏற்பாடு செய்து சிறப்புடன் நடத்தப்பட்டது.
தமிழக ஆயர் பேரவையின் பட்டியலினத்தார் /பழங்குடியினர் பணிக்குழு