பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு
(எசா 50:5-9, யாக் 2:14-18, மாற் 8:27-35)
திருப்பலி முன்னுரை
“என் கண் முன் நில்லாதே, சாத்தானே”(மாற் 8:33)
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று இயேசு சீடர்களிடம் கேட்க, பேதுரு நீர் மெசியா என்று பதிலளித்து ஆண்டவர் இயேசுவிடம் நன்மதிப்பை பெறுகிறார். சற்றுநேரம் கழித்து அதே இயேசுவிடம் சாத்தான் என்ற பெயரை வாங்குகிறார். இவ்வுலகை மீட்க தன் ஒரே மகன் பாடுபட்டு, சிலுவை மரணம் ஏற்கவேண்டும் என்பது இறைத்தந்தையின் திருவுளம். தன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இறைமகனின் விருப்பம். இறைவனின் மீட்புத்திட்டம் இந்த வகையில் நிறைவேறக்கூடாது என்பது மனிதனான பேதுருவின் விருப்பம். வழக்கமாக இறைவனின் திட்டத்திற்கு எதிராக இருப்பவன் சாத்தான். இவ்வாறு தன் தந்தையின் மீட்புத்திட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்ன பேதுருவை, ஆண்டவர் இயேசு சாத்தான் என்று அழைக்கிறார். நாம் எப்போதெல்லாம் இறைவனின் விருப்பத்திற்கு எதிராக செல்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஆண்டவர் இயேசு நம்மை பார்த்து சொல்வார் என் கண்முன் நில்லாதே சாத்தானே என்று. ஆகவே, இறைத்தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து அவரின் பிள்ளைகளாகும் வரத்தினை இப்பலியில் வேண்டி மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவருக்கு ஊழியம் புரியவருவோர் அடித்து நொறுக்கப்படுவார்கள், காரிதுப்பப்படுவார்கள். இருப்பினும் அவர்களுக்கு அவமானம் இருக்காது. ஏனெனில், அவர்களுக்கு துணைபுரிய, அவர்கள் சார்பாக போராட இறைவன் இருக்கிறார் என்று கூறும், இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளைப் பக்தியோடு கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நம் நம்பிக்கை செயல் வடிவம் பெறவேண்டும். நான் ஏழைகளுக்கு உதவிசெய்வேன் என்பதை வெறும் வார்த்தைகளில்மட்டும் வெளிப்படுத்தாமல் அதை செயல்களில் காட்டும்போது நாம் ஆண்டவருக்கு உகந்தவர்களாகவும், நம் நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் நம்பிக்கையாளர்களாகவும் மாறுகிறோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.
மன்றாட்டுக்கள்
1. எங்கள் விண்ணகத்தந்தையே, உம் திருஅவைக்காக ஊழியம் புரிய முன் வந்திருக்கும் உம் பணியாளர்கள் உமக்காகவும், உம் திருஅவைக்காகவும் எத்தகைய துன்பங்களையும், அவமானங்களையும் ஏற்று உம் மக்களை விண்ணக வாழ்வை நோக்கி தொடர்ந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எங்கள் வானகத்தந்தையே, எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாட்டின் வளங்களையும், மக்களையும் ஆட்சி செய்யாமல், உம் திருவுளத்தை அறிந்து மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், தாங்கள் வாக்களித்தவற்றை நிறைவேற்று பவர்களாகவும் இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்கள் அன்புத்தந்தையே, சர்வதேச பெண்களின் நலனுக்காக மன்றாட அழைக்கப்பட்டிருக்கும் நாங்கள், அவர்களை மனிதநேயத்தோடு மதிக்கவும், மனித மாண்போடு அன்பு செய்யவும் சகோதரப் பாசத்தோடு வழிநடத்தவும் தேவையான, பக்குவமான மனநிலையை நாங்கள் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எங்கள் பரமதந்தையே, போரினால், இயற்கை சீற்றங்களினால், இப்பெருந்தொற்றினால் தங்களின் அமைதியையும், வாழ்வாதாரங்களையும், உறவுகளையும் இழந்து அகதிகளாக இங்கும், அங்கும் அலைந்துகொண்டிருக்கும் மக்களுக்கு நீரே அரணும், அடைக்கலமுமாய் இருந்து நல்வாழ்வு தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எங்கள் இறைத்தந்தையே, இவ்வுலகிற்கே உணவளிக்கும் விவசாய பெருமக்களை நிறைவாக ஆசீர்வதியும். யார் என்றே தெரியாத பிறமக்களின் பசியைப்போக்க இலாபநஷ்டம் பாராமல் மழை, வெயில் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வை நீர் உயர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.