Namvazhvu
   பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை – திருத்தந்தை
Friday, 24 Sep 2021 05:28 am
Namvazhvu

Namvazhvu

                                                                                                                                                               பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லைதிருத்தந்தை

 இஸ்பானியாவின் ரேடியோ கோப் (Radio COPE) என்ற வானொலி நிறுவனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில், இவ்வாண்டு ஜூலை மாதம், உரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் தான் பெற்றுக்கொண்ட அறுவை சிகிச்சையைப் பற்றியும், மற்றும் ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் பற்றியும் பேசினார்.

இஸ்பானிய ஆயர் பேரவையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் கார்லோஸ் ஹெர்ரேர்ரா அவர்களுடன், திருத்தந்தை மேற்கொண்ட 90 நிமிட உரையாடலில், தூக்கியெறியும் கலாச்சாரத்தை கொண்டுள்ள இன்றைய சமுதாயத்தில் நிலவும் கருணைக்கொலை, கருக்கலைப்பு ஆகியவை குறித்தும், வத்திக்கானில் நிகழ்ந்துவரும் உயர்மட்ட மாற்றங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அறுவை சிகிச்சையைப்பற்றி...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், அவரது மனதுக்குப் பிடித்தமான சிக்கல்களைத் தீர்க்கும் அன்னை மரியாவின் திரு உருவப்படத்திற்குக் கீழ் நடைபெற்ற இந்த உரையாடல் பதிவில், ஜெமெல்லி மருத்துவமனையில் தான் பெற்ற அறுவை சிகிச்சையைப்பற்றிய சிந்தனைகளை முதலில் பகிர்ந்துகொண்டார்.

தன் குடல் பகுதியில் ஏற்பட்டிருந்த பிரச்சனையை, மருந்தின் வழியே குணமாக்கலாம் என்று, ஒரு சில மருத்துவர்கள் கருத்து தெரிவித்த வேளையில், வத்திக்கான் மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் ஒரு மருத்துவத் தாதியர் (செவிலியர்)  மட்டும், தான் அறுவை சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தினார் என்று திருத்தந்தை கூறினார்.

1957 ஆம் ஆண்டு, ஒரு மருத்துவ தாதியர் வழியே தன் உயிர் காப்பாற்றப்பட்டதைப் போலவே, இம்முறை, வத்திக்கானில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஒரு தாதியர் வழங்கிய ஆலோசனை, தன் உயிரை, இரண்டாவது முறை காத்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு தன் சிறப்பான நன்றியை வெளிப்படுத்தினார்.

அறுவைச் சிகிச்சைக்குப்பின் வழக்கம்போல்...

இந்த அறுவைச் சிகிச்சைக்குப்பின் தன் குடலில் 33 சென்டிமீட்டர் குறைந்துவிட்டது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருப்பினும், இதனால் தன் உணவிலும், செயல்பாடுகளிலும் பெரும் மாற்றங்கள் இன்றி தன்னால் இயங்க முடிகிறது என்றும் இந்த உரையாடலில் கூறினார்.

தன் உடல்நலக் குறைவையொட்டி, இத்தாலி மற்றும் அர்ஜென்டினா நாளிதழ்களில் தான் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பேசப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம், தனக்கு இதுவரை எழவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடி

இந்த வானொலி உரையாடலில் தன் உடல்நலனைக் குறித்து முதலில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியைக் குறித்து பேசியபோது, தற்போது திருப்பீடச் செயலராகப் பணியாற்றும் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பன்னாட்டு உறவுகளில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்றும், அவர், ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் ஈடுபட்டுள்ளது, தனக்கு பெரும் பக்கபலமாக உள்ளது என்றும் கூறினார்.

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் கலாச்சாரத்தையும், மக்களின் பாரம்பரியத்தையும் மதிக்காமல், அந்நிய நாட்டு படையெடுப்பின் வழியே, ஒரு நாட்டில், குடியரசை நிறுவமுடியும் என்று, அரசுகள் முடிவெடுக்கும் போக்கிற்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்று, ஜெர்மன் நாட்டின் தலைவர் ஆஞ்சலா மெர்க்கல் அவர்கள் கூறியதை தன் உரையாடலில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய அரசியல் உலகில், ஜெர்மன் தலைவர் மீது தான் அதிகம் மதிப்பு கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

சீனாவுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே...

சீனாவுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்பூர்வ உறவுகளைப் பற்றிய கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவுடன் உறவு கொள்வது எளிதல்ல என்பதையும், இருப்பினும், உரையாடல் வழியே நன்மைகள் செய்யும் முயற்சிகளை திருப்பீடம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் பணிக்காலத்தில் திருப்பீடச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் அகோஸ்தீனோ காசரோலி அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், திருப்பீடம் மேற்கொள்ளும் உரையாடல் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்துவருகின்றன என்பதை, திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

கருணைக்கொலை, கருக்கலைப்பு

இதைத் தொடர்ந்து, திருப்பீடத்தின் உயர்மட்ட அளவில் துவக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு, நிதித்தொடர்பாக வத்திக்கானில் நடைபெறும் வழக்கு, பாலியல் முறையில், சிறார் அடைந்துவரும் துன்பங்களுக்கு பதிலிறுப்பு, கருணைக்கொலை, கருக்கலைப்பு என்ற பல்வேறு தலைப்புக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரேடியோ கோப் வானொலியில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி முடிய ஹங்கேரி நாட்டிற்கும், ஸ்லோவாக்கியா நாட்டிற்கும் செல்வதற்குரிய சக்தி தனக்கு இருப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிளாஸ்கோ நகரில், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் COP26  சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டிற்குச் செல்லும் திட்டம் தற்போது இருப்பதாகவும், அன்றைய நிலையில் தன் உடல்நலம் அனுமதித்தால், தான் கட்டாயம் அந்தக் கூட்டத்திற்குச் செல்லவிருப்பதாகவும், இந்த உரையாடலில் கூறினார்.