Namvazhvu
இன்றைய இறையியலுக்கும், கலாச்சாரத்திற்கும் இடையே மரியா
Friday, 24 Sep 2021 05:45 am

Namvazhvu

இன்றைய இறையியலுக்கும், கலாச்சாரத்திற்கும் இடையே மரியா

 "இன்றைய இறையியல், மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே மரியா" என்ற தலைப்பில், செப்டம்பர் 08 ஆம் தேதி  முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற்ற இணையம் வழி - 25வது பன்னாட்டு மரியியல் கருத்தரங்கிற்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதியைப் பேணி வளர்க்கும் திறனுடைய கலாச்சாரங்களுக்கு இடையே, உரையாடல் இடம்பெறுவதற்கு, மரியியல் அவசியம் என்பதற்கு, இத்தகையக் கருத்தரங்குகள் தெளிவான சான்றுகளாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்,.

இறையியலுக்கும், கலாச்சாரத்திற்கும் இடையே  மரியாவின் பங்கு பற்றி எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, கிறிஸ்தவநெறியில், இவற்றை வாழும்போது எதிர்கொள்ளும் கடினங்களில், மரியா, இனம் அல்லது தேசியத்தைக் கடந்து, தன் பிரசன்னத்தால் உதவுகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

மரியா என்பவரில் நிறைந்துள்ள பேருண்மை, மனிதஉரு எடுத்த இறைவார்த்தையின் பேருண்மையாகும் எனவும், இதனால், மரியியல் வல்லுநர்கள், மரியியலுக்கும், இறைவார்த்தையின் இறையியலுக்கும் இடையேயுள்ள உறவை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்று, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்செய்தியில் கூறியுள்ளார்.

இதே இறைவார்த்தையே, பொதுமக்களில் அன்னை மரியா பக்தியை, இயல்பாகவே பேணி வளர்க்கிறது என்பதை மறக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த இறைவார்த்தையே, கிறிஸ்தவர்களில், குறிப்பாக, வறியோரின் பக்தியில், இறையியல் வாழ்வை வழங்குகின்றது என்று கூறினார்.

நற்செய்தியைப் பின்பற்றியதன் அழகிலும், இப்பூமிக்கோளம், மற்றும், மனித சமுதாயத்தின் பொது நன்மைக்காகப் பணியாற்றியதிலும் மரியா, கடுந்துன்பங்களில் வாழ்கின்ற மக்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதற்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வில் அமைகின்ற புதிய உலகைப் பெற்றெடுப்பதற்கு, குரலற்றவர்களின் குரலாக, மரியாவே மாறினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை, அக்கழகத்தினருக்கு, தன் ஆசீரையும் அளித்துள்ளார்.