Namvazhvu
SUNDAY LITURGY தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
Thursday, 14 Mar 2019 12:30 pm
Namvazhvu

Namvazhvu

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு


திருப்பலி முன்னுரை:

கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே,

இன்று தவக்கால 2 ஆம் ஞாயிறு, இன்றைய உலகின் தேடல்களுல் சிறப்பிடம் பெறுவது முன்னேற்றம். இதற்குக் காரணம் திடீர் திருப்பங்கள்போல மாற்றங்கள் அமைகின்றன. ஆனால் அவை முன்னேற்றங்களாக வெளிப் படுவதில்லை. அந்த முன்னேற்றத்தை நோக்கிய மாற்றத்தை வழங்கும் அருளின் காலமாக தவக்காலம் கருதப்படுகிறது. திருஅவையின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இதுவே. இதை இன்றைய திருவழிபாட்டு வாசகங்களும் அவற்றையொட்டி வழங்கப்படும் சிந்தனைகளும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. அச்சிந்தனைகளின் விளக்கமாக இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வு அமைகிறது. இந்நிகழ்வில் விடுதலைப் பயணத்தைத் தலைமையேற்று வெற்றியுடன் நடத்திச் சென்ற எவரும் தம் மக்களை பார்வோன் அடிமை நிலையினின்று விடுவிக்க தகுந்த கருவியாகத் தந்தையால் அனுப்பப்பட்டவருமான மேசேவும் இறப்பு அறியா இறைவாக்கினரும் வல்லசெயல்கள் வழியாக வானகத் தந்தையை வெளிப்படுத்தியவருமான எலியாவும் இயேசுவுடன் தோன்றியது அரிய மற்றும் பெரிய செயலாகும். தாம் மாறாமல் தரணியை மாற்ற அருளுரைகள், அரும்அடையாளங்கள், ஆற்றல்மிக்க செயல்களைச் செய்து வந்த இயேசு, இன்று தனது உண்மை இயல்பை தம் உடன் திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தியதும் அவருக்குச் செவிசாய்க்க தந்தையால் அறிவுறுத்தப்பட்டதும் நமது அகமாற்றத்துக்கு விடுக்கப்பட்ட அன்பு அழைப்பாகும். எனவே, இயேசுவை எல்லாச் சூழல்களிலும் ஏற்று, அவரையே நமது சான்று வாழ்வால் பிறருக்கு அறிவிக்கும் பணியாளராக திகழ இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை: தொடக்க நூல் 15:5-12, 17-18, 21

நம்பிக்கையாளரின் தந்தை எனப் போற்றப்படும் ஆபிராமுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்ட தந்தை இறைவன், அவர் வழியாக, அவரது வழி மரபினருக்கு வழங்கும் நாட்டைப் பற்றிக் கூறுகிறார். நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் கடவுளின் ஆசி தொடரும் என்ற நல்ல செய்தியை நமக்குத் தரும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 27:1, 7-8,9, 13-14

பல்லவி: ’ஆண்டவரே, என் ஒளி; அவரே என் மீட்பு’

இரண்டாம் வாசக முன்னுரை: பிலிப்பியர் 3:17-4:1

கிறிஸ்துவின் சிலுவைக்கு இருக்கும் பகைவர்களின் முரண் பாடுகள் நிறைந்த சிந்தனைகளைத் திருத்தூதர் பவுல் படம்பிடித்துக்

காட்டுகிறார். பிலிப்பிய மக்களுக்குத் தம்மை எடுத்துக் காட்டாகக் காட்டி ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருக்க அழைப்பு விடுக்கிறார் இத்தவக் காலத்தில். கிறிஸ்தவருக்குச் சிலுவை என்பது வெற்றிவாகைக்கான வாய்ப்பு என்பதை உணர்ந்தவர்களாய் வாழ இன்றைய இரண்டாம் வாசகத்துக்குச் செவி சாய்ப்போம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:28-36

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுக்கள்

1. புதுப்பிக்க அழைக்கும் இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் திருநிலையினர் அனைவரும் உம்மால் தங்களைப் புதுப்பிக்க விடுக்கப்படும் அழைப்பை அன்புடன் ஏற்று, உம் திருமகன் இயேசு வின் குரலுக்குச் செவிசாய்த்து, புத்துலகம் தயாரிக்கப்படவும் வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆசிகள் வழங்கும் அன்புத் தந்தாய்!

எம் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உமது நிறை ஆசிகளை வழங்கியருளும். எங்களை நிறைவாழ்வைநோக்கி வழி நடத்தும் தங்கள் பணிகளை அவர்கள் சிறப்பாகச் செய்யவும், குறிப்பாக இயற்கை வளங்களைப்பாதுகாக்கவும் அண்டை நாடான பாகிஸ்தான் விவகாரத்தில் முன்மதி மற்றும் துணிச்சலுடன் செயல்பட்டு அமைதியை நிலை நாட்டவும் வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.

3. உறவில் நிலைத்திருக்க அழைக்கும் இறைவா!

தவக்கால சிறப்புச் செயல்பாடு களில் ஒன்றாக, எம் இல்லங்களில், அன்பியங்களில் பணியாற்றும் தளங்களில் உறவுகள் நலிவுற நாங்கள் காரணமாகாமல் வாழவும் அங்கு முறிந்த உறவுகளை உடனே சரிசெய்ய முன்வரவும் வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வடிவமைக்கின்ற இறைவா!

உம் திருமகன் இயேசு தனது தோற்ற மாற்ற நிகழ்வில் எமக்கு உணர்த்த விரும்பும் செய்திகளான: அவரைப் புரிந்துகொள்ளுதல், அவரை அணிந்து கொள்ளுதல், அதாவது அவருக்குச் செவிசாய்த்தல், அவரை அறிவித்தல் ஆகிய வற்றை எமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செயல்படுத்தி, சிலுவை யும் மாட்சியும் நிறைந்ததே கிறிஸ்தவ வாழ்வு என்பதை நாங்கள் உணர்ந்து வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.

5. ஆற்றுப்படுத்தும் அரும்பணியை ஆற்ற அழைக்கும் இறைவா!

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் வாட்டிவதைக்க, துன்பங்கள் மட்டுமே நிலை யானவை என்று பயந்து வாழும் பலரதுபரிதாபமான வாழ்வினில் நம்பிக்கை பூக்கவும் வழிகாட்டவும் பணியாளர்கள் முன்வரவேண்டுமென்றும் அவர்கள் குறிப்பாக தன்னம்பிக்கை இழந்து வாழ்வோரை இனம்கண்டு அவர்களை ஆற்றுப்படுத்தும் பணியில் வெற்றி காண வேண்டுமென்றும் உம்மை மன்றாடு கிறோம். (மாணவர்கள் தேர்வுகளில்  வெற்றிபெற மன்றாடலாம்)