Namvazhvu
‘கூட்டொருங்கியக்கம்’ பற்றிய ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு ஏடு
Friday, 24 Sep 2021 09:26 am
Namvazhvu

Namvazhvu

’கூட்டொருங்கியக்கம்’ என்ற தலைப்பில் 2023  ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, தலத்திருஅவைகளின் தயாரிப்புக்கு உதவும் ஓர் ஏட்டுடன், “வழிகாட்டி நூல்” (vademecum)  ஒன்றையும், உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பொதுச்செயலகம், செப்டம்பர் 7 ஆம் தேதி செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

2023  ஆம் ஆண்டு உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, முதல் கட்ட தயாரிப்புகள், உரோம் நகரில் இவ்வாண்டு அக்டோபர் 9, 10 ஆகிய இரு தேதிகளிலும், தலத்திருஅவைகளில் இவ்வாண்டு அக்டோபர் 17 ஆம் தேதியிலும், அதிகாரப்பூர்வமாகத் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை தலத்திருஅவைகளில் நடைபெறவிருக்கும் தயாரிப்பு நிகழ்வுகளில், இறை மக்கள் அனைவரின் கருத்துகளுக்குச் செவிமடுக்கவும், அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் உதவும் நோக்கத்தில், இந்த தயாரிப்பு ஏடு வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாசிகள், தங்களின் கருத்துக்களைத் துணிச்சலோடு எடுத்துரைக்கவும், அவற்றுக்கு, முற்சார்பற்ற மனநிலையோடு செவிமடுக்கவும், திருஅவை, சமுதாயம், மற்ற கிறிஸ்தவ சபைகள் ஆகியவற்றோடு கலந்துரையாடல் நடத்தவும், இந்த தயாரிப்பு ஏடு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருஅவை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட, நற்செய்தி அறிவிப்புப் பணியில், பல்வேறு நிலைகளில், எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது, மற்றும், கூட்டொருங்கியக்கத் திருஅவையாக வளர்வதற்கு, ஆவியானவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நம்மைத் தூண்டுகிறார் ஆகிய அடிப்படை கேள்விகளோடு இத்தயாரிப்பு ஏடு துவங்கியருக்கிறது.

தலத்திருஅவைகளில், ஒன்றிணைந்த பயணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் சிந்தித்துப் பார்ப்பதற்கு அழைப்புவிடுக்கும் இவ்வேடு, ஒன்றிணைந்த பயணத்திற்கு பத்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

“நமது திருஅவை”, “நம்மோடு இருப்பவர்கள், குறிப்பாக, புறக்கணிக்கப்பட்டவர்கள், மற்றும் திருஅவைக்குத் தொலைவில் உள்ளவர்களோடு பயணித்தல்” போன்ற பதங்களுக்குப் பொருளைக் கண்டுகொள்ளுதல், இளையோர், பெண்கள், துறவியர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோருக்குச் செவிமடுத்தல், ஒன்றிணைந்து பயணிப்பதற்கு இறைவேண்டல் உதவும் முறை போன்ற, பல பரிந்துரைகள் இந்த ஏட்டில் தரப்பட்டுள்ளன.