ஆகஸ்ட் 26 ஆம் தேதி வியாழனன்று, அருள்சகோதரி அலெக்ஸாண்ரா ஸ்மெர்ரில்லி FMA அவர்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்கால செயலராக, திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இத்திருப்பீட அவையின் நேரடிப் பொதுச்செயலராகவும், வத்திக்கானின் கோவிட்-19 குழுவின் பொருளாதாரப் பணியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிவரும், இத்தாலிய அருள்சகோதரி ஸ்மெர்ரில்லி அவர்கள், ஆகஸ்ட் 26 ஆம் தேதி அக்குழுவின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத் தகவல் தொடர்பகம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றும், கர்தினால் பீட்டர் டர்க்சன், அருள்சகோதரி ஸ்மெர்ரில்லி, அந்த அவையின் குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரிவின் நேரடிப்பொதுச்செயலர் அருள்பணி ஃபாபியோ பாஜியோ ஆகிய மூவரும், வத்திக்கானின் கோவிட்-19 குழுவின் மேலாண்மைப் பணியை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளது.
பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள 46 வயது நிரம்பிய அருள்சகோதரி ஸ்மெர்ரில்லி அவர்கள், சலேசிய சபையைச் சார்ந்தவர், மற்றும் இவர், திருப்பீடத்தில், இத்தகைய முக்கிய பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் அருள்சகோதரி ஆவார்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு அருள்பணி புரூனோ மரிய டஃபே அவர்களும், உதவிச் செயலராகப் பணியாற்றிய அர்ஜென்டீனா நாட்டு அருள்பணியாளர் அகுஸ்தோ ஸாம்பினி அவர்களும், அவரவர் மறைமாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, அருள்சகோதரி ஸ்மெர்ரில்லி அவர்கள், இடைக்காலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.