புடாபெஸ்ட் நகரில் திருத்தந்தையின் மூவேளை செப உரை
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 52வது உலக நற்கருணை மாநாட்டின் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை:
அன்பு சகோதரரே, சகோதரிகளே, ‘திருநற்கருணை’ என்பதன் பொருள் ’நன்றி உரைப்பது’ என்பதை நினைவில் கொண்டு, இந்த உலக திருநற்கருணை மாநாட்டின் இறுதி நிறைவையொட்டி, புடாபெஸ்ட் நகரில் மேற்கொண்ட திருப்பயணத்திற்காக என் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்நாட்டில் முழு ஒன்றிப்பை நோக்கியப் பயணத்தில் இணைந்து செல்லும் பல்வேறு வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தை அரவணைக்க ஆவல் கொள்கின்றேன். இவ்வேளையில், இங்கு வந்திருக்கும் என் சகோதரர், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, திருநற்கருணை மாநாட்டிற்காக ஏற்பாடுச் செய்த அனைவருக்கும் என் நன்றியை வெளியிடுகிறேன்.
எனக்கு வரவேற்பளித்த அரசு அதிகாரிகள், மதத்தலைவர்கள் மற்றும் ஹங்கேரி நாட்டின் அனைத்து மக்களுக்கும் என் நன்றியை வெளியிட ஆவல் கொள்கின்றேன். "1000 ஆண்டுகளாக உங்கள் மீட்பின் தூணாக சிலுவை இருந்து வந்துள்ளது. இப்போது, கிறிஸ்துவின் இந்த அடையாளம் உங்களின் நல்ல வருங்காலத்திற்கான நம்பிக்கையாகத் திகழட்டும்" என்பதை, இந்த மாநாட்டிற்கென தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பாடல், உங்களுக்கு நினைவூட்டியது. இதைத்தான் நானும் விரும்புகிறேன். அதாவது, கிறிஸ்துவின் சிலுவை, உங்கள் கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருக்கட்டும். தன் கிறிஸ்தவ வேர்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஹங்கேரியின் மத உணர்வே இந்நாட்டின் உயிர்நாடியாக உள்ளது. இம்மண்ணில் நாட்டப்பட்ட சிலுவை, நன்கு வேரூன்றி நம்மை அழைப்பது மட்டுமல்ல; அனைவரையும் நோக்கி கைகளை உயர்த்தி நீட்டுகிறது. நம் வேர்களை உறுதியாக வைத்திருக்க நம்மைத் தூண்டும் சிலுவை, நம் காலத்தின் மக்களுக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படவும் அழைப்புவிடுக்கிறது. நீங்கள் உங்கள் கிறிஸ்தவ வேர்களில் ஆழமாக ஊன்றப்பட்டவர்களாகவும், மற்றவர்களுக்கு தங்களைத் திறந்தவர்களாகவும், அக்கறையுடையவர்களாகவும் விளங்கவேண்டும் என நான் ஆவல்கொள்கின்றேன். அன்பிற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள இன்றையக் காலக்கட்டத்தில், இந்த நற்கருணை மாநாட்டின் அடையாளச் சின்னமாகிய ‘மறைபரப்பின் சிலுவை’, கடவுளின் எல்லையற்ற அன்பை ஒவ்வொருவருக்கும் நம் வாழ்வால் அறிவிக்க நம்மை வழிநடத்துவதாக.
இந்நாளில், போலந்தின் வார்ஸாவில் அந்நாட்டு முன்னாள் முதுபெரும்தந்தை, கர்தினால் ஸ்டெஃபான் விஸ்னவ்ஸ்கி அவர்களும், சிலுவையின் பிரான்சிஸ்கன் சகோதர பணியாளர் சபையைத் தோற்றவித்த அருள்சகோதரி எலிசபெத் சிசெஸ்கா அவர்களும், திருஅவையில் அருளாளர்களாக உயர்த்தப்படுகிறார்கள். மனித மாண்புக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உழைத்து, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட கர்தினால் விஸ்னவ்ஸ்கி அவர்களும், இளவயதிலேயே பார்வைத் திறனை இழந்து, பார்வையற்றோருக்காக உதவுவதிலேயே தன் வாழ்வு முழுவதையும் செலவிட்ட அருள்சகோதரி எலிசபெத் அவர்களும், முதலில் சிலுவையோடு பலவகைகளில் தொடர்புடையவர்கள். அன்பின் வல்லமையுடன் இருளை ஒளியாக மாற்ற, இவர்களின் எடுத்துக்காட்டுகள் நமக்கு உதவுவதாக.
அன்னை மரியாவின் புனிதமிகு திருப்பெயரைக் கொண்டாடும் இந்நாளில், மூவேளை செபவுரையைச் செபிப்போம். முற்காலங்களில், ஹங்கேரி நாட்டவர்கள், அன்னை மரியாவின் பெயருக்கு வழங்கிய பெருமதிப்பின் காரணமாக, அவரின் பெயரை உச்சரிக்கத் தயங்கி, அதற்குப் பதிலாக இந்நாட்டின் அரசிக்கு பயன்படுத்திய, மரியாதைக்குரிய பட்டப் பெயரையே பயன்படுத்தினர். தொன்று தொட்டு, உங்களின் பாதுகாவலியாக இருந்துவரும் ஆசீர்வதிக்கப்பட்ட அரசியாம் அன்னை மரியா, உங்களோடு துணைவந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த உயரிய நகரிலிருந்து என் ஆசீரை, அனைவருக்கும், குறிப்பாக, குழந்தைகள், இளையோர், முதியோர், நோயுற்றோர், ஏழைகள், சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோர், என அனைவருக்கும் வழங்குகின்றேன். உங்களோடு இணைந்து, உங்களிடம் கூறுகின்றேன், ’இறைவன் ஹங்கேரி நாட்டு மக்களை ஆசீர்வதிப்பாராக’.