முதல் பகுதி - ஹங்கேரி நாட்டிற்கான திருத்தூதுப்பயணம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் செப்டம்பர் 12 ஆம் தேதி ஞாயிறு முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி புதன் வரை ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகிய இரு நாடுகளுக்கும் தமது 34வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார்.
திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளான ஹங்கேரி, மற்றும் சுலோவாக்கியா ஆகிய இரு நாடுகளின் மக்கள், ரஷ்ய கம்யூனிச அரசின் பல ஆண்டுகால அடக்குமுறைகள் மற்றும், மதத்தின்மீது வெறுப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், நற்செய்திக்குத் துணிச்சலோடு சான்று பகர்ந்தவர்கள் என்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
‘நம் வாழ்வு’ வார இதழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை அப்படியே தொகுத்தளித்து ஓர் நேரடி அனுபவத்தைத் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வகையில் திருத்தந்தையின் 34 வது திருத்தூதுப் பயணத்தை அறிந்துகொள்வோம்.
செப்டம்பர் 12, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாலை 5.20 மணிக்கு, வத்திக்கானிலிருந்து உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் சென்று, ஹ320 ஆல் இத்தாலியா விமானத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டுக்கு புறப்பட்டார்.
இத்திருத்தூதுப் பயணம் பற்றிய செய்திகளை வழங்குவதற்காக, 78 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் திருத்தந்தையோடு அதே விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். இவர்களில், ஐந்து பேர் ஹங்கேரி நாட்டவர்; மூன்று பேர் சுலோவாக்கியா நாட்டவர். இவர்களை விமானப் பயணத்தில் முதலில் வாழ்த்திய திருத்தந்தை, தன்னோடு பயணம் மேற்கொள்ளும் சிலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.
இதுநாள்வரை திருத்தந்தையரின் திருவழிபாடு களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றிய பேரருள்திரு மரினோ குய்தோ அவர்களும், திருத்தூதுப் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த பேரருள்திரு டியுடோனே டட்டனாவ்வு அவர்களும் ஆயர்களாக நியமனம் பெற்றிருப்பதையும், அவர்கள், திருத்தூதுப் பயணத்தில் தனக்கு யுணைநிற்பது இதுவே இறுதிமுறை என்றும் கூறி, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார். இன்னும், ஆயர் டட்டனாவ்வு அவர்களின் பணியை ஆற்றவிருக்கின்ற, இந்தியரான பேரருள்திரு ஜார்ஜ் ஜேக்கப் கோவக்காடு (George Jacob Koovakad) அவர்களையும் சுட்டிக்காட்டி அவருக்கும் தன் நல்வாழ்த்தைத் தெரிவித்தார். பேரருள்திரு ஜார்ஜ் ஜேக்கப் அவர்கள், எப்போதும் புன்னகையோடு காணப்படுபவர், அவர் புன்னகை மன்னன் என்றும், அவரை, புன்முறுவலோடு திருத்தந்தை நோக்கினார். இவ்வாறு நல்லதொரு சூழலை உருவாக்கி, தனது 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார்.
அவர்கள் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து புடாபெஸ்ட் நகரை செப்டம்பர் 12 ஆம் தேதி ஞாயிறு உள்ளூர் நேரம் சரியாக காலை 7 மணி 42 நிமிடங்களுக்குச் சென்றடைந்தனர். அப்போது விமானத்தின் வழியில் தான் கடந்துசென்ற இத்தாலியா, குரோவேஷியா ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து, தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார். அந்நாட்டின் நேரப்படி காலை 7.42 மணிக்கு திருத்தந்தையின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
இரு சிறார், மரபு உடைகளில் திருத்தந்தைக்கு மலர்கள் அளித்து வாழ்த்தி வரவேற்றனர். விமான நிலையத்தில் ஹங்கேரியின் துணை பிரதமர் பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அதன் பின்னர் திருத்தந்தை 22.6 கிலோமீட்டர் பயணம் செய்து உலக நற்கருணை மாநாடு நடைபெறும் புடாபெஸ்ட்டில் உள்ள தியாகிகள் வளாகத்திற்குச் சென்றார்.
அவ்வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தின் ‘ரொமானிக்கா’ என்ற அறையில், ஹங்கேரி நாட்டின் அரசுத்தலைவர் யானோஸ் ஏடர், பிரதமர் விக்டர் ஓர்பான், உதவிப் பிரதமர் செஸ்ஓல்ட் செம்ஜென் ஆகியோரோடு கலந்துரையாடி, அவர்களுக்குப் பரிசுப்பொருள்களையும் திருத்தந்தை வழங்கினார். வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை ஆசீர் வழங்குவதைச் சித்தரிக்கும் வண்ணப்படம் ஒன்றை அரசுத்தலைவருக்குப் பரிசாக திருத்தந்தை வழங்கினார். இச்சந்திப்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும் கலந்துகொண்டனர். ஹங்கேரியில் திருஅவை ஆற்றிவரும் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணம், குடும்பத்தைப் பாதுகாத்து அதனை வளர்ப்பதில் அக்கறை போன்ற தலைப்புகள் இச்சந்திப்பில் கலந்துபேசப்பட்டன என்று கூறப்படுகிறது. இச்சந்திப்பு முடியும்போது காலை 9.25 மணி.
பின்னர், நுண் கலைகள் அருங்காட்சியகத்திலுள்ள ‘எழுச்சி ’ என்ற அறையில், அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஹங்கேரி நாட்டு ஆயர்களைச் சந்தித்தபின்னர், அதே அருங்காட்சியகத்தில், அந்நாட்டின் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபை, சீர்திருத்த சபை, கால்வனிஸ்ட் சபை உட்பட, 12 கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், யூதமதப் பிரதிநிதிகள் என, ஏறக்குறைய ஐம்பது பேரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார். ‘நான் 15 வயது நிரம்பியவர் அல்ல; எனவே அமர்ந்துகொண்டு உரையாற்றுகிறேன், மன்னிக்கவும்’ என்று சொல்லி, திருத்தந்தை உரையைத் துவக்கினார். திருத்தந்தை உரையாற்றுவதற்கு முன்பாக, ஹங்கேரி நாட்டு கிறிஸ்தவ சபைகள் அவையின் தலைவரான, கால்வனிஸ்ட் சபை ஆயர் யோசேப் ஸ்டைன்பாக் அவர்களும், அந்நாட்டு யூதமதக் குழுமத்தின் தலைவர் ரபி ராபர்ட் ஃபுரோலிச் அவர்களும், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வழங்கினார். அப்போது காலை 11.30 ஆகியிருந்தது.
புடாபெஸ்ட் நகரின் அந்தத் தியாகிகள் வளாகமே வெள்ளைக்கோலம் பூண்டிருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, அந்த வளாகத்தில் அமர்ந்திருந்த ஏறத்தாழ அத்தனை பேரும் வெள்ளுடைகளை அணிந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இலையுதிர்காலத்தில் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்த அந்த இளஞ்சூரியன் உவந்தளித்த வெள்ளொளியில் இந்த வெள்ளாடைகளின் பிரதிபலிப்பும் நற்கருணை ஆண்டவரின் திருப்பிரசன்னமும் அந்த வளாகத்தையே விண்ணகத்தைப் போல அணிசெய்திருந்தது என்றே சொல்லலாம். அந்த வளாகத்தில் திருத்தந்தை திறந்த காரில் நம்பிக்கையாளர் மத்தியில் வந்து, இலத்தீனில் திருப்பலியைத் துவக்கினார். எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். ‘புடாபெஸ்ட் பாலங்களின் நகரமாகும். பல்வேறு நாடுகளுக்கு இடையே பாலங்களை அமைப்பது, எங்களின் அழைப்பாக உணர்கிறோம். இத்திருப்பலியில், கிறிஸ்தவர் அல்லாதோரும், உலகம் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்போரும் பங்குகொள்வது, காலத்தின் அறிகுறியாக உள்ளது. திருஅவை, நாடுகள் மத்தியில் கிறிஸ்துவின் தூதுவராகச் செயல்படுவதன் அடையாளமாகவும் இது உள்ளது’ என்று கர்தினால் எர்டோ அவர்கள், தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார். 52வது உலக நற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, ‘உங்கள் வாழ்வில் கடவுளை மையத்தில் கொண்டிருங்கள், உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்’ என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார். (விளக்கமான மறையுரை அடுத்தப் பக்கத்தில் உள்ளது)
திருப்பலியின் இறுதியில், கர்தினால் எர்டோ அவர்கள், மறைப்பணியாளரின் திருச்சிலுவை ஒன்றை, திருத்தந்தைக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். இச்சிலுவை, தங்கள் பகுதியின் புனிதர்கள் மற்றும், மறைசாட்சிகளின் நினைவாக இருக்கட்டும் எனவும் கர்தினால் எர்டோ அவர்கள், திருத்தந்தையிடம் கூறினார். மேலும், உலக நற்கருணை மாநாடுகளின் பாப்பிறை அமைப்பின் தலைவரான, பேராயர் பியெரோ மரினி அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரை வழங்கினார். திருப்பலியில் அந்நாட்டின் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் பங்குகொண்டனர்.
அதற்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையாற்றினார். பின்னர், திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புடாபெஸ்ட் தியாகிகள் வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியோடு 52வது உலக திருநற்கருணை மாநாடு நிறைவுக்கு வந்தது. அப்போது மதியம் ஒன்றரை மணி கடந்திருந்தது. தம் திருத்தூதுப் பயணத்திட்டத்தின்படி சுலோவாக்கியா நாட்டிற்குச் செல்வதற்காக புடாபெஸ்ட் பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றார். அப்போது ஹங்கேரி நாட்டு துணை பிரதமரும் ஏனைய அரசுப் பிரதிநிதிகளும் அரசு முறைப்படி நன்றி தெரிவித்து சுலோவாக்கியா நாட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ஹங்கேரி நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் ஏறக்குறைய ஏழு மணிநேரம் செலவிட்டிருந்தார். பிற்பகல் 2.45 மணிக்கு அந்நாட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டு, 50 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, சுலோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லா சென்றடைந்தார். (அடுத்த வாரம் தொடரும்)