ஹங்கேரி நாட்டின் அமைப்பு
ஹங்கேரி நாடு, வடக்கே சுலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், ருமேனியா, தெற்கே செர்பியா, குரோவேஷியா, தென்மேற்கே சுலோவேனியா, மேற்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. புடாபெஸ்ட் இதன் தலைநகராக உள்ளது. பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், உரோமையர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள், 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஹங்கேரி நாடாக, ஹங்கேரிய இளவரசர் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்தேவான், 1000மாம் ஆண்டில் ஹங்கேரியை கிறித்தவ நாடாக மாற்றி அதன் அரசரானார். 12 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி, மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ஆம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. அடுத்து, ஹங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541-1699) இருந்தது. அதன் பின்னர் 1867-1918 காலப்பகுதியில் ஆஸ்திரிய-ஹங்கேரிய ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஹங்கேரி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்தின்கீழ் வந்தது. இதனால் அங்கு 1947 ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது.1989-ல் ஆஸ்திரியாவுடன் உள்ள எல்லைப் பகுதியை அது திறந்துவிட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1989ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று ஹங்கேரி, மக்களாட்சி நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.