இரண்டாம் பகுதி - சுலோவாக்கியாவிற்கான திருத்தூதுப்பயணம்
முதல் நாள்: செப்டம்பர் 12
செப்டம்பர் 12 ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 2.45 மணிக்கு 52வது நற்கருணை மாநாட்டுத் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டு, 50 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, சுலோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவுக்கு வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அவ்விமான நிலையத்தில் சுலோவாக்கியா நாட்டின் அரசுத்தலைவர் சுசான்னா கப்பூட்டோவா வரவேற்க, இரு சிறார், திருத்தந்தையிடம் மலர்கள் அளித்து ஆசீர்பெற்றனர். விமானத்தளத்தில், இராணுவ மரியாதையும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. அதற்குப்பின், திருத்தந்தை அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீட தூதரகத்திற்கு காரில் சென்றார். உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில், அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார். அச்சபையினரிடம், மதங்கள் ஒன்றிப்பு, உடன்பிறந்த உணர்வு போன்றவற்றில் வளரவும், தியானத்தையும், செயல்களையும் ஒன்றிணைத்து ஆற்றவும் வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். சுலோவாக்கியா நாட்டில் 11 கிறிஸ்தவ சபைகள் உள்ளன. அச்சபைகளின் அவையில், கத்தோலிக்க ஆயர் பேரவை பார்வையாளராக உள்ளது.
இரண்டாவது நிகழ்வாக, ‘குடும்பச் சந்திப்பு’ என்று விளக்கம் கொடுக்கப்பட்ட, இயேசு சபையினரோடு திருத்தந்தை நடத்திய சந்திப்பில், திருத்தந்தை அத்துறவியர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தும், தானே சில கேள்விகளையும் கேட்டார். இச்சந்திப்பு பற்றிக் கூறிய இயேசு சபையினர், அப்பொழுதுதான் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளைச் சந்தித்து களைத்திருந்தாலும், தங்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை மிகவும் உற்சாகமாக காணப்பட்டார் என்று கூறினர். திருத்தந்தை கூறியவற்றுக்கு நாங்கள் செவிமடுத்தோம் எனவும், நாங்கள் விரும்புவது, மற்றும், ஆற்றும் செயல்கள் பற்றி அவரிடம் கூறமுடிந்தது எனவும், எங்களது பணியில் புதிய சவால்களை எதிர்கொள்கிறோம், திருத்தந்தை எங்களை ஊக்கப்படுத்தினார் எனவும், அவர்கள் கூறினர். சுலோவாக்கியாவில் எண்பது இயேசு சபைத் துறவியர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 53 பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இச்சந்திப்புடன் திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாள்: செப்டம்பர் 13
செப்டம்பர் 13, திங்கள்கிழமை, திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள். அன்று காலையில், பிராத்திஸ்லாவா திருப்பீடத் தூதரகத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 9 மணியளவில், சுலோவாக்கியா குடியரசின் அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு திருத்தந்தைக்கு, இராணுவ அணிவகுப்பு மரியாதையோடு, சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இரு சிறார், ரொட்டியும், உப்பும் திருத்தந்தைக்குக் கொடுத்தனர். அரசுத்தலைவர் சுசான்னா கப்பூட்டோவா அவர்கள், அம்மாளிகையின் தங்க அறையில், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசினார். மேலும், "பிராத்திஸ்லாவாவில் திருப்பயணியாக உள்ள நான் சுலோவாக்கியா மக்களை, அன்போடு தழுவிக்கொள்கிறேன். பழங்கால வேர்களையும், ஓர் இளைய முகத்தையும் கொண்டிருக்கும் இந்நாடு, ஐரோப்பாவின் இதயத்தில், உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதியின் செய்தியாக விளங்கவேண்டும் என்பதற்காகச் செபிக்கின்றேன்" என்று அம்மாளிகையின் தங்க புத்தகத்தில், திருத்தந்தை எழுதினார். பின்னர், அந்நாட்டின் அரசு, பொதுமக்கள், தூதரகங்கள் போன்ற அனைத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அம்மாளிகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருத்தந்தை அமர, அவரை வரவேற்று அரசுத்தலைவர் உரையாற்றினார். அரசுத்தலைவர் உரையாற்றிய பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். இச்சந்திப்பை நிறைவுசெய்து, அம்மாளிகைக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித மார்ட்டீன் பேராலயத்திற்குச் சென்றார்.
14 ஆம் நூற்றாண்டில் கோதிக் கலையில் கட்டத் தொடங்கப்பட்ட இப்பேராலயத்தின் நேர்ந்தளிப்பு, 1452 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பேராலயத்திற்கு முன்பகுதியில் கூடியிருந்த மக்கள், திருத்தந்தையைக் கண்ட ஆனந்தத்தில் கைதட்டி ஆர்ப்பரித்தனர். பிராத்திஸ்லாவா பேராயர் ஸ்தனிஸ்லாவ் சுவேலான்ஸ்கி அவர்களும், பேராலயப் பங்குத்தந்தையும், பேராலய வாயிலில் நின்று, பேராலயத்திற்குள் திருத்தந்தையை அழைத்துச் சென்றனர். தீர்த்தம் தெளிப்பதற்காக, சிலுவை மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரை திருத்தந்தையிடம் அப்பங்குத்தந்தை கொடுத்தார். குருத்துவ மாணவர் ஒருவரும், வேதியர் ஒருவரும் அளித்த மலர்க்கொத்தை, திருநற்கருணைக்குமுன் வைத்து செபித்தார் திருத்தந்தை. அங்கு அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குரு மாணவர்கள், வேதியர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பேராயர் ஸ்தனிஸ்லாவ் அவர்கள், திருத்தந்தைக்கு நல்வரவு சொல்லி, அவரை வரவேற்றுப் பேசினார். பின்னர், திருத்தந்தையும் தன் சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வின் முடிவில் ஆயர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கைகுலுக்கி திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்த்தினார். இச்சந்திப்பை முடித்து திருப்பீடத் தூதரகம் சென்று, மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்.
பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் மாலை 3.45 மணிக்கு, திருப்பீடத் தூதரகத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பெத்லகேம் என்ற மையத்திற்குச் சென்றார். இந்த மையத்தில், புனித அன்னை தெரேசா சபையினர், கடந்த இருபது ஆண்டுகளாக, நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவி வருகின்றனர். இம்மையத்தில் சிறிதுநேரம் செலவிட்ட திருத்தந்தை, அன்னை மரியா படம் ஒன்றைப் பரிசாக அளித்து, எல்லாரையும் ஆசீர்வதித்தார். அதன்பின்னர், பெத்லகேம் மையத்திலிருந்து, திருத்தந்தை ரெபின் நமஸ்தி என்ற வளாகத்திற்குச் சென்றார். அந்நகரில் வாழும் யூதர்களில் 180 பேரை சந்தித்து ரெபின் நமஸ்தி வளாகத்தில் சந்தித்து உரையாற்றினார். அதன் பின்னர், திருப்பீட தூதரகம் சென்றார்.
அங்கு, சுலோவாக்கியா நாட்டுப் பாராளுமன்றத் தலைவர் போரிஸ் கோலார் அவர்களையும், பிரதமர் எடுகார்டு ஹேகர் அவர்களையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார். இத்துடன் திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் நாள்: செப்டம்பர் 14
செப்டம்பர் 14, செவ்வாய்கிழமை, காலை 8.10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிராத்திஸ்லாவாவிலிருந்து கோசிஸ் நகருக்கு, 50 நிமிட விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். சுலோவாக்கியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோசிஸ், ஹங்கேரி நாட்டுக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில், மெட்டாலிஃபெரி மலைத்தொடருக்கு அருகில், ஹோன்ராட் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது, கிழக்கு சுலோவாக்கியாவின் பொருளாதார, மற்றும் கலாச்சார மையமுமாகும். இந்நகரின் விமானத்தளத்தில், அந்நகரின் பேராயர் பெர்னார்டு போபர், நகர மேயர், மற்றும் உள்ளூர் அதிகாரிகள் திருத்தந்தையை வரவேற்றனர். அவர்களோடு சிறிதுநேரம் உரையாடிய பின்னர், அந்நகரிலிருந்து, 47 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பிரஸோவ் நகருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் காரில் பயணம் மேற்கொண்டார். சுலோவாக்கியாவின் மூன்றாவது பெரிய பிரஸோவ் நகரத்தின் மெஸ்ட்ஸ்கா விளையாட்டு மைதானத்தில் புனித கிறிஸ்சோஸ்தம் யோவான் அவர்களின் பைசான்டைன் வழிபாட்டுமுறை திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் துவக்கி வைத்தார். பைசான்டைன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கரின் பேராயராகிய ஜான் பேப்ஜெக் அவர்கள் தலைமையில், எண்ணற்ற கிரேக்க மற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்கள் இணைந்து இவ்வழிபாட்டை நிறைவேற்றினர்.
இலட்சக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த விழா வழிபாட்டில், திருத்தந்தையும் திருச்சிலுவையை மையப்படுத்தி மறையுரையாற்றினார். சிலுவை ஒரு நூல் என்று, ஒரு சில புனிதர்கள் கூறியுள்ளனர். புதிய நூலை வாங்கி, அதன் வெளிப்புறத்தை மட்டும் பார்த்துவிட்டு, அதை அலமாரியில் வைத்துவிடக்கூடாது. அதைத் திறந்து படிக்கவேண்டும். அதேவண்ணம், சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ, மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்த சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணரவேண்டும். சிலுவையை, வணக்கத்திற்குரிய ஒரு பொருளாக மட்டும் மாற்றிவிடுவதோ, அல்லது நம் மதம், மற்றும் சமுதாய நிலையின் அரசியல் அடையாளமாக மாற்றிவிடுவதோ கூடாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார். ஏறத்தாழ 2 மணி நேரம் நடைபெற்ற இவ்வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை, திருப்பலி மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, பெரிய அன்னை மரியா படத்தின் முன்பாக நின்று செபித்தார். அனைவரையும் ஆசீர்வதித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்து காரில் கோசிஸ் நகருக்குப் புறப்பட்டார். தன்னாட்சி அரசைக்கொண்ட அந்நகரின் புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவ பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று மதிய உணவருந்தினார். அக்கல்லூரிக்கு புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் அவர் பரிசாக வழங்கினார்.
மாலை 3.45 மணிக்கு, கோசிஸ் நகரின் 22 மாவட்டங்களில் ஒன்றாகிய லூனிக்ஸ் பகுதிக்கு திருத்தந்தை காரில் சென்றார். இப்பகுதியில், சுலோவாக்கியா நாட்டின் ரோமா நாடோடி இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர். தற்போது லூனிக்ஸ் ஏறத்தாழ 4,300 ரோமா இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் போதுமான எரிவாயு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி ஏழ்மை நிலையில் உள்ளனர். ரோமா இனச் சிறார் மற்றும், இளையோர் மத்தியில், சலேசிய சபையினர் பணியாற்றுகின்றனர். அம்மையத்தில், அம்மைய இயக்குனர், இரு ரோமா இனச் சிறார் திருத்தந்தையை வரவேற்றனர். இச்சந்திப்பில் முதலில், அம்மைய இயக்குனர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் ரோமா இனத்தவர் ஒருவரும், தொழில்துறையில் இணைக்கப்பட்ட ரோமா இன ஒரு குடும்பமும் தங்கள் சாட்சியங்களை வழங்கினர். அதற்குப்பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். அதிகாரம், பணம், அக்கறையற்ற நிலை என்பவைகளில் நாம், கடவுளின் திருப்பெயரை தவறாகப் பயன்படுத்துகிறோம். கடவுளின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு நாம், ஒருவருக்கொருவர் உதவுவோம் என்று திருத்தந்தை கூறினார். இச்சந்திப்பிற்குப் பின்னர், கோசிஸ் நகரில் லொக்கோமோட்டிவ்வா அரங்கில் இளையோரைச் சந்திக்கச் சென்றார்.
இச்சந்திப்பில் முதலில் மூன்று இளையோர் திருத்தந்தையிடம் சாட்சியம் பகர்ந்தனர். பீட்டர், ஜூஸ்கா ஆகிய இருவரும், ஒருவர் ஒருவரை அன்புகூர்தல் மற்றும், சிலுவையை அன்புகூர்தல் பற்றியும், பேத்ரா பில்லோவா கடவுளின் இரக்கத்தைச் சந்திக்கும்போது எதிர்கொள்ளும் தடைகளை சமாளிக்கும் முறை பற்றியும், திருத்தந்தையிடம் கேள்விகளை முன்வைத்தனர். இவர்களின் கேள்விகளுக்கு, திருத்தந்தையும் ஆர்வத்தோடு பதிலளித்தார். அஞ்சாமல் கனவு காணுங்கள் என்று இளையோரை ஊக்கப்படுத்தி, கோசிஸ் நகரிலிருந்து, 329 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பிராத்திஸ்லாவா நகருக்குப் புறப்பட்டார்.
அங்கு திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்திவிட்டு, உறங்கினார். திருத்தந்தை. இத்துடன், இத்திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாள் பயண நிகழ்வுகள் முடிவுற்றன.
நான்காம் நாள்: செப்டம்பர் 15
செப்டம்பர் 15, புதன்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இந்நாளில் திருத்தந்தை, சாஸ்டின் நகரின் ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். காலை 7.30 மணிக்கு, பிராத்திஸ்லாவா நகரின் திருப்பீடத் தூதரகத்தில் இந்நாள்களில் தனக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி கூறியத் திருத்தந்தை, அத்திருப்பீடத் தூதரகத்திற்கு, திருத்தந்தையின் தலைமைப்பணியின், மொசைக் கலைவண்ணத்தால் அழகுற அமைக்கப்பட்ட, இலச்சினை ஒன்றை பரிசாக வழங்கினார்.
பின்னர், திருத்தந்தை, அங்கிருந்து 71 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சாஸ்டின் தேசிய திருத்தலத்திற்குக் காரில் சென்றார். அத்திருத்தலத்தில், சுலோவாக்கியா நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் செபம் ஒன்றை ஆயர்களோடு சேர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் செபித்தார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறும் அன்னை மரியா திருநாள் திருப்பலியை நிறைவேற்ற, அத்திருத்தல வளாகத்திற்குச் சென்றார். அந்த வளாகத்தில் அமர்ந்திருந்த விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வந்த திருத்தந்தை, திருப்பலியை இலத்தீனில் ஆரம்பித்தார். அத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஆற்றினார். அன்னை மரியாவை, தங்கள் விசுவாசத்திற்கு முன்மாதிரிகையாய் எடுத்துக்கொள்ளுமாறு, சுலோவாக்கியா மக்களைக் கேட்டுக்கொண்டார். அத்திருப்பலியில், விசுவாசிகள் மன்றாட்டு, சுலோவாக்கியம், ஆங்கிலம், ஜெர்மானியம், ஹங்கேரியம், ரோமானி ஆகிய மொழிகளில் செபிக்கப்பட்டது. இத்திருப்பலியின் இறுதியில் சுலோவாக்கிய அரசு, தலத்திருஅவை மற்றும், இப்பயண ஏற்பாடுகளைக் கவனித்த அனைவருக்கும் தன் நன்றியைத் திருத்தந்தை தெரிவித்தார். சுலோவாக்கியா ஆயர் பேரவைத் தலைவரும், பிராத்திஸ்லாவா உயர்மறைமாவட்ட பேராயருமான, பேராயர் ஸ்தனிஸ்லாஸ் அவர்களும், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். அத்தேசிய திருத்தலத்திற்கு, தங்கத்தாலான ரோசா மலர்ச்செடி ஒன்றைப் பரிசாக அளித்தார். இத்திருப்பலிக்குப்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்து 86 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பிராத்திஸ்லாவா பன்னாட்டு விமான நிலையத்திற்குக் காரில் சென்றார்.
பிராத்திஸ்லாவா பன்னாட்டு விமான நிலையத்தில், சுலோவாக்கியா அரசுத்தலைவர் திருத்தந்தையை வரவேற்று, நன்றியோடு வழியனுப்பி வைத்தார். அங்கு திருத்தந்தைக்கு, இராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது. உள்ளூர் நேரம் பகல் 1.45 மணிக்கு, சுலோவாக்கியா மக்களிடமிருந்து விடைபெற்ற திருத்தந்தை உரோம் நகருக்குப் புறப்பட்டார். ஒரு மணி 45 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலுக்குச் சென்று, அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்து, மலர்களை அர்ப்பணித்தார். இத்துடன் ஹங்கேரி, மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்ட நான்கு நாள், 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.
இந்த 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 54 நாடுகளில், தன் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 84 வயதிலும் இவர்தம் சுறுசுறுப்பும் ஓய்வில்லாத உழைப்பும் தொலைநோக்கும் எல்லா ஆயர்களுக்குமே முன்மாதிரியாகவும் சவாலாகவும் உள்ளது. இக்கட்டுரை திருத்தந்தையோடு உடன் பயணித்ததைப் போன்ற அனுபவத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறோம்.
(கட்டுரை ஆக்கம் - குடந்தை ஞானி)