(தொநூ 2:18-24, எபி 2:9-11, மாற் 10:2-16)
கடவுளே உருவாக்கிய திருவருள்சாதனம்
திருமணம் பற்றியும் அவர்களின் உள்ளார்ந்த உறவு மற்றும் அன்பு பகிர்வு பற்றியும், எல்லா இலக்கியங்களும் காலம் காலமாக புகழிசைகின்றன. கடவுளின் படைப்புத் தொழிலைத் தொடர்ந்து செயலாற்றும் தம்பதியர்கள் பேறுபெற்றவர்களே (தொநூ 1:26). கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை, என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப கடவுள் தாமே விரும்பி உருவாக்கிய முதல் திருவருள்சாதனம் திருமணமாகும். "மனிதன் தனிமையாக இருப்பது நன்றல்ல" (தொநூ 2:18) என்பதை நன்குணர்ந்த கடவுள், அவனுக்குச் சிறப்பான துணையை ஏற்படுத்தி, இருவரையும் ஒரே மாமிசமாக இருக்கப் பணிக்கின்றார் (தொநூ 2:24). இஸ்ரயேல் ஒரு இனமாக உருவாகும்முன், அரசாட்சி உருவாக்கப்படுவதற்கு முன், திருஅவை பிறக்கும்முன், கடவுள் திருமணத்தை உருவாக்கி, அதைக் கடவுள் அர்ச்சித்துவிட்டார். ஆதாம், ஏவாள் செய்த குற்றங்கள் கடவுளின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பறித்தாலும், அவர்களின் திருமண பந்தம் மறுக்கப்படவில்லை. விவிலியம் திருமணத்தில் துவங்கி திருமணத்தில் முடிவடைகின்றது (திவெ 21:9). திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தமையால் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் திருமணத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமாக அர்ச்சிக்கப்படுகின்றனர் என்றுரைக்கின்றது.
திருமண அன்பு
ஒருவர், இலட்சக்கணக்கானவர்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கானவர்களோடு படித்து, நூற்றுக்கணக்கானவர்களோடு பழகி, இறுதியில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்து அவரிடம் தம்மை ஒப்படைத்துவிடுகின்றார். ஒருவர் தம்மையே முழுமையாக மறந்து, மற்றவரில் தம்மை இழந்து, தம்மில் குறைவாக இருப்பதை மற்றவரில் நிறைவாக்கி, நிபந்தனையின்றி தம்மைக் கொடுத்து, அந்த இருவருக்கிடையில் நடைபெறுகின்ற அன்புப் பரிமாற்றங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. திருமண அன்பு புனிதமிக்கது, உயிர்த் துடிப்புள்ளது, உள்ளார்ந்தது. எப்படிப்பட்ட மனிதர்களையும் தம்வயப்படுத்தி, புதிய மனிதர்களாக உருவாக்குகின்ற ஆற்றல் இந்த திருமண பந்தத்திற்கு உண்டு. இந்த அன்பின் அர்த்தத்தை நன்குணர்ந்தமையால், இனிமைமிகு பாடல், கடவுளின் அன்பையும், தம் மக்களின் அன்பையும், காதலி-காதலன் அன்போடு ஒப்பிட்டுப் பார்க்கின்றது. உறவு பரிமாற்றங்களில் கணவன் மனைவி இருவருமே சமமாகப் பங்காற்றுகின்றனர். மனைவி பொறுப்புகளை மேற்கொள்ளக் கூடியவளாகவும், திருமண வாழ்வின் வெற்றிக்கும், கணவனின் நற்பெயருக்கும் பங்களித்து உதவக் கூடியவளாகவும் விளங்குகின்றாள் (நீமொ 31:10-31). இந்த அன்பில் ஆணோ அல்லது பெண்ணோ - தான் பெரியவன்(ள்) - என்று பெருமை பாராட்டிக்கொள்ள வாய்ப்பில்லை. திருமண அன்பின் அவசியத்தை இறைவாக்கினர்களும் உணர்ந்திருக்கின்றனர். எசேக்கியேலின் மனைவி மிகவும் அன்பானவள் என்பது, அவள் கண்களுக்கு இனிமை தருகின்றவள் என்ற உருவக மொழியில் கூறப்படுகின்றது (எசே 24:15தொ). எல்லாத் துன்ப சூழ்நிலையிலும், யோபு தம் மனைவியை விட்டுவிலகாமல் வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் எசாயா, தமது துக்கங்களையும் வெற்றிகளையும் தம் மனைவியோடு பகிர்ந்துகொள்கின்றார். எரேமியா மணமுடிக்க தடைவிதிக்கப்படுகின்றது (எரே 16). எனவே, வாழ்வில் எல்லாராலும் கைவிடப்பட்டு தனித்திருக்கும்போது, மனைவி என்ற துணைப்பலம் இல்லாமை எரேமியாவுக்குப் பெரும் குறையாகவே தென்படுகின்றது.
ஆண் - பெண் சமத்துவம்
அனைத்தையும் படைத்த பின்னர் கடவுள் பெண்ணை ஆணிலிருந்து படைக்கின்றார் என்று முதல் வாசகம் கூறுகின்றது. எல்லா உயிரினங்களுக்கும் ஆண் பெயரிடுகின்றான். ஆனால், பெண்ணுக்கு அவன் பெயரிடவில்லை. எனவே பெண் அவனுக்கு அடிமையல்ல; பெண் ஒரு நல்ல துணையாளி. அவளின்றி ஆண் முழுமையானவன் அல்ல; திருப்பாடல்களில் கடவுள் துணையாளராகவே அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆணுக்கு அருகில் துணையிருப்பவள் பெண். ஆணின்றி பெண்ணும் நிறைவற்றவள். இயேசு பெண்களை எல்லா மதிப்பிற்கும் உரிய ஒரு மனித நபராகக் காண்கின்றார். ஆண்கள் விருப்பப்படி பயன்படுத்தும் ஒரு பொருள் அல்ல அவள். இரு இதயங்களின் இணைவை சில சட்டங்கள் பிரித்து வைக்க முடியாது. பெண்ணை இரண்டாம் தரக் குடிமகளாகக் கருதும் சில கலாச்சாரக் கூறுகள் கடவுளின் சிந்தனை அல்ல.
ஒருவனுக்கு ஒருத்தி
உளவியலாளர்களின் கூற்றுப்படி, ஒரு மனிதனால் மற்றொரு மனிதரை மட்டுமே முழுமையாக அன்பு செய்ய முடியும். பத்துப்பேரை சமமாக அன்புசெய்வது என்பது கதைகளில் மட்டுமே சாத்தியம். நமது சொல்வழக்கில் பிரச்சனை நிறைந்த மனிதர்களைப் பார்த்து - இரண்டு மனைவி வைத்திருப்பவன் கதைபோல் - என்று சொல்கின்றோம். பலரை சமமாக அன்பு செய்ய முயல்வது ஒருவரின் மனதைப் போராட்டக் களமாக மாற்றிவிடும். ஒருவர் ஒரே சமயத்தில் இருவரை அன்பு செய்ய முயல்வது அநீதியாகும். கணவன் அல்லது மனைவியின் முழுமையான அன்பும் அவரை மணமுடித்தவருக்கு மட்டுமே உண்டு. பலதார திருமண முறை வழக்கில் இருந்த காலத்தில் ஒருவருக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை யூத இனத்தில் நிலைநாட்ட முனைந்தவர் இயேசு என்ற உண்மைக்கு இன்றைய நற்செய்தி சான்றாகும். தம்பதியர்களுக்குள் நிகழும் சிறு தகுதியற்ற செயல்கூட, அவர்களுக்கிடையிலான பிரமாணிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதயம் என்பது ஒருவர் வாழும் ஆலயமாகும். எனவே தான் உள்ளங்கள் ஒன்றிணையும் மணவாழ்வு, பல இடங்களில் பிரமாணிக்கத்தின் அடையாளமாகக் காட்டப்படுகின்றது. கோமேர் தம் மீது முழுநம்பிக்கை கொண்ட கணவன் ஓசேயாவுக்குப் பிரமாணிக்கமின்றி செயல்படுவது, இஸ்ரயேல், தம்மை மீட்ட யாவே கடவுளை மறந்து, நாளுக்கொரு கடவுள், ஆளுக்கொரு தெய்வம் என்று தம் கால்போன போக்கில் செல்வதை நினைவூட்டுகின்றது. எருசலேமின் பிரமாணிக்கமில்லாத குணம், தாம் அன்பைக் கொட்டி வளர்த்த குழந்தை, திருமண வயதை எட்டியவுடன் வளர்த்தவரை மறந்து, மற்றவர்களைத் தேடிச்செல்லும் பரத்தமை குணத்தோடு ஒப்பிடப்படுகின்றது (எசே 16). கிறிஸ்து என்ற மணவாளனுக்கு கொரிந்திய மக்களை மண ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவர்முன் கொரிந்து திருஅவையைக் கற்புள்ள கன்னியாக நிறுத்தவும் பவுல் விரும்புகின்றார் (2 கொரி 11:2). திருஅவை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதும், கிறிஸ்து திருஅவைக்கு மீட்பளிக்கும் அன்புசெய்து, அதற்காகத் தம்மையே கையளித்து அதை விடுவித்ததும், முறையே கணவன், மனைவியர் பின்பற்ற வேண்டிய உயிருள்ள விதியாகின்றன (எபே 5:21-33).
விபச்சாரம் என்னும் சாபக்கேடு
உரிய காரணமின்றி மனைவியை விலக்கிவிட்டு மற்றவர்களை மணமுடிப்பதை விபச்சாரம் என்று இயேசு பெயரிடுகின்றார். விபச்சாரம் செய்வது கணவனுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது (யோபு 31:9, சீஞா 9:5-8). பரத்தமைக்கு எதிராக இறைவாக்கினர்களும் கண்டனக் குரல் எழுப்புகின்றனர் (எசே 18:6). அரசன் தாவீதும் அதற்கான தண்டனையை அனுபவித்தார் (2 சாமு 12). தவறான நடத்தைக்கு எதிராக இளைஞர்களும் எச்சரிக்கப்படுகின்றனர் (நீமொ 5:1-6, 7:6-27, சீஞா 26:12-15). பத்துக்கட்டளைகள் திருமண உறவை புனிதமானதாக கருதுகின்றன (விப 20:14, நீமொ 2:17). திருமணத்தின் முறிவுபடாத் தன்மையையும் ஒருமைக் குணத்தையும் (மாற் 10:1-9) இயேசு பல இடங்களில் எடுத்துரைக்கின்றார். கெட்ட நடத்தைக்காக கணவன் மனைவியைப் பிரிந்து வாழலாம் (மத் 19:9) என்ற பழைய ஏற்பாட்டுச் சட்டம் விதிவிலக்கே என்றும், அது உரிமைச் சட்டமல்ல என்றும் இயேசு இன்றைய நற்செய்தியில் வாதிடுகின்றார். மணமுறிவுக்கு எதிராக கடவுள் தரும் கடுமையான நிபந்தனையை நினைவூட்டுகின்றார் (மத் 19:9தொ). திருமண அன்பின் புனிதத்தையும் பிளவுபடாதன்மையையும் உணர்த்தவே, இதுவரை வழக்கில் இருந்த மணமுறிவையும் பலதார மண சலுகையையும் இயேசு முறியடிக்கின்றார் (மாற் 10:6தொ). தவறான நோக்கோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதே தவறு என்று போதிக்கின்றார் (மத் 5:28). மலாக்கி திருமண உடன்படிக்கையை இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் உள்ள உடன்படிக்கையோடு ஒப்பிட்டு மணமுறிவை வெறுக்கின்றார் (மலா 2:14). இளமையான மனைவியிடம் அன்பு கொண்டிருத்தல் அவசியமானதாகும் (நீமொ 5:15-19). சீராக்கின் ஞானம் கணவன் மனைவியின் நிலைபிறழாமை பற்றி பேசுகின்றது (சீஞா 36:21தொ).
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலதார மணம் வழக்கில் இருந்தாலும், தம் மனைவியோடு கடவுளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்தவர்களே விவிலியத்தில் புகழ் பெற்றனர். உள்ளார்ந்த அன்பில் நிலைத்திருந்த தம்பதியர்களுக்குப் பிறந்த குழந்தைகளே பெரும் பேறுபெற்றனர். மேலும், விவிலியத்தில் பேசப்படும் தம்பதியர் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பம் என்பது கடவுளின் திருமுன் நம்பிக்கை, செபம் என்ற அடித்தளத்தில் நிறுவப்படுகின்றது (தோபி 7:11, 8:4-9). திருச்சட்டத்தைப் பற்றுறுதியுடன் கடைபிடித்து வரும் குடும்பம் கடவுளிடமிருந்து பாதுகாப்புப் பெறுகின்றது (தோபி 1:6-15).
நல்ல குடும்பம் உயர் மதிப்பீடுகளின் நாற்றங்கால்
குடும்பம் என்பது கோவில். அதில் தாயும் தந்தையும் தெய்வங்களாகவும் தீபங்களாகவும் இருக்கின்றனர். குடும்பம் என்பது பல்கலைக்கழகம். அதில் தாயும் தந்தையும் பேராசிரியர்கள். விவிலியத்தில் தம்பதியர்களின் சிறந்த வாழ்வு, அன்பு, பகிர்வு, நட்புறவு போன்றவை நல்ல மதிப்பீடுகளின் நாற்றங்காலாக அமைகின்றன. கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த தம்பதியர்களின் குழந்தைகளே கடவுளின் நிறையாசீரைப் பெற்றனர். சக்கரியாவும் எலிசபெத்தும் கடவுளின் முன்னிலையில் நேர்மையாளர்களாக, அனைத்துக் கட்டளைகளையும் கடைபிடித்து வாழ்ந்தமையால், பெண்ணிடம் பிறந்தவர்களுள் அவரைவிட சிறந்தோர் யாருமில்லை என்று இயேசுவே பாராட்டிய மாமனிதன் யோவானின் பெற்றோராகின்றனர். ஒரு குழந்தையின் வளர்ச்சி ஐந்து வயதிற்குள் முடிவடைந்து விடுகின்றது என்பது உளவியலாரின் கூற்று. இயேசு பிற்காலத்தில் வாழ்ந்து காட்டிய, போதித்த மதிப்பீடுகள் எல்லாம், மரியா மற்றும் யோசேப்புவிடமிருந்து கற்றுக்கொண்டவை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தம்பதியர்களின் வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியின் பூந்தோட்டமாக இருப்பதில்லை. அவர்கள் வாழ்வில் போராட்டங்களும், சோதனைகளும் தொல்லைகளும் நிறைந்துள்ளன (நீமொ 18:22. 19:13. திபா 9:9, சீஞா 25:17-26). ஆனால் எல்லா சூழ்நிலையிலும் கடவுள் அவர்களுடன் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றார். தாய் தந்தையின் ஒற்றுமையான வாழ்வே பிள்ளைகளுக்கு உயிருள்ள நூல் நிலையமாக அமைந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்.
அன்பு நடமாடும் கோவில் குடும்பம்
குடும்பம் ஒரு குட்டி திருஅவை. வருங்கால மன்னர்கள் வாழும் அரச மாளிகை. இல்லறம் தியாகத்தின் விளைநிலம், அறிவுப்பட்டறை, அன்பின் ஊருணி. இல்லறம் அல்லாதது நல்லறம் இல்லை. குடும்பம் செழித்தால் குவலயம் செழிக்கும். குடும்பம் அன்பினால் கட்டப்படவில்லையென்றால் (திருமணத்தன்று பெற்ற) ரொக்கம் தீர்ந்தவுடன், புதுக் கார் பழையதானவுடன், புது வீடு கொஞ்சம் பழுதடைந்தவுடன், எல்லாம் முடிவடைந்துவிடும். கணவன் மனைவிக்கு அன்பு இல்லாவிட்டால் அது ஒரு அலுவலகம் மட்டுமே. குடும்பத்தில் அன்பு இல்லாவிட்டால் அது சத்திரம். தாய் தந்தை குழந்தைகளுக்குள் தம் அன்பு முகம் காட்டாவிட்டால் அது ஒரு பராமரிப்பு இல்லம். குழந்தைகளுக்குள் அன்பு இல்லாவிட்டால் அது விடுதி. வீட்டில் அன்பு நிறைந்த வார்த்தைகள் பகிரப்படாவிட்டால் அது ஒரு மிருகக்காட்சிச் சாலை.
ஒருவர் அன்பில் மற்றவர் கரையும்போது - நீ, நான் - போன்ற வேறுபாடுகள் இல்லாமல் போய்விடும். ஒருவரை உண்மையாகவே அன்புசெய்யத் துவங்கினால் 60 அல்லது 70 ஆண்டுகள் போதாது. கால்போன போக்கில் சென்று கண்ணில் பட்டதெல்லாம் தமதாக்கத் துடிப்பது உண்மையான மனித வாழ்வு அல்ல. சாதனையின் உச்சத்தைத் தொட்டவர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக வாழ்வை அமைத்துக் கொண்டவர்களே. சுய கட்டுப்பாடு இல்லாத எந்த சமுதாயமும் தம்மைத்தாமே தோற்கடித்துக் கொள்ளும். உலகின் கண்முன் இந்தியாவை உயர்த்திக் காட்டுவது பிள்ளைகளுக்காகவே வாழும் தாய்-தந்தை வழிநடத்தும் ‘குடும்பம்’ என்ற பண்பாடாகும். மாலை வேளைகளில் நடக்கும் பூசல்களை மறுநாளே மறந்து அன்புடன் வாழ்வு நடத்தும் தாய் தந்தைகளைப் பார்த்திருக்கின்றோம். தாம் சேற்றில் இறங்கி வேலை செய்தாலும் கல்லூரிக்குச் செல்லும் தம் மகன் கையில் மடிகணினியுடன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் தந்தைகளைப் பார்த்திருக்கின்றோம். தாம் எப்படி உடுத்தியிருந்தாலும் படிக்கும் தம் மகள் அழகு தேவதை போல் ஜொலிக்க வேண்டும் என்று விரும்பும் தாய்களைப் பார்த்திருக்கின்றோம். தமது கையில் கிடைக்கும் காசுகளை ஒன்றுசேர்த்து தமது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து மகிழும் பாட்டி தாத்தாக்களைப் பார்த்திருக்கின்றோம். உண்மையான மகிழ்ச்சி, நிறைவு என்பது ஒருவர்-ஒருத்தி என்று வாழும் குடும்ப வாழ்வில் மட்டுமே சாத்தியம் என்பதை நினைவில் கொள்வோம்.