"மதமும் அறிவியலும் COP 26ஐ நோக்கி" என்ற தலைப்பில், அக்டோபர் 4ம் தேதி, திங்களன்று, திருப்பீடமும், இத்தாலியும்-பிரித்தானியாவும் சேர்ந்து கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.
திருப்பீடத்திற்கு தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதரகங்களின் முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் பல்வேறு மதங்களின் தலைவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.
முதலில் திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பின்னர் காலநிலை மாற்றம் குறித்து வருகிற நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் COP 26 உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களுக்கு, இத்தலைவர்கள் முன்வைக்கும் விண்ணப்பம் ஒன்றின் சுருக்கம் வாசிக்கப்பட்டு, அதில் அவர்கள் கையெழுத்திட்டார்கள்.
பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் உரை இடம்பெறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், COP 26 மாநாட்டின் தலைவர் அலோக் சர்மா அவர்களுக்கும், இத்தாலிய வெளியுறவு மற்றும், பன்னாட்டு ஒத்துழைப்புத் துறை அமைச்சர் லூயி டி மய்யோ அவர்களுக்கும் விண்ணப்பம் ஒன்றை முன்வைப்பார்.
அதற்குப்பின்னர், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள், மற்றும், சிலரின் உரைகள் இடம்பெற்றன.
இறுதியில், படைப்பைப் பாதுகாப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை வெளிப்படுத்துவதன் சிறிய அடையாளமாக, வத்திக்கான் தோட்டத்தில் ஒலிவ மரக்கன்றுகளை, பல்வேறு மதங்களின் தலைவர்களும் அறிவியலாளர்களும் நட்டார்கள்.