பல்சமயத் தலைவர்களாகிய நமக்குள்ளும், அறிவியல் அறிஞர்களுடனும் நாம் ஆழமான உரையாடலை மேற்கொள்ள வந்திருப்பது, நம்மிடையே உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய, பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் கூறினார்.
"நம்பிக்கையும் அறிவியலும்: COP 26ஐ நோக்கி" என்ற தலைப்பில், அக்டோபர் 4 திங்களன்று, வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்களையும், அறிவியலாளர்களையும், வத்திக்கானின் ஆசீர் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், மத நம்பிக்கையும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்துள்ளன என்பதைக் குறித்து பேசினார்.
நமக்கும், படைப்புகளுக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பு
மனிதர்களாகிய நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்புகளுக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பைக் குறித்து, மத நம்பிக்கையும், அறிவியலும் நமக்கு உணர்த்திவருகிறது என்பதை தன் முதல் கருத்தாக வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் உட்பட எந்த ஒரு படைப்பும், தன்னில் தானே நிறைவு காணமுடியாது என்பதை நாம் உணர்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
இவ்வாறு, மனிதர்களாகிய நாம் அனைவரும், நமக்குள்ளும், நம்மைச் சுற்றியுள்ள படைப்புகள் அனைத்தோடும், தொடர்பு கொண்டவர்கள் எனில், நமது செயல்பாடுகள், எவ்வாறு படைப்பின் மீது தீங்கு விளைவிக்கின்றன என்பதை, அண்மைய ஆண்டுகளில் மிகத் தெளிவாக உணர்ந்து வருகிறோம் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்
பல நாடுகள், கலாச்சாரங்கள் மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நாம் இங்கு கூடியிருப்பது, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது என்று தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாடு, கலாச்சாரம், மதம் என்று நாம் வகுத்துக்கொண்ட எந்த எல்லையும், நாம் இணைந்து நிற்பதைத் தடுக்க இயலாது என்பதை, வலியுறுத்திக் கூறினார்.
நம்மை ஒருங்கிணைக்கும் அன்பு என்ற உந்துசக்தியை, ஒவ்வொரு நாளும் நாம் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை, அன்பைக் குறித்து நமது மதங்கள் கூறியுள்ள உன்னதமான எண்ணங்கள், நம்மை இன்னும் ஆழமாக ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.
பூமியைக் காக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு...
நமது பொதுவான இல்லமான பூமியைக் காக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொரு மதமும் முயற்சிகள் மேற்கொள்வது, நமக்கு நம்பிக்கையை ஊட்டவேண்டும் என்பதையும் தன் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த பூமியைப் பேணிக்காக்கும் கலாச்சாரம், படைப்பின் மீதும், அயலவர் மீதும், நம் மீதும் உண்மையான மதிப்பு கொண்டிருப்பதில் ஆரம்பமாகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மதிப்பு, இறுதியில் நாம் இறைவன் மீது கொண்டுள்ள மதிப்பை ஆழப்படுத்தும் என்பதையும் கூறினார்.
மத நம்பிக்கை அறிவியல் மீதும், அறிவியல் மத நம்பிக்கை மீதும் மதிப்பு கொண்டிருப்பது, நம்மிடையே உண்மையான உரையாடல் நிகழ்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தன் உரையின் வழியே விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுற்றுச்சூழல் நெருக்கடிகளைச் சமாளிக்க...
நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வு, அன்பினால் உந்தப்படுதல் மற்றும் மதிப்பு வழங்க அழைப்பு என்ற மூன்று முக்கிய அம்சங்கள் நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணிக் காக்க தேவையானவை என்று திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத அளவு, நம்மைச் சூழ்ந்திருக்கும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வழிகளை கண்டறிய, COP 26 உச்சி மாநாடு நம்மை அழைக்கிறது என்பதை நினைவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிளாஸ்கோ நகரில் கூடிவரும் அனைவரோடும், மத நம்பிக்கை கொண்ட நாங்கள் அனைவரும் ஆன்மீக அளவில் எங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறோம் என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.