மனித சமுதாயத்தின் மீதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீதும் இளையோர் கொண்டிருக்கும் அக்கறைக்காகவும், வருங்காலத்தில் நல்லவை செய்வதற்கு அவர்கள் கொண்டுள்ள கனவுகள் மற்றும் திட்டங்களுக்காகவும் நன்றிசொல்ல விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, புதனன்று வெளியிட்ட காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார். வரவிருக்கும் ஊடீஞ26 காலநிலை உச்சி மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, ’காலநிலைக்கான இளையோர்’ என்ற மையக்கருத்தைக் கொண்டு இயங்கும் இத்தாலிய இளையோர் குழு, செப்டம்பர் 28 செவ்வாய் முதல் 30 வியாழன் முடிய மிலான் நகரில் மேற்கொண்டிருந்த ஒரு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
COP26 காலநிலை உச்சி மாநாட்டை, இத்தாலி, மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து தலைமையேற்று நடத்துவதை முன்னிட்டு, ‘காலநிலைக்கான இளையோர்: உந்தித்தள்ளும் கொள்கை, இத்தாலி 2021’ என்ற தலைப்பில் இந்த இளையோர் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் இரண்டாம் நாளான புதனன்று, இளையோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளி வடிவில் விடுத்த செய்தியில், சுற்றுச்சூழல் மீதும், மனித சமுதாயத்தின் மீதும் இளையோர் கொண்டுள்ள அக்கறையைப் பாராட்டியுள்ளதோடு, அவர்கள், செயலாற்றுவதற்கு மட்டுமல்ல; மற்றவர்களின் கருத்துக்குச் செவிமடுக்கவும் தயாராக இருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்தரங்கு, நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு கல்வித்திட்டத்தை மையப்படுத்தி நடப்பது, நல்லதோர் அடையாளம் என்று கூறியுள்ள திருத்தந்தை, வருங்காலத்தைக் கட்டியெழுப்ப, தொழில்நுட்பமும், அரசியலும் சார்ந்த திட்டங்கள் மட்டும் போதாது, மாறாக, வருங்காலத்தினரை உருவாக்கும் கல்வித்திட்டங்களும் தேவை என்பதை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
அண்டமனைத்தையும் சார்ந்த நல்லிணக்கமானது, மனிதர்களுக்கிடையிலும், மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கிடையிலும் உருவாகும்போது, நமது முயற்சிகள் பலனளிக்கும் என்பதை, ஒவ்வொரு நாடும், பன்னாட்டு அமைப்புகளும் விரைவில் கண்டுகொள்ளவும், அதற்கு ஏற்றதுபோல், திட்டங்களை உருவாக்கவும் இந்த கருத்தரங்கு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் நாம் பெற்றுள்ள பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில், பேணிக்காக்கும் கலாச்சாரத்தையும், பொறுப்புடன் பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரத்தையும் உருவாக்க, இளையோருடன் இணைந்து, அறிவாற்றல் மிக்க முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை, தன் காணொளிச் செய்தி வழியே விண்ணப்பித்துள்ளார். சுற்றுச்சூழலையும், மனித சமுதாயத்தையும் பேணும் நோக்கத்துடன் இளையோர் மேற்கொண்டுள்ள பல்வேறு பயணங்களில் அவர்களுடன் தான் இணைவதாகவும், அவர்கள் மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளிலும் இறைவனின் ஆசீர் நிறைவாக கிடைக்கவேண்டும் என்றும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.