Namvazhvu
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : இறையருள் இரக்கப் பணிகளை ஆற்ற இட்டுச்செல்கிறது
Friday, 08 Oct 2021 11:00 am
Namvazhvu

Namvazhvu

செப்டம்பர் 29 ஆம் தேதி, புதன்கிழமையன்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை வணக்கம் சொல்லிய பிறகு, இறைமகன் இயேசு மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன் என்று, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதியுள்ள திருமடல் பகுதி (கலா.2,19-20) பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. பின்னர் திருத்தந்தை, இத்தாலிய மொழியில் முதலில் தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, புனித பவுலின் போதனைகளை, நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில், சற்று கடினமான ஆனால், முக்கியமான ஏற்புடைமை பற்றி இன்று சிந்திப்போம். ஏற்புடைமை குறித்த புனித பவுலின் சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு, ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. வழக்கம்போல் அவை முரண்பாடுகளுடனும்கூட முடிவடைந்துள்ளன. புனித பவுல், உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறியிருப்பதுபோன்று, கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலும், ஏற்புடைமை என்பது, கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாக கிடைப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறார். கடவுள் தம் இரக்கத்தால், மன்னிப்பு அளிப்பதற்கு முதற்படி எடுத்துவைப்பதன் விளைவே ஏற்புடைமை என்று எளிமையாகக் கூறலாம். (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண்.1990).

திருத்தூதர் பவுலைப் பொறுத்தவரை, ஏற்புடைமை என்பது, இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பின் வழியாக, கடவுள் தம் இரக்கத்தில், பாவிகளுக்கு மன்னிப்பும், மீட்பும் வழங்க முன்வருவதாகும். திருச்சட்டங்களை கடைப்பிடிப்பதாலும், நம் சொந்த முயற்சிகளாலும் நாம் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதை, புனித பவுல் தமஸ்கு சென்ற பாதையில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த நிகழ்வில் நன்றாகப் புரிந்துகொண்டார். திருச்சட்டம், கடவுளின் தூய கொடையாகவும் (காண்க.உரோ 7:12), கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பது நம் ஆன்மீக வாழ்க்கைக்கு இன்றியமையாததாகவும் இருக்கின்றது. அதேநேரம், அவ்வாழ்க்கைக்கு கிறிஸ்துவில் நமக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள கடவுளின் அருளே முதன்மையும், முக்கியமானதுமாகும். கடவுளின் மீட்பளிக்கும் அன்பின் அனுபவத்தால் பிறந்த நம்பிக்கை, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றவேண்டும். மற்றும், அது, பிறரன்புச் செயல்களில் கனிகளைக் கொணரவேண்டும். இதையே புனித யாக்கோபு, “மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர்” (யாக் 2:24) என்று எழுதியுள்ளார். நாம் ஏற்புடையவராவதில், கடவுளின் நீதி மற்றும், இரக்கம் முன்னுரிமை பெறுகிறது. இவர், அனைவருக்கும் மீட்பளிக்கும் தம் திட்டத்தில் ஒத்துழைக்கும்படி நம்மை அழைக்கின்றார்

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையில், ஏற்புடைமை பற்றிய புனித பவுலின் போதனை குறித்த தன் சிந்தனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவர் மீதும் அவர்களின் குடும்பத்தின் மீதும் ஆண்டவரின் மகிழ்வும் அமைதியும் பொழியப்படுமாறு இறைவனை மன்றாடினார். பின்னர் எல்லாரையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.