பிரான்ஸ் நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக பல அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரால் பாலியல் வழியில் துன்பங்களுக்கு உள்ளானவர்களின் மனக்காயங்களை எண்ணி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார் என்று வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரான்ஸ் நாட்டு தலத்திருஅவையில் கடந்த ஆண்டுகளில் நிலவிவந்த இந்தக் கொடுமையைக் குறித்த முழு விவரங்களை வெளிக்கொணர்வதற்கென்று, அந்நாட்டு ஆயர் பேரவையும், அந்நாட்டு இருபால் துறவியர் பேரவையும், சுதந்திரமாக செயலாற்றக்கூடிய ஒரு தனிப்பட்ட நிறுவனத்திடம் இப்பணியை 2018ம் ஆண்டு ஒப்படைத்தன.
CIASE என்றறியப்படும் இந்த நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள், 2,500 பக்க அறிக்கையாக, அக்டோபர் 5 செவ்வாயன்று வெளியாயின. இந்த அறிக்கையின்படி, பிரான்ஸ் தலத்திருஅவையில், 1950க்கும், 2020க்கும் இடைப்பட்ட 70 ஆண்டுகளில், 2,900த்திற்கும், 3,200க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரால், 3,30,000 பேர் பாலியல் வழியில் துன்பத்திற்கு உள்ளாயினர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முடிவுகளைக் கேள்வியுற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டோரை நோக்கி தன் எண்ணங்களும் செபங்களும் திரும்புவதாகக் கூறியதுடன், இவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மீது இன்னும் நம்பிக்கை கொண்டு, தங்கள் உள்ளத்தின் வேதனைகளை வெளிக்கொணர்ந்ததற்காக தன் நன்றியையும் வெளியிட்டார் என்று வத்திக்கான் செய்தித்துறை தலைவர், புரூனி அவர்கள் கூறினார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு தலத்திருஅவையில், குணமாக்கும் புதுமையை ஆற்றவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் இறைவன் வழிவகுக்க தான் செபிப்பதாக திருத்தந்தை கூறியுள்ளதாக புரூனி அவர்கள் தெரிவித்தார். இந்த அறிக்கையின் எதிரொலியாக, அக்டோபர் 6 புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரையை வழங்குவதற்கு முன், இவ்வுரையில் கலந்துகொள்ள வந்திருந்த பிரெஞ்சு நாட்டு ஆயர்கள் சிலருடன் இணைந்து, பாலியல் முறைகேடுகளால் துன்புற்றோரை எண்ணி, அமைதியாக இறைவேண்டல் செய்தார்.
பிரான்ஸ் நாட்டின் அரசுப்பணியில் முன்னர் பணியாற்றிய Jean-Marc Sauve அவர்களின் தலைமையில், CIASE நிறுவனம், 21 பேர் கொண்ட குழுவினருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை அக்டோபர் 5 செவ்வாயன்று, பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Eric de Moulins-Beaufort அவர்களிடமும், இருபால் துறவியர் பேரவையின் தலைவரான அருள் சகோதரி Veronique Margron அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Sauve அவர்கள் இந்த அறிக்கையுடன், 45 பரிந்துரைகளையும் சமர்ப்பித்த வேளையில், கத்தோலிக்கத் திருஅவையின் மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் நிலைநாட்டப்படுவதற்கு, இந்த பரிந்துரைகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்வு, KTO என்றழைக்கப்படும் பிரெஞ்சு கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனத்தால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.