பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவது, எட்டாத கற்பனைபோல் தோன்றலாம் என்று குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடத்துறையின் பொறுப்பாளரான கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், உக்ரைன் நாட்டின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் வழங்கிய உரையில் கூறினார்.
"மனித குடிபெயர்வு, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில், அக்டோபர் 5 செவ்வாயன்று, உக்ரைன் நாட்டின் Lviv நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பேசிய கர்தினால் செர்னி அவர்கள், முன்னேற்றத்திற்கும், மக்களின் குடிபெயர்வுக்கும் உள்ள தொடர்பைக் குறித்துப் பேசினார்.
முன்னேற்றம் அடைவது, மனிதர் ஒவ்வொருவரின் ஆழ்மன விருப்பம் என்றும், அந்த விருப்பத்தை தங்கள் சொந்த நாட்டில் அடையமுடியாதவர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்வது இயல்பான ஒரு விளைவு என்றும் கூறிய கர்தினால் செர்னி அவர்கள், குடிபெயர்வோரையும், புலம்பெயர்வோரையும் ஆபத்தானவர்களாக வேற்று நாட்டினர் உணர்வது, வேதனை தரும் ஒரு போக்கு என்பதை சுட்டிக்காட்டினார்.
உலகமயமாக்கல் என்ற உண்மை பரவிவரும் இக்காலத்தில், மக்களின் வாழ்வு நிலை தாழ்வதும் மிக வேகமாகப் பரவியுள்ளது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் செர்னி அவர்கள், மக்களின் வாழ்வு நிலையை உயர்த்தாமல், உலகமயமாக்கலை மட்டும் வளர்க்க விரும்பும் வர்த்தக உலகின் போக்கு அர்த்தமற்றது என்று கூறினார்.
குடிபெயர்தல், புலம்பெயர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி, கத்தோலிக்கத் திருஅவை, தன் வரலாற்றில், பல்வேறு சமுதாயப் படிப்பினைகளை முன்வைத்துள்ளது என்பதை எடுத்துரைத்த கர்தினால் செர்னி அவர்கள், இந்தப் பாரம்பரியத்தின் அண்மைய வெளிப்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'Fratelli tutti' திருமடல் உள்ளது என்பதை நினைவுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளில், உக்ரைன் நாடு அதிக அளவில் குடிபெயர்வை சந்தித்த ஒரு நாடாக உள்ளது என்பதை குறிப்பிட்ட கர்தினால் செர்னி அவர்கள், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடி என்றும், இவர்கள், வெளிநாட்டிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணம், அந்நாட்டின் மொத்த வருமானத்தில் 10 விழுக்காடு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
முழு மனித முன்னேற்றம், 'Fratelli tutti' திருமடலின் கருத்துக்கள், அரசியல் ஈடுபாடு, சமுதாய உரையாடலும் நட்பும், உக்ரைன் நாட்டுக்குத் தேவைப்படும் சிந்தனைகள் என்ற பல பகுதிகளாக கர்தினால் மைக்கில் செர்னி அவர்களின் உரை வழங்கப்பட்டது.