கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையே நிலவும் வேறுபட்ட பாரம்பரியங்கள் ஒன்றையொன்று கட்டியெழுப்பும் செறிவுமிக்க பாரம்பரியங்கள் என்றும், இந்த வேறுபாட்டை மதித்து, இவ்விரு பாரம்பரியங்களுக்கும் இடையே நிலவும் இணைப்பு மேற்கொள்ளப்படுவது, தனக்கு மகிழ்வளிக்கிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் குழுவினரிடம் கூறினார்.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியங்களின் இணைப்பைக் குறித்து சிந்திக்க உருவாக்கப்பட்டுள்ள புனித இரேனியுஸ் ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்க இணைப்பு செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 30 உறுப்பினர்களை, அக்டோபர் 7 வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்த இணைப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர், தங்களை ஒரு சங்கம் என்றோ, அவை என்றோ அழைக்காமல், செயல்பாட்டுக் குழு என்று அழைப்பதை தான் அதிகம் விரும்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழை நாட்டில் தோன்றி, மேற்கத்திய நாடுகளில் பணியாற்றிய புனித இரேனியுஸ், இக்குழுவின் பாதுகாவலராக இருப்பது பொருத்தமாக உள்ளது என்று கூறினார்.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் அவைகளில், முதன்மைத்துவம், மற்றும் ஒருங்கிணைந்த தன்மை என்ற இரு நிலைகளைக் குறித்து இந்த செயல்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டுவரும் ஆய்வுகளுக்காக திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார். உரோம் நகரில் உள்ள ஆஞ்செலிக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தில் இந்த செயல்பாட்டுக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்புக்கள், பலனுள்ள அனுபவமாக அமையவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டு, திருத்தந்தை, தன் உரையை நிறைவுசெய்தார்.