Namvazhvu
குடந்தை ஞானி CEAMA என்ற பெயரில், அமேசான் ஆயர் பேரவை உருவாக்கம்
Friday, 22 Oct 2021 04:57 am
Namvazhvu

Namvazhvu

அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர்களுக்கென, CEAMA என்ற பெயரில், அமேசான் ஆயர் பேரவையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியதையடுத்து, இலத்தீன் அமெரிக்க ஆயர்களும், கரீபியன் ஆயர்களும் தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளனர்.

CEAMA என்ற பெயரில், திருத்தந்தை, அமேசான் ஆயர் பேரவையை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளார் என்று, ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள், இந்தப் புதிய ஆயர் பேரவையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் Claudio Hummes அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமேசான் மழைக்காடுகள் பகுதியில் பணியாற்றுவோரை ஒருங்கிணைத்து, 2019ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு, அமேசான் ஆயர் பேரவையை நிறுவும் திட்டங்கள் ஆரம்பமாகி, தற்போது இப்பேரவை, அதிகாரப்பூர்வமாக செயலாற்றத் துவங்கியுள்ளது.

இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டமைப்பான CELAM, திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள நன்றி மடலில், தற்போது துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பு காலத்தில், அமேசான் ஆயர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் பொருள் நிறைந்த முடிவு என்றும், இதனால், அப்பகுதி மக்கள் இனிவரும் ஆயர் மாமன்றங்களில் இன்னும் ஆழமான முறையில் பங்கேற்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.