திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் பரிந்துரையை வேண்டியதால், அர்ஜென்டீனா நாட்டில், சிறுமி ஒருவர் முற்றிலும் குணமடைந்த நிகழ்வு, புதுமையென ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, வணக்கத்துக்குரிய இறையடியார் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 13 புதனன்று இசைவளித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன், அர்ஜென்டீனா நாட்டில், நரம்பு தொடர்பான நோயினால், இறக்கும் நிலையில் இருந்த பத்து வயது சிறுமிக்காக, அவரது பங்கு அருள்பணியாளர், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் பரிந்துரையை வேண்டியதன் பயனாக, அச்சிறுமி நலமடைந்த புதுமையின் விவரங்களை, புனித பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.
1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இத்தாலியின் Forno di Canale என்ற ஊரில் பிறந்த அல்பீனோ லூச்சியானி அவர்கள், 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி, அவரது 66வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இவரது தந்தை, ஓர் எளிய தொழிலாளியாக சுவிட்சர்லாந்து நாட்டில் பணிபுரிந்துவந்த வேளையில், இளையவர் அல்பீனோ லூச்சியானி அவர்கள், அருள்பணித்துவ பயிற்சிக்கு செல்ல விழைவதை அறிந்த வேளையில், இவரது தந்தை அவருக்கு, "நீ ஒரு அருள்பணியாளராக இருக்கும்போது, வறியோர் பக்கமே இருக்கவேண்டும், ஏனெனில் இயேசு அவர்கள் பக்கமே இருந்தார்" என்று எழுதி அனுப்பிய ஒரு மடலை, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தன்னுடன், இறுதிவரை வைத்திருந்தார்.
1935ம் ஆண்டு, அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்ற அல்பீனோ லூச்சியானி அவர்களை, 1958ம் ஆண்டு, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்தில், Vittorio Venetoவின் ஆயராக நியமித்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் முழுமையாகப் பங்கேற்ற ஆயர் லூச்சியானி அவர்களை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டு வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாக நியமித்து, 1973ம் ஆண்டு அவரை கர்தினாலாக உயர்த்தினார்.
"தாழ்ச்சி" என்ற ஒரு சொல்லை, தன் ஆயர் பணியின் விருதுவாக்காக தெரிவு செய்திருந்த கர்தினால் லூச்சியானி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் தொடர்ந்துவந்த நாள்களில் வெனிஸ் உயர் மறைமாவட்டத்தில் பல சவால்கள் நிறைந்த சூழல்களைச் சந்தித்து, திறமையுடன் மறைமாவட்டத்தை வழிநடத்திச் சென்றார்.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, கிறிஸ்து தோற்றமாற்றம் பெற்ற திருநாளன்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் இறையடி சேர்ந்ததையடுத்து, ஆகஸ்ட் 26ம் தேதி கூடிய கர்தினால்கள் அவை, ஒரே நாளில், கர்தினால் லூச்சியானி அவர்களை, திருத்தந்தையாக தெரிவு செய்தது.
திருஅவை வரலாற்றிலேயே முதல்முறையாக திருத்தந்தை ஒருவர், இரண்டு பெயர்களை இணைத்து ‘யோவான் பவுல்’ என்பதை, தன் பெயராகத் தெரிவு செய்தார்.
'புன்னகைக்கும் திருத்தந்தை' என்ற பெயரைப் பெற்ற முதலாம் யோவான் பவுல் அவர்கள், அதுவரை திருத்தந்தையர் தங்கள் உரைகளில் பயன்படுத்தி வந்த 'நாம்' என்ற சொல்லை விட்டுவிட்டு, 'நான்' என்று தன்னைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
திருஅவை வரலாற்றில் மிகக் குறுகியகாலம் பணியாற்றிய திருத்தந்தையர் வரிசையில், 33 நாள்கள் மட்டுமே திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் யோவான் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.